“நூறுசாமி டி” சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் – மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை பாலாஜி ஸ்ரீராம். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா விஜய், அஜய் திஷன் காவ்யா அனில், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இளம் வயதிலேயே கணவரை இழந்த ஸ்வாசிகா, தனது இரண்டு மகன்களும் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் காலத்தில் மறுமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்துகிறார். ஆனால், அவரது மூத்த மகன் அஜய் திஷான் அந்த முடிவை கடுமையாக எதிர்ப்பதால் ஸ்வாசிகா மனவேதனையடைகிறார்.
காலம் கடந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தாயின் உணர்வுகளையும் விருப்பத்தையும் புரிந்துகொள்ளும் அஜய் திஷான், அவருக்கு மறுமணம் செய்து வைக்க முன்வருகிறார். அவரது தம்பியும் இந்த முடிவுக்கு துணை நிற்க, இருவரும் சேர்ந்து தாயின் வாழ்க்கைக்கு புதிய தொடக்கத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். ஆனால் உறவினர்களும், கிராம மக்களும் அவர்களது முயற்சிக்கு எதிராக நிற்கின்றனர். இந்த சமூக எதிர்ப்புகளை தாண்டி அவர்கள் தங்கள் நோக்கத்தில் வெற்றி பெற்றார்களா என்பதே “நூறுசாமி” படத்தின் கதை.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தின் மூலம், இன்றும் பெண்களின் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் வாழ்க்கைத் தேர்வுகளுக்கு தடையாக இருக்கும் சமூக மனப்போக்குகளை இயக்குநர் சசி கேள்விக்குட்படுத்தியிருக்கிறார். சமூகத்தில் நிலவும் பழமையான எண்ணங்களுக்கு எதிராக வலுவான கருத்தை பதிவு செய்யும் படைப்பாக இது அமைந்துள்ளது.
செல்வி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்வாசிகா, தனது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால் பார்வையாளர்களை ஈர்க்கிறார். மறுமணம் குறித்த தனது விருப்பத்தை வெளிப்படுத்தும் தருணம், மகனின் எதிர்ப்பால் மனம் உடையும் காட்சி, பின்னர் மகன்களை பிரிய வேண்டிய சூழ்நிலையால் துயரப்படும் தருணங்கள் என பல உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தி படத்தின் முக்கிய பலமாக திகழ்கிறார்.
சிறப்பு தோற்றத்தில் வரும் விஜய் ஆண்டனி, குறுகிய நேரம் மட்டுமே திரையில் தோன்றினாலும், தனது கம்பீரமான நடிப்பாலும் சில முக்கியமான வசனங்களாலும் கவனம் ஈர்க்கிறார்.
மகன்களாக நடித்துள்ள அஜய் திஷான் மற்றும் சக்தி, அவர்களுடன் பாடினி குமார், காவ்யா அனில், கருணாஸ், லிஜோமோல், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி உள்ளிட்ட அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு முழுமையான நியாயம் செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் எஸ்.பி. தர்ஷன் கிர்லோஷின் காட்சியமைப்புகள் கதையின் யதார்த்தத் தன்மையை அதிகரிக்கின்றன. பாலாஜி ஸ்ரீராமின் பின்னணி இசை உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகிறது. ஹரிஷ் யுவராஜின் படத்தொகுப்பும், கலை இயக்குநர் வி. சசிகுமாரின் பங்களிப்பும் படத்தின் தரத்தை உயர்த்துகின்றன.
உண்மை சம்பவத்தை திரைப்பட வடிவத்தில் சுவாரஸ்யமாகவும் உணர்ச்சிகரமாகவும் மாற்றியிருக்கும் இயக்குநர் சசி, வயது வந்த பிள்ளைகள் இருக்கும் குடும்பங்களில் நடைபெறும் மறுமணங்கள் குறித்த சமூக பார்வையை மாற்ற முயற்சித்திருக்கிறார். குறிப்பாக, இப்படத்தின் திரைக்கதையும் காட்சிகளும் அந்த கருத்தை பார்வையாளர்களிடம் வலுவாக கொண்டு சேர்க்கின்றன.
முதல் பாதியில் அதிகமான உரையாடல்கள் மற்றும் சோகமான சூழல் காரணமாக சிறிது மெதுவாக நகரும் படம், இரண்டாம் பாதியில் உணர்ச்சிகரமான காட்சிகள், கதாபாத்திரங்களின் சிறப்பான நடிப்பு மற்றும் நகைச்சுவையுடன் அமைக்கப்பட்ட கிளைமாக்ஸ் மூலம் அந்த குறைகளை மறக்கச் செய்கிறது.
மொத்தத்தில், சமூகத்தில் இன்னும் பேசப்பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயத்தை மனதை தொடும் வகையில் பதிவு செய்திருக்கும் விதம் பாராட்டத்தக்க படைப்பு இது.
“நூறுசாமி” படத்திற்கு மதிப்பீடு 3.5/5
உணர்வுகளும் சமூகக் கருத்தும் நிறைந்த குடும்பப் படம்.





