“பத்தா” திரை விமர்சனம்

“பத்தா” பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் அஜித் அந்தரே, பிரியா அட்லீ, அலோக் ஜெயின், முராத் கெடானி, அட்லீ தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சாய் அபியங்கர்.  இந்த படத்தில் விஜய் சேதுபதி, லிஜோ மோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், சஹஸ்ரா ஸ்ரீ, சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அஜய் கோஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஊரில் தனது ரவுடித்தனம் மற்றும் சாராய வியாபாரம் மூலம் அனைவரையும் அச்சுறுத்தி வாழும் பத்தாவாக இருக்கிறார் விஜய் சேதுபதி. அவரது பெயரை கேட்டாலே ஊரே நடுங்கும் நிலையில், எதிர்பாராத ஒரு சம்பவத்தில் சிக்கிக்கொள்ளும் அவர், ஒரு சிறுவனின் உதவி கிடைத்தால் மட்டுமே அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர முடியும் என்ற சூழலுக்கு தள்ளப்படுகிறார். பத்தாவை பார்த்தாலே பயந்து ஒதுங்கும் பள்ளி மாணவன் சபரி, தனக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை எப்படி பயன்படுத்துகிறான், அந்த சிறுவனுக்கும் ரவுடிக்கும் இடையே உருவாகும் உறவு எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் படம் “பத்தா”.

எந்தவிதமான கதாபாத்திரத்தையும் தனது இயல்பான நடிப்பு மற்றும் தனித்துவமான உடல் மொழியால் ரசிகர்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கும் விஜய் சேதுபதி, பத்தாவாக மீண்டும் தனது நடிப்புத் திறனை நிரூபித்திருக்கிறார். முரட்டுத்தனமும் அதிகாரத் தோரணையும் கொண்ட மனிதராக அவரது தோற்றமும், உடல் மொழியும் கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கின்றன. அதே நேரத்தில், தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சூழல் எதிர்பாராத விதமாக மாறும்போது ஏற்படும் பதற்றம், பயம், இயலாமை ஆகிய உணர்வுகளையும் தனது நடிப்பின் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

சபரி என்ற பள்ளி மாணவனாக நடித்திருக்கும் சாய் பிரித்வி ராஜ், விஜய் சேதுபதிக்கு சற்றும் குறையாத வகையில் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக இருவருக்கும் இடையே இடம்பெறும் உரையாடல்கள் மற்றும் மோதல் நிறைந்த காட்சிகளில் அவரது இயல்பான நடிப்பு ரசிக்க வைக்கிறது. ஒரு ரவுடியை எதிர்கொள்ளும் சிறுவனின் பயம், தயக்கம், தைரியம் என ஒவ்வொரு உணர்வையும் சரியான அளவில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பத்தாவின் மனைவியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ், தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை இயல்பாக கையாண்டிருக்கிறார். சஹஸ்ரா, அர்ஜுன் சிதம்பரம், ஹரி கிருஷ்ணன், சாண்டி பாலச்சந்தர், விஷ்ணு கோவிந்த், பாலமுருகன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

80-களின் பின்னணியில் கதை நகர்வதால், அந்த காலகட்டத்தின் தோற்றத்தையும் உணர்வையும் திரையில் கொண்டு வருவதில் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே. சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். காட்சிகளுக்கான வண்ணத் தேர்வு, வெளிச்ச அமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் படத்தின் காலப்பின்னணியை நம்பகத்தன்மையுடன் உணரச் செய்கின்றன.

சாய் அபயங்கரின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையும் கதையின் சூழ்நிலைக்கு ஏற்ப பயணித்து, கதாபாத்திரங்களின் மனநிலை மற்றும் காட்சிகளின் அழுத்தத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக முக்கியமான தருணங்களில் இசை காட்சிகளின் உணர்வுகளை மேலும் உயர்த்துகிறது.

படத்தின் தொடக்கப்பகுதி சற்று நிதானமாக நகர்வதால், முதல் பாதியில் வேகம் குறைந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இருப்பினும், கதை ரவுடிக்கும் சிறுவனுக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்டு தீவிரமடையும் போது, பார்வையாளர்களின் கவனம் படத்தின் மீது திரும்புகிறது. உணர்ச்சிகரமான சம்பவங்களை சரியான இடங்களில் இணைத்து கதையை முன்னோக்கி நகர்த்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணன்.

கதையின் அடிப்படை கரு மிகவும் எளிமையானதாக இருந்தாலும், அதை சுவாரஸ்யமாக மாற்றும் வகையில் திரைக்கதையையும் கதாபாத்திரங்களையும் வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். குறிப்பாக விஜய் சேதுபதி மற்றும் சிறுவன் இடையிலான உரையாடல்கள் படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளன. அவர்களுக்குள் உருவாகும் எதிர்பாராத உறவு மூலம் பல்வேறு உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்துவதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.

சமூகத்தில் நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்களின் குணாதிசயங்கள், ஊருக்குள் மறைந்திருக்கும் யதார்த்தங்கள், பெரியவர்களின் செயல்பாடுகள் குழந்தைகளின் பார்வையில் எவ்வாறு வேறு விதமாக பிரதிபலிக்கின்றன என்பதை சுவாரஸ்யமான முறையில் பதிவு செய்திருக்கிறார் பாலாஜி தரணிதரன். அதிகாரமும் ஆணவமும் கொண்ட ஒருவர் எதிர்பாராத சூழ்நிலையில் சிக்கும்போது அவரது உலகமே எப்படி தலைகீழாக மாறுகிறது என்பதையும் அழுத்தமான உணர்வுகளுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

பெரிய அளவிலான சிக்கலான கதைக்களத்தை நம்பாமல், ஒரு ரவுடிக்கும் சிறுவனுக்கும் இடையிலான உறவை மையமாக வைத்து, அதில் மனித உணர்வுகள், நகைச்சுவை, பதற்றம் மற்றும் சமூக யதார்த்தத்தை கலந்து சுவாரஸ்யமான படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன்.

“பத்தா” படத்திற்கு மதிப்பீடு 3.5/5

வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிக்க வைக்கும் படம் “பத்தா”