“ஆல் பாஸ்” திரை விமர்சனம்

“ஆல் பாஸ்” மைதீன் பாக்கீர் இயக்கத்தில் மோகனா ஆர் – ஒன் ஸ்டெப் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜேம்ஸ் வசந்தன். இந்த படத்தில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ஜனனி குணசீலன், ரோஷன் பஷீர், பிரசன்னா பாலச்சந்திரன், மதன் குமார் தக்ஷிணாமூர்த்தி, வி. ஜெயபிரகாஷ், செந்தில் குமாரி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு அண்ணன், தம்பிகளுக்குள் கூட கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு உறவுகள் சிதறிவிடும் சூழலில், வட சென்னையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் ஆகிய மூவரும் சொந்த சகோதரர்களைப் போல ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குடும்பங்களும் நெருக்கமாகப் பழகுவதுடன், அடுத்த தலைமுறையினரும் ஜெயப்பிரகாஷைத் தங்களது பெரியப்பாவாக மதித்து அவர் சொல்வதைக் கேட்டு நடக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், அந்தப் பகுதியின் எம்.எல்.ஏ சரத் லோகித்ஷவா, தனது அரசியல் தேவைகளுக்காகப் பல இடங்களில் கோடிக்கணக்கான பணத்தை ரகசியமாகப் பதுக்கி வைக்கிறார். அப்படி ஒரு பழைய கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கோடி ரூபாயை, மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். இதையறிந்த ஜெயப்பிரகாஷ், பணத்தை எடுத்த இடத்திலேயே திரும்ப வைத்துவிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். ஆனால், மற்ற விஷயங்களில் அவரது முடிவுக்கு மதிப்பளிக்கும் குடும்பத்தினர், பணம் என்று வந்ததும் அவரது பேச்சைக் கேட்க மறுக்கிறார்கள்.

கோடிக்கணக்கான பணம் கையில் கிடைத்த மகிழ்ச்சியில், அதை எப்படியெல்லாம் செலவு செய்யலாம் என்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கனவு காணத் தொடங்குகிறார்கள். அதேநேரத்தில், பணத்தை இழந்த எம்.எல்.ஏ அதை மீட்பதற்காகத் தீவிரமாகக் களமிறங்குகிறார். இதனால், பணத்தை வைத்து பல திட்டங்களைத் தீட்டிய குடும்பத்தினர், அதைச் செலவு செய்ய முடியாமல் சிக்கலில் தவிக்கிறார்கள். இறுதியில், எம்.எல்.ஏ தனது பணத்தைக் கண்டுபிடித்தாரா? வறுமையில் வாழும் அந்தக் குடும்பத்தினர் தங்களுக்குக் கிடைத்த பணத்தை அனுபவிக்க முடிந்ததா? என்பதற்கான விடைகளே “ஆல் பாஸ்” படத்தின் மீதிக்கதை.

வட சென்னையின் அன்றாட வாழ்க்கையையும், அப்பகுதி மக்களின் இயல்பான குணங்களையும் எடுத்துரைக்கும் கதையாகத் தொடங்கும் படம், ஐந்து கோடி ரூபாய் சிறுவர்களின் கைகளுக்குக் கிடைத்ததும் பரபரப்பான திரில்லர் பாதைக்குத் திரும்புகிறது. அதன்பிறகு ஏற்படும் குழப்பங்களும், பணத்தைச் சுற்றி உருவாகும் எதிர்பார்ப்புகளும் பார்வையாளர்களைத் திரையுடன் ஒன்றச் செய்கின்றன.

முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் ஆகிய மூவரும் மிகையில்லாத நடிப்பால் வட சென்னை மக்களின் வாழ்க்கையைத் திரையில் இயல்பாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். குடும்பத்தின் ஒற்றுமையையும், பணத்தால் ஏற்படும் கருத்து மோதல்களையும் வெளிப்படுத்தும் இடங்களில் இவர்களது நடிப்பு நம்பகத்தன்மையுடன் அமைந்திருக்கிறது.

அவர்களது மனைவிகளாக நடித்திருக்கும் செந்திகுமாரி, வினோதினி, மோகனா. ஆர் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டு படத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான உரையாடல்களிலும், பணம் தொடர்பான விவாதங்களிலும் அவர்களது பங்களிப்பு இயல்பாக அமைந்துள்ளது.

இளம் காதல் ஜோடியாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும் ஜனனி இருவருக்குமிடையிலான காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன. இருவரின் திரை இணக்கமும் வணிக ரீதியான அம்சமாக அமைவதோடு, கதையின் ஓட்டத்திற்கும் உதவுகிறது.

மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களாக நடித்திருக்கும் சஞ்சய், கோகுல், நிகில் ஆகியோர் தங்களது வயதுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். கதையின் முக்கியமான திருப்பத்திற்குக் காரணமாக அமையும் இவர்களது கதாபாத்திரங்கள் திரைக்கதையில் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கின்றன.

எம்.எல்.ஏவாக நடித்திருக்கும் சரத் லோகித்ஷவா, கவுன்சிலர் கதாபாத்திரத்தில் வரும் சத்யா, காவல் ஆய்வாளராக நடித்திருக்கும் அருவி மதன் உள்ளிட்ட துணை நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். திரையில் தோன்றும் நேரம் குறைவாக இருந்தாலும், கதையின் நகர்வில் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் தில்ராஜு, வட சென்னையின் நிலப்பரப்பையும் அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையையும் செயற்கைத்தனம் இல்லாமல் படமாக்கியிருக்கிறார். இயல்பான சூழலை அப்படியே பிரதிபலிக்கும் காட்சிகள் படத்திற்கு யதார்த்தமான தோற்றத்தை அளிக்கின்றன. பாடல் காட்சிகளிலும், குறைந்த வசதிகளைச் சரியாகப் பயன்படுத்தி அழகான காட்சியமைப்புகளை உருவாக்கியிருக்கிறார்.

ஜேம்ஸ் வசந்தனின் இசையில் பாடல்கள் கேட்கும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, காதல் பாடல் எளிதில் மனதில் பதியும் வகையில் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை பல காட்சிகளில் திரைக்கதையின் பரபரப்பைக் கூட்டுவதோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்த உதவுகிறது.

படத்தொகுப்பாளர் எஸ்.பாஸ்கர், கதையைச் சீரான வேகத்தில் கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார். முதல் பாதியில் பணம் தொடர்பான சம்பவங்கள் உருவாக்கும் சுவாரஸ்யம் நன்றாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் அதே வேகத்தைத் தொடர்ந்து தக்கவைக்க முடியாதது குறையாகத் தெரிகிறது. சில பகுதிகளில் காட்சிகளை இன்னும் சுருக்கமாக அமைத்திருந்தால் விறுவிறுப்பு அதிகரித்திருக்கும்.

கதை எழுதி இயக்கியிருக்கும் மைதீன், அரசியல்வாதிகளின் கணக்கில் வராத பணத்தையும், சாதாரண மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் இணைத்து வித்தியாசமான கதைக்களத்தை உருவாக்கியிருக்கிறார். ஐந்து கோடி ரூபாய் கிடைத்தவுடன் குடும்பத்தினருக்கு ஏற்படும் ஆசைகள், அதைச் செலவு செய்ய முடியாமல் அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், பணத்தால் உறவுகளுக்குள் உருவாகும் விரிசல்கள் எனப் பல அம்சங்களை சுவாரஸ்யமாகத் திரைக்கதையில் இணைத்திருக்கிறார்.

பணத்தை மீட்பதற்காக எம்.எல்.ஏ கையாளும் தந்திரங்களும், அதிலிருந்து தப்பிக்க குடும்பத்தினர் மேற்கொள்ளும் முயற்சிகளும் கதையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. கையில் பணம் இருந்தும் அதைச் சுதந்திரமாகப் பயன்படுத்த முடியாத நிலை உருவாக்கும் பதற்றம் படத்தின் முக்கிய ஈர்ப்பாக இருக்கிறது. அதேசமயம், பணம் மனிதர்களின் ஆசைகளையும் உறவுகளையும் எப்படிப் பாதிக்கிறது என்பதையும் இயக்குநர் சுட்டிக்காட்டுகிறார்.

பணத்தை எடுத்தவர்கள் யார் என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாததற்கான காரணங்களைத் திரைக்கதையில் தர்க்கரீதியாக இணைத்திருப்பது பாராட்டுக்குரியது. இதனால், அடுத்ததாக என்ன நடக்கும் என்ற ஆர்வம் பல இடங்களில் நீடிக்கிறது. இருப்பினும், முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் குறைவதும், கதையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதில் சில இடங்களில் தொய்வு ஏற்படுவதும் படத்தின் பலவீனங்களாக இருக்கின்றன.

இருந்தாலும், கதையின் மையக்கருவை நேர்மையாகக் கையாண்டிருக்கும் இயக்குநர், தேவையற்ற திருப்பங்களையும் நம்ப முடியாத சம்பவங்களையும் தவிர்த்து, குடும்ப உறவுகள், பணத்தின் மீதான ஆசை, அரசியல் பின்னணி ஆகியவற்றை இணைத்து ஒரு சுவாரஸ்யமான திரில்லர் அனுபவத்தை வழங்கியிருக்கிறார்.

“ஆல் பாஸ்” படத்திற்கு மதிப்பீடு 3/5

“ஆல் பாஸ்” சுவாரஸ்யமான திரில்லர்!