“அன்பில் அவன்” ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் கே. கருணாமூர்த்தி, அபினயா செல்வம், அசோக் செல்வன், எஸ். சேதுராமலிங்கம், நோவா ஆபிரகாம் பிரபு – ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை கோவிந்த் வசந்தா. இந்த படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சாபுமோன் அப்துசமத், டெல்லி கணேஷ், கதிர் பாலு, ரேவதி, S. தனுஷன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
காதலித்து திருமணம் செய்துகொண்ட அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் தம்பதி, நட்சத்திர ஓட்டலில் பணியாற்றி வருகிறார்கள். சிறு வயது முதலே சொந்தமாக ஒரு ஹோம் ஸ்டே நடத்த வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பிரீத்தி முகுந்தனின் ஆசையை நிறைவேற்ற நினைக்கும் அசோக் செல்வன், மலைப்பகுதியில் ஒரு வீட்டை வாங்கி அதை விருந்தோம்பல் இல்லமாக மாற்ற முடிவு செய்கிறார். அதற்கான பணிகளை இருவரும் தொடங்கும் நிலையில், அவர்கள் எதிர்பாராத ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த ஆபத்தில் இருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதையும், அவர்களது காதல் அந்த சிக்கலை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதையும் சொல்லும் படமே ‘”அன்பில் அவன்”.
கல்லூரி காலத்தில் காதல், கொண்டாட்டம் என ஜாலியாக சுற்றித்திரியும் இளைஞராகவும், திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையின் பொறுப்புகளை உணர்ந்து குடும்பத்திற்காக உழைக்கும் கணவனாகவும் அசோக் செல்வன் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக பொருந்தியிருக்கிறார். குறிப்பாக, மனைவியின் கனவை நிறைவேற்றும் முயற்சியில் எதிர்பாராத பிரச்சனைகள் உருவாகும்போது, அவற்றை சமாளிக்க முடியாமல் தவிக்கும் தருணங்களில் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். கல்லூரி மாணவராக வரும் அவரது தோற்றமும் உடை வடிவமைப்பும் மிகவும் ஸ்டைலிஷாக அமைந்துள்ளன. அந்த தோற்றத்தில் அவரை ஒரு முழுமையான ஆக்ஷன் கதாநாயகனாக பார்க்கலாம் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.
பிரீத்தி முகுந்தன் அழகான கதாநாயகியாக மட்டும் இல்லாமல், உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய திறமையான நடிகையாகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். கணவர் மீதான அன்பு, அவர்களுக்குள் ஏற்படும் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள், பதற்றமான சூழ்நிலைகளில் வெளிப்படும் உணர்ச்சிகள் என பல்வேறு காட்சிகளில் அவரது நடிப்பு இயல்பாக அமைந்துள்ளது. குறிப்பாக அசோக் செல்வனுடன் இணைந்து வரும் காட்சிகளில் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் கதிர் பாலு, காவல் ஆய்வாளராக மஹா டெல்லி கணேஷ், வழக்கறிஞராக சாபுமோன் அப்துசமத் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை திருப்திகரமாக கையாண்டுள்ளனர். ராணி பத்மினியாக சிறப்புத் தோற்றத்தில் வரும் ரேவதியும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன், படத்தின் காட்சிகளை அழகான வண்ணங்களுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக மலைப்பகுதி பின்னணியில் இடம்பெறும் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. இரண்டாம் பாதியில் கதை தீவிரமடையும் போது, கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் ஆபத்து மற்றும் பதற்றத்தை காட்சியமைப்பின் மூலம் பார்வையாளர்களுக்கும் உணர வைத்திருக்கிறார்.
கோவிந்த் வசந்தாவின் இசை படத்திற்கு பலம் சேர்க்கும் அம்சமாக உள்ளது. பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் வகையில் அமைந்துள்ளதோடு, பின்னணி இசையும் கதாபாத்திரங்களின் மனநிலையை பிரதிபலிக்கும் விதத்தில் பயணிக்கிறது. குறிப்பாக காதல் மற்றும் பதற்றம் நிறைந்த காட்சிகளில் இசையின் பங்களிப்பு கவனிக்கத்தக்கதாக உள்ளது.
படத்தின் காதல் காட்சிகளையும், பின்னர் வரும் ஆக்ஷன் காட்சிகளையும் சரியான வேகத்தில் இணைத்து படத்தை நகர்த்த முயற்சித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே. முதல் பாதியின் காதல் மற்றும் குடும்ப உணர்வுகளிலிருந்து இரண்டாம் பாதியின் பரபரப்பான பகுதிக்கு படம் மாறும்போது, அந்த மாற்றத்தை சீராக கொண்டு செல்ல முயற்சி செய்திருக்கிறார்.
ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு விக்னேஷ் ராஜா உருவாக்கிய கதைக்கு, விக்னேஷ் ராஜா, ஆர். கார்த்திகேயன் மற்றும் அசோக் செல்வன் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர். எதிர்பாராத ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் இளம் தம்பதி, ஒருவரை ஒருவர் நம்பி அந்த சூழ்நிலையிலிருந்து மீள்வதற்காக போராடுவதை காதல் மற்றும் ஆக்ஷன் கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். கணவன்–மனைவி உறவையும், அவர்களுக்குள் இருக்கும் அன்பையும் பிரச்சனைகளுக்கு நடுவில் வெளிப்படுத்தியிருப்பது படத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது.
ஆனால், ஒரு வழக்கமான காதல்–ஆக்ஷன் கதையை சற்று வித்தியாசமாக அணுகுவதற்கான வாய்ப்பு இருந்தும், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் அதை முழுமையாக பயன்படுத்தவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதியில் நீளமாக இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் படத்தின் வேகத்தை பாதிப்பதோடு, சில இடங்களில் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்குகின்றன.
முதல் பாதியில் இடம்பெறும் காதல் காட்சிகளும், அசோக் செல்வன்–பிரீத்தி முகுந்தன் இடையிலான கணவன்–மனைவி கெமிஸ்ட்ரியும் ரசிக்க வைக்கின்றன. ஆனால் இடைவேளைக்குப் பிறகு கதை செல்லும் திசையும், அதை காட்சிப்படுத்திய விதமும் புதுமை இல்லாமல் வழக்கமான பாணியில் அமைந்துள்ளன. குறிப்பாக முக்கியமான ஆக்ஷன் காட்சியின் நீளமும், அதில் இருக்கும் நம்ப முடியாத சம்பவங்களும் படத்திற்கு பின்னடைவாக அமைகின்றன.
மொத்தத்தில், பழக்கமான காதல் மற்றும் ஆக்ஷன் கதையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘அன்பில் அவன்’, கணிக்கக்கூடிய திரைக்கதை மற்றும் இரண்டாம் பாதியின் நீளமான காட்சிகளால் தடுமாறினாலும், அசோக் செல்வன்–பிரீத்தி முகுந்தன் இடையிலான இயல்பான காதல் காட்சிகளும், அவர்களது நடிப்பும் படத்தை ஓரளவு ரசிக்க வைக்கின்றன.





