“எக்ஸாம்” விமர்சனம்

“எக்ஸாம்” ஏ. சற்குணம் இயக்கத்தில் வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பாக புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சாம் சிஎஸ். இந்த படத்தில் அதிதி பாலன், துஷாரா விஜயன், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், அப்பாஸ், வசுந்தரா காஷ்யப், சரவண சக்தி, வெங்கடேசன் ஆகாஷ், சூரிய ஜெயா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அரசு தேர்வுகளில் நடைபெறும் மோசடிகளை மையமாக வைத்து, இதுவரை அதிகம் பேசப்படாத ஒரு முக்கியமான சமூக பிரச்சனையை விறுவிறுப்பான திரைக்கதையுடன் இணையத் தொடராக கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் சற்குணம்.

டி.எஸ்.பி.யாக பணியாற்றும் அதிதி பாலன், புதிய இடத்திற்கு பொறுப்பேற்க செல்லும் வழியில் கடத்தப்பட்டு அடைத்து வைக்கப்படுகிறார். அவரின் பெயரிலும் பதவியிலும் துஷாரா விஜயன் பொறுப்பேற்று, அந்த பகுதியில் நடைபெற இருக்கும் அரசு தேர்வு மோசடியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஆனால், இந்த மோசடியின் பின்னால் அதிகாரமும் பணமும் இணைந்த பெரிய வலையமைப்பு இருப்பது தெரிய வரும்போது, கதை இன்னும் பரபரப்பாக மாறுகிறது.

சமூகத்தில் உயர வேண்டும் என்ற கனவுடன் அரசு வேலைக்காக உழைக்கும் சாதாரண மக்களின் வாழ்க்கையை, சிலர் பணமும் அதிகாரமும் கொண்டு எப்படி சுரண்டுகிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாகவும் அதிர்ச்சிகரமாகவும் சொல்லியிருக்கிறது இந்த தொடர்.

துஷாரா விஜயன் தனது அழுத்தமான மற்றும் இயல்பான நடிப்பால் முழு தொடரையும் தாங்கிச் செல்கிறார். ஏமாற்றப்பட்ட இளைஞர்களின் கோபம், வேதனை, போராட்டம் அனைத்தையும் அவரது நடிப்பு பிரதிபலிக்கிறது. அதிதி பாலன், பணமும் அதிகாரமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற மனநிலையுடன் வாழும் கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சப் இன்ஸ்பெக்டர் செழியனாக நடித்துள்ள துரை சுதாகர், தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கிளைமாக்ஸில் அவரது கதாபாத்திரம் தரும் திருப்பம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

மலைப்பிரதேச பின்னணியில் அமைந்த காட்சிகள் ஒளிப்பதிவின் மூலம் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. பின்னணி இசை, பரபரப்பை மட்டும் அல்லாமல் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் அழுத்தமாக எடுத்துச் செல்கிறது. படத்தொகுப்பும் தொடரை சலிப்பில்லாமல் நகர்த்துகிறது.

முதல் மூன்று அத்தியாயங்கள் மிகுந்த விறுவிறுப்புடன் நகர்ந்தாலும், பின்னர் சில இடங்களில் திரைக்கதை சற்றே மெதுவாகிறது. இருந்தாலும், மிக முக்கியமான சமூக பிரச்சனையை எந்த சமரசமும் இல்லாமல் பேச முயன்றதற்காக இயக்குநரை பாராட்ட வேண்டியது அவசியம்.

“எக்ஸாம்” படத்திற்கு மதிப்பீடு 3.5/5

சமூக அக்கறையுடன் சொல்லப்பட்ட விறுவிறுப்பான கிரைம்-திரில்லர் இணையத் தொடர்