“லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” திரை விமர்சனம்

“லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” தயாள் பத்மநாபன் இயக்கத்தில் K.V. சபரீஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை டர்புக சிவா. இந்த படத்தில் வெற்றி சட்லி, ரங்கராஜ் பாண்டே, சேலம் சரவணன், லொள்ளு சபா மாறன்,  லிஸி ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

1944-ஆம் ஆண்டு சென்னை நகரை பரபரப்புக்குள்ளாக்கிய சி.என். லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்குடன் இந்த திரைப்படத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை. கவனத்தை ஈர்க்கும் வகையில் அந்த தலைப்பை பயன்படுத்தியுள்ள இயக்குநர் தயாள் பத்மநாபன், அதன் பின்னணியில் மிகவும் முக்கியமான சமூகக் கேள்வியை முன்வைக்கிறார். குறிப்பாக, மரண தண்டனையும் ஒரு வகையான கொலையா? என்ற விவாதத்தை திரைக்கதையின் மையமாக மாற்றியிருக்கிறார்.

கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் வறுமையில் சிக்கித் தவிக்கும் இளைஞனாக வெற்றி நடித்துள்ளார். வாழ்க்கைச் சூழ்நிலை காரணமாக திருட்டை தொழிலாக மாற்றிக் கொள்கிறார். எதிர்பாராத சம்பவம் ஒன்றால் கொலை வழக்கில் சிக்கி, நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்படுகிறார். தனது குற்றத்திற்கான தண்டனையை ஏற்றுக்கொண்டாலும், தனது வாழ்க்கைச் சூழலைப் பொருட்படுத்தாமல் வழங்கப்பட்ட தீர்ப்பு உண்மையான நீதியா என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார். அந்தக் கேள்விக்கான பதிலே படத்தின் மையக் கருத்தாக மாறுகிறது.

நாயகனாக நடித்துள்ள வெற்றி, வழக்கம்போல இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். அதிகப்படியான உணர்ச்சி வெளிப்பாடுகள் இன்றி, அளவான நடிப்பு மற்றும் தெளிவான வசன உச்சரிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்தின் வலியை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறார். குறிப்பாக நீதி குறித்து பேசும் காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் பெறுகிறது.

கதாநாயகியாக நடித்துள்ள பிரிகிடா சாகா, கிராமத்து பெண் கதாபாத்திரத்திற்கு முழுமையாக பொருந்தவில்லை என்றாலும், இயல்பான நடிப்பின் மூலம் அந்த குறையை சமாளிக்க முயற்சித்திருக்கிறார்.

சிறை அதிகாரியாக வரும் ரங்கராஜ் பாண்டே, கதாநாயகனின் வாதங்களுக்கு எதிராக நிற்கும் கதாபாத்திரத்தில் கம்பீரமான நடிப்பை வழங்கியுள்ளார். விவாதக் காட்சிகளில் அவரது வசன உச்சரிப்பும், கட்டுப்பாடான நடிப்பும் கதையின் தீவிரத்தை அதிகரிக்கிறது.

மாறன், லிஸி ஆண்டனி, கவிதா பாரதி, சுப்பிரமணியம் சிவா, கன்யா பாரதி, அருவி மதன் உள்ளிட்டோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தி, படத்தின் எதார்த்தத்தை உயர்த்தியுள்ளனர்.

எம்.வி. பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு படத்தின் இயல்பான தோற்றத்திற்கு பெரும் பங்காற்றுகிறது. செயற்கை வெளிச்சங்களைத் தவிர்த்து இயற்கை ஒளியை அதிகம் பயன்படுத்தியிருப்பது காட்சிகளுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. சில இடங்களில் பயன்படுத்தப்பட்ட ஏஐ காட்சிகளும் கதையின் ஓட்டத்துடன் இணைந்தே பயணிக்கின்றன.

தர்புகா சிவாவின் இசை, கதையின் உணர்வுகளுக்கு ஏற்ப அமைதியாகவும், தேவையான தருணங்களில் தீவிரமாகவும் பயணிக்கிறது. பாடல்களும் கதையின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. பின்னணி இசை பல இடங்களில் மெளனத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்கள் உணரச் செய்கிறது.

பூபதி வேதகிரியின் படத்தொகுப்பு, வசனங்கள் அதிகம் இடம்பெறும் படமாக இருந்தாலும் சலிப்பை ஏற்படுத்தாமல் திரைக்கதையை நகர்த்துகிறது. ஒவ்வொரு விவாதக் காட்சியும் அடுத்த கட்டத்திற்கு ஆர்வத்தை உருவாக்கும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.

கவிதா பாரதி மற்றும் தயாள் பத்மநாபன் இணைந்து எழுதிய திரைக்கதை, எளிய கதையை ஆழமான சமூக விவாதமாக மாற்றுகிறது. வசனங்கள் பல இடங்களில் சிந்திக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் கைதட்டலையும் பெறுகின்றன.

எழுத்தாளரும் இயக்குநருமான தயாள் பத்மநாபன், மரண தண்டனை குறித்த தனது கருத்தை பிரச்சாரமாக இல்லாமல், மனித உணர்வுகளின் வழியாக முன்வைத்திருக்கிறார். குற்றவாளியின் செயலை நியாயப்படுத்தாமல், அவனை அந்த நிலைக்கு தள்ளிய சூழலை ஆராய வேண்டும் என்பதையும், உயிரை பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்பதையும் வலியுறுத்தும் வகையில் படத்தை வடிவமைத்துள்ளார்.

“லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” படத்திற்கு மதிப்பீடு 3.5/5

சிந்திக்க வைக்கும் நீதிமன்ற நாடகம்