பான் இந்திய அளவில் பல வெற்றிப் படங்களை வழங்கி வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தற்போது உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையம்சத்துடன் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்கத் தயாராகி வருகிறது. அப்பா – மகள் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், உறவுகள், உணர்வுகள் மற்றும் ஆன்மிக மாற்றத்தின் பயணத்தை பேசும் படைப்பாக உருவாகியுள்ளது.
நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தலைமையிலான மைத்ரி மூவி மேக்கர்ஸ், ‘புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வரிசையில் தற்போது ‘இருமுடி கட்டு’ திரைப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தின் மூலம் நடிகர் ரவி தேஜா தனது வழக்கமான மாஸ் ஹீரோ இமேஜிலிருந்து விலகி, வித்தியாசமான மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான விஷுவல் கிளிம்ப்ஸ் வீடியோவில், மகளை உயிராக நேசிக்கும் அன்பான தந்தையாகவும், கோபம் நிறைந்த மனிதராகவும், பின்னர் தனது மகளின் வேண்டுகோளுக்காக மது பழக்கத்தை கைவிட்டு பகவான் ஐயப்பனின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் ஆன்மிக மனிதராகவும் ரவி தேஜா தோன்றியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் ‘இருமுடி கட்டு’, ரவி தேஜாவின் முதல் இருமொழி திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழிலும் ரவி தேஜாவுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருப்பதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பகவான் ஐயப்பனின் ஆன்மிகப் பின்னணியில் உருவாகும் இப்படம், குடும்ப உறவுகள், தனிமனித மாற்றம் மற்றும் மனித வாழ்வின் உணர்ச்சி பரிமாணங்களை மையமாகக் கொண்டுள்ளது. மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளுக்கு பதிலாக, இயல்பான கதாபாத்திரங்கள், மனதைத் தொடும் தருணங்கள் மற்றும் உணர்வுபூர்வமான திரைக்கதை மூலம் ரசிகர்களை கவரும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘இருமுடி கட்டு’ என்ற தலைப்பே படத்தின் மையக் கருத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. பகவான் ஐயப்பனுடன் தொடர்புடைய பக்தி மற்றும் ஆன்மிக உணர்வை வெளிப்படுத்துவதோடு, ஒரு மனிதனின் உள்மாற்றம் மற்றும் வாழ்க்கைப் பயணத்தையும் இந்த தலைப்பு குறிக்கிறது.
உணர்வுகளும், ஆன்மிகமும், குடும்ப உறவுகளும் இணையும் இந்த திரைப்படம் ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.






