விரைவில் திரைக்கு வரவுள்ள ‘டெக்சாஸ் டைகர்’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை உலகின் முன்னணி இசை நிறுவனங்களில் ஒன்றான சோனி மியூசிக் கைப்பற்றியுள்ளது. படத்தின் வெளியீட்டு பயணத்தில் இது முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.
உலகளாவிய அளவில் இசைத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் சோனி மியூசிக், ‘டெக்சாஸ் டைகர்’ படத்துடன் கைகோர்த்திருப்பது திரையுலக வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. படத்தின் உள்ளடக்கம், இசை மற்றும் வணிக ரீதியான சாத்தியக்கூறுகள் மீது இந்த ஒப்பந்தம் மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சோனி மியூசிக்கின் உலகளாவிய விநியோக வலையமைப்பும், வலுவான விளம்பர உத்திகளும் படத்தின் பாடல்களை பரவலாக ரசிகர்களிடம் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் திரைப்படம் திரையரங்கு வெளியீட்டிற்கு முன்பே அதிக கவனத்தை ஈர்க்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இயக்குநர் செல்வகுமார் திருமாறன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்தும் சோனி மியூசிக் இசை உரிமம் குறித்தும் படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் கூறியதாவது,
“படப்பிடிப்பு நிறைவடைந்தது மகிழ்ச்சி. இதோடு இரட்டிப்பு மகிழ்ச்சியாக ’டெக்சாஸ் டைகர்’ படத்துடன் சோனி மியூசிக் இணைந்திருப்பது எங்களுக்கு பெருமையான தருணம். இசை உலகில் மறக்க முடியாத பல இசைத் தொகுப்புகள் மற்றும் புகழ்பெற்ற படைப்புகளின் இல்லமாக சோனி மியூசிக் திகழ்கிறது. அத்தகைய மதிப்புமிக்க சர்வதேச நிறுவனத்துடன் எங்கள் படம் இணைந்திருப்பது மிகவும் சிறப்பான ஒன்று. எங்கள் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் இந்தப் படத்திற்காக செலுத்திய உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கைக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த கூட்டணியை பார்க்கிறோம். வரும் மாதங்களில் ரசிகர்கள் டெக்சாஸ் டைகரின் இசையையும் அதன் உலகத்தையும் ரசிப்பதை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம்” என்றார்.
பொழுதுபோக்கு, உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் விறுவிறுப்பான கதையம்சம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அனைத்து வயதினரையும் கவரும் வகையில் ‘டெக்சாஸ் டைகர்’ திரைப்படம் உருவாகி வருகிறது.
படத்தின் இசை வெளியீடு, டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.






