“தாய்நிலம்” அபிலாஷ் ஜி. தேவன் இயக்கத்தில் நேனி என்டர்டைன்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் / அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஔசேப்பச்சன். இந்த படத்தில் டாக்டர் அமர் ராமச்சந்திரன், நேஹா அமர், பாலா சிங், நிமிஷா நம்பியார், தீபக் பிரபாகர், பத்மஜா அமர், நிஹால் அமர், குருதக்ஷிணா, தளபதி ஆனந்த், சரவணன் சொக்கம்பட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
2008-ம் ஆண்டு, தமிழ் ஈழத்தில் இறுதிக்கட்டப் போர் தீவிரமடைந்த காலகட்டத்தில் கதை தொடங்குகிறது. போரில் தனது மனைவியைப் பறிகொடுத்த அமர் ராமச்சந்திரன், அடுத்ததாகத் தனது மகளுக்கும் ஏதாவது நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் தவிக்கிறார். மகளை இழந்துவிடக் கூடாது என்ற பயம் ஒருபுறம், தான் உயிரிழந்துவிட்டால் மகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுவாளே என்ற கவலை மறுபுறம் என மனவேதனையில் இருக்கும் அவர், மகளைத் தமிழகத்தில் வசிக்கும் மனைவியின் உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார். போர் முடிந்து தாய்நாட்டில் அமைதி திரும்பியதும், உயிருடன் இருந்தால் மீண்டும் மகளை அழைத்துச் செல்லலாம் என்று எண்ணுகிறார்.
இதையடுத்து, பல்வேறு ஆபத்துகளையும் தடைகளையும் கடந்து கடல் வழியாகத் தனது மகளுடன் தமிழகத்திற்கு வருகிறார் அமர் ராமச்சந்திரன். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி மனைவியின் உறவினர்களிடம் மகளை ஒப்படைக்க முடியாமல் போகிறது. செய்வதறியாது சாலையோர வாழ்க்கைக்குத் தள்ளப்படும் அவருக்கு, அங்குள்ள சில மனிதர்கள் உதவிக்கரம் நீட்டுகிறார்கள். அந்த உதவிகளின் துணையுடன் மகளுக்கு பாதுகாப்பான வாழ்க்கையையும் நல்ல எதிர்காலத்தையும் அமைத்துக் கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை அவருக்குள் உருவாகிறது. ஆனால், அந்த நம்பிக்கை நிறைவேறுவதற்குள் எதிர்பாராத சூழல் அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. எதை நினைத்து அஞ்சினாரோ, அதுவே நிகழ்ந்துவிடும் துயரத்தை உணர்வுப்பூர்வமாகச் சொல்வதே “தாய்நிலம்” திரைப்படத்தின் கதை.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை, ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்கள் மற்றும் போரின் கொடூரங்கள் குறித்து பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில், போரினால் பெற்றோர்களைப் பிரிந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படும் குழந்தைகளின் துயரத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது. குறிப்பாக, குழந்தைகளின் அச்சம், பாதுகாப்பற்ற வாழ்க்கை மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றைக் காட்சிகளின் வழியே வெளிப்படுத்தியிருப்பது மனதைப் பாதிக்கிறது.
ஈழத்தில் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் வாழ்க்கை எத்தகைய துயரங்களைச் சந்திக்கிறது என்பதையும் இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவன் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். போரின் பின்னணியில் நிகழும் உயிரிழப்புகளை மட்டும் பேசாமல், அதன் தாக்கம் அடுத்த தலைமுறையின் வாழ்க்கையை எவ்வாறு சிதைக்கிறது என்பதையும் சிந்திக்க வைக்கிறார். குறிப்பாக, படத்தின் இறுதிக்காட்சிகள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கேள்விகளைப் பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதியச் செய்கின்றன.
நாயகனாக நடித்திருக்கும் அமர் ராமச்சந்திரன், போரினால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தையின் மனநிலையைத் தனது நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். முகபாவனைகளிலும் கண்களின் வழியாக வெளிப்படும் வலியிலும், தனது மகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பிலும் கதாபாத்திரத்தின் உணர்வுகளை இயல்பாகக் கடத்தியிருக்கிறார். ஒரு நிமிடம் கூட நிம்மதியாக வாழ முடியாத போர்ச்சூழலில் சிக்கிய மனிதனின் அச்சத்தையும் இயலாமையையும் பார்வையாளர்கள் உணரும்படி நடித்திருக்கிறார்.
அவரது மகள் தமிழனியாக நடித்திருக்கும் நேஹா அமர், அதிகமான வசனங்கள் இல்லாமலேயே தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அச்சம் நிறைந்த கண்களும், சோர்வடைந்த முகமும், அமைதியான உடல்மொழியும் போரினால் குழந்தைகள் அனுபவிக்கும் துயரத்தை நம் கண்முன் நிறுத்துகின்றன. அவரது நடிப்பு பல இடங்களில் மனதை உருக்குகிறது.
அகதிகளாக வருபவர்களைப் பிற மனிதர்களாகவே பார்க்க வேண்டும் என்ற மனிதநேயத்தை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் பாலா சிங் நடித்திருக்கிறார். ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்களுக்குள் நம்பிக்கையை ஏற்படுத்தும் மனிதராக அவர் சிறப்பாகத் திகழ்கிறார். தமிழகத்திற்கு நம்பிக்கையுடன் வரும் ஈழத் தமிழர்களுக்கு ஆறுதலாக அமையும் அவரது கதாபாத்திரம் படத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது.
கடலில் தத்தளிப்பவர்களைக் காப்பாற்றும் மீனவர்கள், அகதி முகாமுக்குச் செல்ல விரும்பாதவரின் சூழலைப் புரிந்துகொள்ளும் காவல் ஆய்வாளர், உதவி செய்ய முன்வரும் ஆட்டோ ஓட்டுநர்கள் எனப் படத்தில் வரும் பல கதாபாத்திரங்களும் மனிதநேயத்தின் வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்துகின்றன. தோற்றத்தில் அச்சத்தை ஏற்படுத்தினாலும் உதவும் மனம் கொண்ட மனிதர், சட்ட விதிமுறைகளைத் தாண்டியும் மனிதாபிமானத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பள்ளித் தலைமை ஆசிரியர் எனச் சிறிய கதாபாத்திரங்கள்கூட கதையின் உணர்வுப்பூர்வமான பயணத்திற்கு உறுதுணையாக இருக்கின்றன. இக்கதாபாத்திரங்கள் மூலம், நெருக்கடியான சூழலிலும் மனிதநேயம் முற்றிலும் மறைந்துவிடுவதில்லை என்பதை இயக்குநர் உணர்த்துகிறார்.
ஒளிப்பதிவாளர் பிரசாந்த் பிரணவத்தின் பணி எளிமையாக இருந்தாலும், கதையின் உணர்வுகளைப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. போரின் பின்னணியில் உருவாகும் பதற்றம், அகதிகளின் வாழ்வியல் மற்றும் கதாபாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்தும் காட்சிகள் இயல்பாக அமைந்துள்ளன. குறிப்பாக, படத்தின் இறுதியில் சிறுமி முகத்தில் பவுடர் பூசிக்கொண்டு கண்ணீருடன் நடந்து செல்லும் காட்சி மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒட்டுமொத்தப் படமும் சொல்ல விரும்பும் வலியை அந்த ஒரு காட்சி வலிமையாக வெளிப்படுத்துகிறது.
அவுசேப்பச்சனின் இசை படத்தின் உணர்வுப்பூர்வமான பயணத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. கதாபாத்திரங்களின் துயரத்தை வசனங்கள் வழியாக மட்டுமல்லாமல், பின்னணி இசையின் மூலமாகவும் உணரச் செய்திருக்கிறார். அளவான இசையமைப்பு காட்சிகளின் இயல்புத்தன்மையைப் பாதுகாப்பதோடு, அவற்றின் உணர்ச்சித் தாக்கத்தையும் அதிகரிக்கிறது.
படத்தொகுப்பாளர் டீஜோ பி. வர்க்கீஸ், கதையை அவசரப்படுத்தாமல் அதன் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து காட்சிகளை அமைத்திருக்கிறார். சில இடங்களில் காட்சிகளின் நகர்வு மெதுவாக இருந்தாலும், கதையின் மையக் கருத்தையும் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் வலியையும் பார்வையாளர்கள் உள்வாங்குவதற்கு இந்த அணுகுமுறை உதவுகிறது. இருப்பினும், சில பகுதிகளை இன்னும் சுருக்கமாக அமைத்திருந்தால் படத்தின் வேகம் மேம்பட்டிருக்கும்.
கதை எழுதி இயக்கியிருக்கும் அபிலாஷ் ஜி. தேவன், ஈழப் போரினால் குடும்பங்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் துயரத்தை மையமாகக் கொண்டு உணர்வுப்பூர்வமான படைப்பை உருவாக்கியிருக்கிறார். போரின் கொடூரங்களைப் பெரிய அளவிலான காட்சிகளால் விவரிப்பதற்குப் பதிலாக, ஒரு தந்தையும் மகளும் எதிர்கொள்ளும் அச்சம், பிரிவு மற்றும் பாதுகாப்பற்ற வாழ்க்கையின் மூலம் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தில் சில காட்சியமைப்புகள், கதாபாத்திரங்களின் வெளிப்பாடுகள் மற்றும் பின்னணித் தொடர்புகளில் சிறிய குறைகள் தென்பட்டாலும், அவை படத்தின் மைய நோக்கத்தைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. குறிப்பாக, இறுதிக்காட்சியின் மூலம் போர் முடிந்த பின்னரும் அதன் பாதிப்புகளைச் சுமந்துகொண்டு வாழ வேண்டிய குழந்தைகளின் நிலையை இயக்குநர் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.





