“பிளாக் கோல்ட்” தீரன் அருண்குமார் இயக்கத்தில் மூர்த்தி முனுசாமி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை கவாஸ்கர் அவினாஷ். இந்த படத்தில் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், அபிராமி வெங்கடாசலம், ஏ. வெங்கடேஷ், நிழல்கள் ரவி, ராமர், சபிதா ராய், அருள் டி. சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கார் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் தலைமை மெக்கானிக்காக வேலை பார்க்கும் வெற்றி, தனது பெற்றோர் மற்றும் தங்கையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். கல்லூரியில் தன்னுடன் படித்த பிரியலயாவையும் காதலித்து வருகிறார். இப்படி வாழ்க்கை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், அவரது குடும்பத்தில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது.
லாரி ஓட்டுநராகப் பணியாற்றும் வெற்றியின் தந்தை லிவிங்ஸ்டன், ஆந்திராவில் இருந்து ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்கை ஏற்றிக்கொண்டு சென்னைக்குத் திரும்பும் வழியில் திடீரென மாயமாகிறார். லாரியுடன் சரக்கும் காணாமல் போனதால், அதன் உரிமையாளர் லிவிங்ஸ்டன் மீதே திருட்டுப் பழியைச் சுமத்துகிறார். தந்தையின் நிலை என்னவென்று தெரியாமல் தவிக்கும் வெற்றி, ஒருபுறம் அவரைக் கண்டுபிடிக்கவும், மறுபுறம் அவர் மீதான பழியைத் துடைக்கவும் முயற்சியில் இறங்குகிறார்.
இந்த வழக்கை காவல்துறை அதிகாரியான அபிராமி வெங்கடாச்சலம் விசாரித்து வரும் நிலையில், தந்தையைத் தேடும் வெற்றிக்குப் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கின்றன. குறிப்பாக, கருப்பு தங்கம் என்று அழைக்கப்படும் தலைமுடியின் பின்னணியில் இயங்கும் மிகப்பெரிய வியாபார உலகம் அவருக்கு அறிமுகமாகிறது. தலைமுடிக்கும் அவரது தந்தை காணாமல் போன சம்பவத்திற்கும் என்ன தொடர்பு? அதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? என்பதற்கு கிரைம் மற்றும் ஆக்ஷன் திரில்லர் பாணியில் விடை சொல்கிறது “பிளாக் கோல்டு”.
பொதுவாக கச்சா எண்ணெய்தான் கருப்பு தங்கம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், மனித தலைமுடிக்கும் சர்வதேச அளவில் மிகப்பெரிய வணிக மதிப்பு இருக்கிறது என்பதையும், அதன் பின்னணியில் பல கோடி ரூபாய் வர்த்தகமும் போட்டிகளும் நடைபெறுவதையும் மையமாகக் கொண்டு கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தீரன் அருண்குமார். அதிகம் அறியப்படாத ஒரு தொழிலைப் பற்றிய தகவல்களுடன் கற்பனையையும் கலந்து சுவாரஸ்யமான திரைக்கதையாகக் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
நாயகன் வெற்றி, அழுத்தமான முகபாவனைகளுடன் தனது இலக்கை நோக்கி உறுதியாகப் பயணிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் மட்டும் சற்றே செயற்கைத்தனம் தெரிந்தாலும், தந்தையைப் பிரிந்த தவிப்பு, அவரைத் தேடும் பதற்றம், உண்மையை வெளிக்கொண்டு வருவதில் காட்டும் தீவிரம் என உணர்வுப்பூர்வமான காட்சிகளில் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.
நாயகி பிரியலயாவுக்கு திரையில் அதிக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றாலும், தோன்றும் காட்சிகளில் அழகாகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
காவல்துறை அதிகாரியாக வரும் அபிராமி வெங்கடாச்சலம், காக்கி உடைக்கே உரிய கம்பீரத்துடனும் அதிகாரத்துடனும் தனது கதாபாத்திரத்தை கையாண்டிருக்கிறார். வெற்றியின் தந்தையாக நடித்திருக்கும் லிவிங்ஸ்டன், மிகையில்லாத இயல்பான நடிப்பால் மனதில் பதிகிறார். தாயாக நடித்திருக்கும் துளசி தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் குடும்ப உணர்வுகளுக்கு வலு சேர்த்திருக்கிறார்.
நைனா கதாபாத்திரத்தில் வரும் அருள் டி.சங்கர், தங்கம் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளராக நடித்திருக்கும் ஏ. வெங்கடேஷ், நைனாவின் மகளாக நடித்திருக்கும் சபிதா ராய், ராமர், கராத்தே வெங்கடேஷ் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் வீராசாமி, கிரைம் திரில்லருக்குத் தேவையான இருண்ட பின்னணியையும், ஆக்ஷன் காட்சிகளுக்கான வேகத்தையும் தனது கேமரா மூலம் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். கதாபாத்திரங்களின் மனநிலைக்கும் சூழலுக்கும் ஏற்ப ஒளியமைப்பு மற்றும் வண்ணங்களைப் பயன்படுத்தியிருப்பது காட்சிகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.
கவாஸ்கர் அவினாஷின் இசையில் பாடல்கள் இனிமையாக அமைந்துள்ளன. அதேபோல், விசாரணை மற்றும் பரபரப்பான தருணங்களில் ஒலிக்கும் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்தை அதிகரித்து ரசிகர்களை கதையுடன் பயணிக்க வைக்கிறது.
படத்தொகுப்பாளர் தினேஷ் குமார், நான்-லீனியர் முறையில் காட்சிகளைத் தொகுத்திருப்பது படத்தின் தொடக்கத்திலேயே கதையின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கிறது. வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களைத் தெளிவாக இணைத்து, திரைக்கதையின் வேகம் குறையாமல் படத்தை நகர்த்தியிருப்பது சிறப்பு.
எழுதி இயக்கியிருக்கும் தீரன் அருண்குமார், வழக்கமான கிரைம் கதைகளிலிருந்து விலகி, மனித தலைமுடி வியாபாரத்தின் பின்னணியில் இருக்கும் அறியப்படாத உலகத்தைத் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான தகவல்களை சினிமாவுக்கான கற்பனையுடன் இணைத்து, சுவாரஸ்யமான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்.
தங்கத்திற்கு நிகரான மதிப்பைக் கொண்ட தலைமுடியின் பின்னணியில் நடைபெறும் வியாபாரம், அதற்குள் மறைந்திருக்கும் போட்டிகள் மற்றும் குற்றச் செயல்கள் எனப் பல புதிய தகவல்களை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கும் ‘பிளாக் கோல்டு’, வித்தியாசமான கதைக்களத்தாலும் விறுவிறுப்பான திரைக்கதையாலும் பார்வையாளர்களைக் கவர்கிறது.





