“கிட்டி” திரை விமர்சனம்

“கிட்டி” நெடுமாறன் மோகன்தாஸ் இயக்கத்தில் திருமாறன் (ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ்) தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை காதர். இந்த படத்தில் அசோக் குமார் பாலகிருஷ்ணன், திருமாறன் மோகன்தாஸ், அர்ஜூனா துரைசாமி, நிஷா இஷ்மீத், சங்கவி தர்மராஜ், ஒய். ஜி. மகேந்திரன், சிமு அத்வானி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் பிரபல ரவுடி ஒருவரும், கல்லூரி மாணவி ஒருவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். இந்த இரட்டைக் கொலை வழக்கை காவல் ஆய்வாளர் யுகன் விசாரித்து வரும் நிலையில், இரண்டு கொலைகளையும் தானே செய்ததாகக் கூறி அசோக் காவல் நிலையத்தில் சரணடைகிறார். இதனால் வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாகக் காவல்துறையினர் கருதும் நேரத்தில், அசோக் மனநலப் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருபவர் என்ற தகவல் வெளியாகிறது. இதையடுத்து வழக்கை மற்றொரு கோணத்தில் ஆராயத் தொடங்கும் யுகனுக்கு பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகின்றன. உண்மையான கொலையாளி யார்? செய்யாத குற்றங்களுக்காக அசோக் ஏன் சரணடைந்தார்? இந்தக் கொலைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் மர்மம் என்ன? என்ற கேள்விகளுக்கான விடைகளே “கிட்டி” படத்தின் மீதிக்கதை.

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்களில் எலிகளைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும் பாரம்பரியக் கருவி ‘எலிப்பிடி கிட்டி’ எனப்படுகிறது. அதேபோல், குற்றவாளிகளுக்குப் பொறி வைத்து அவர்களைப் பிடிக்கும் காவல்துறையின் செயல்பாட்டை மையமாகக் கொண்டு இப்படத்திற்குப் பொருத்தமான தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் அசோக், உணர்வுப்பூர்வமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். மனநிலை சார்ந்த சிக்கல்களையும், பல்வேறு உணர்ச்சிப் போராட்டங்களையும் வெளிப்படுத்த வேண்டிய கதாபாத்திரத்தில் தனது நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். கதாபாத்திரத்தின் உணர்வுகளைப் பார்வையாளர்களிடம் கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

காவல் ஆய்வாளர் யுகனாக நடித்திருக்கும் மற்றொரு நாயகன், அறிமுக நடிகர் என்ற சாயல் தெரியாத வகையில் இயல்பாக நடித்திருக்கிறார். காவல்துறை அதிகாரிக்கான உடல்மொழி, விசாரணையின்போது வெளிப்படுத்தும் நிதானம், குற்றத்தின் பின்னணியை ஆராயும் விதம் என அனைத்திலும் அளவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, வழக்கின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் காட்சிகளில் அவரது நடிப்பு கதைக்கு நம்பகத்தன்மை அளிக்கிறது.

நாயகிகளாக நடித்திருக்கும் சங்கவி மற்றும் நிஷா இருவரும் தங்களது இயல்பான நடிப்பால் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியிருக்கிறார்கள். அழகும் எதார்த்தமான வெளிப்பாடும் அவர்களுக்குப் பலமாக அமைந்திருக்கின்றன. கதையின் முக்கியத் திருப்பங்களுடன் தொடர்புடைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிமு அத்வானி, தனது நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் மனதைப் பாதிக்கும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்.

மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.அரவிந்தராஜும், நீதிபதியாக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரனும் தங்களின் அனுபவமிக்க நடிப்பால் காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். இருவரது பங்களிப்பும் அவரவர் கதாபாத்திரங்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.

வி.எஸ்.வேலனின் ஒளிப்பதிவு ஆடம்பரமின்றி கதையின் தன்மைக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது. காட்சிகளின் இயல்புத்தன்மையைப் பாதுகாத்து, படத்தின் ஒட்டுமொத்தத் தரத்திற்கு அவரது ஒளிப்பதிவு துணை நிற்கிறது.

காதரின் இசையில் அமைந்துள்ள பாடல்கள் கேட்கும் ரகத்தில் இருக்கின்றன. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ற வகையில் பயணித்தாலும், இன்னும் அழுத்தமாக அமைந்திருந்தால் பரபரப்பான தருணங்கள் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

கார்த்திக் பாண்டியனின் படத்தொகுப்பு படத்தின் வேகத்திற்கு முக்கியப் பங்காற்றியிருக்கிறது. எதிர்பாராத திருப்பங்களை உரிய நேரத்தில் வெளிப்படுத்தி, அடுத்ததாக என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தொடர்ந்து தக்கவைக்கிறார். குறிப்பாக, மர்மத்தின் முடிச்சுகள் அவிழும் பகுதிகளில் படத்தொகுப்பு சிறப்பாக அமைந்துள்ளது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் நெடுமாறன் மோகன்தாஸ், வழக்கமான குற்றப் புலனாய்வு திரைப்படங்களின் பாதையிலிருந்து விலகி, கதையை வித்தியாசமான கோணத்தில் அணுகியிருக்கிறார். கொலை விசாரணையை மையமாக வைத்துக்கொண்டு காதல், பழிவாங்கல் மற்றும் சமூகப் பிரச்சினைகளையும் கதையுடன் இணைத்திருப்பது படத்தின் சிறப்பம்சம்.

தேவையான இடங்களில் மர்மங்களையும் திருப்பங்களையும் வெளிப்படுத்தி, கதையைத் தொய்வின்றி நகர்த்தியிருக்கும் இயக்குநர், பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைக்கிறார். கதாபாத்திரங்களின் பின்னணியும், குற்றங்களுக்கான காரணங்களும் படிப்படியாக வெளிப்படுவது திரைக்கதைக்கு வலு சேர்க்கிறது.

“கிட்டி” படத்திற்கு மதிப்பீடு 3/5

“கிட்டி” கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு ஏற்ற படம்