“டைடானிக்” திரை விமர்சனம்

“டைட்டானிக்” எம். ஜானகிராமன் இயக்கத்தில் சி. வி. குமார் – திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை நிவாஸ் கே. பிரசன்னா . இந்த படத்தில் கலையரசன், ஆனந்தி / கயல் ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட், ஜாங்கிரி மதுமிதா, தேவதர்ஷினிசேத்தன், ராகவ் விஜய், காயத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திருமண வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்காக சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு ரயிலில் பயணிக்கிறார் ராகவ் விஜய். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்குச் சென்ற மனைவியைச் சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்காக அதே ரயிலில் பயணிக்கிறார் காளி வெங்கட். பல ஆண்டுகளாகப் பிரிந்திருக்கும் தனது காதலியைத் தேடிச் செல்லும் கலையரசனும் இதே ரயிலில் பயணிக்கிறார்.

ஒரே பயணத்தில் சந்திக்கும் இந்த மூவரும் அறிமுகமாகி நண்பர்களாகிறார்கள். பயணத்தின் இடையே தங்களது கடந்தகால காதல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்குகிறார்கள். பள்ளிப் பருவத்தில் மலர்ந்த காதல், கல்லூரிக் காலத்தில் உருவான காதல், அலுவலகத்தில் தொடங்கிய காதல் என மூவரின் காதல் கதைகளும் வெவ்வேறு பின்னணிகளைக் கொண்டவை. ஆனால், மூவருக்குமே காதல் எதிர்பார்த்தபடி அமையவில்லை. அவர்களது காதல் ஏன் தோல்வியடைந்தது? பிரிவுக்குப் பிறகு வாழ்க்கை எப்படி மாறியது? இந்த ரயில் பயணம் அவர்களது வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது? என்பதை நகைச்சுவையும் காதல் உணர்வுகளும் கலந்து சொல்லியிருக்கிறது “டைடானிக்”.

கலையரசன், காளி வெங்கட், ராகவ் விஜய் என மூன்று நாயகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற இயல்பான நடிப்பை வழங்கி படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள். ரயில் பயணத்தில் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி, தங்களது காதல் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் காட்சிகளிலும், தனித்தனியான காதல் அத்தியாயங்களிலும் மிகையில்லாத நடிப்பால் ரசிக்க வைக்கிறார்கள்.

பல ஆண்டுகளாகப் பத்தாம் வகுப்பிலேயே படித்துக்கொண்டிருக்கும் மாணவனாக வரும் காளி வெங்கட், தன்னுடன் படிக்கும் கயல் ஆனந்தியைக் காதலிக்கும் விதம் நகைச்சுவையாக அமைந்திருக்கிறது. ஒருதலைக் காதலின் எதிர்பார்ப்புகள், காதல் பார்வைகள், பிரிவுக்குப் பிறகு ஏற்படும் ஏக்கம் என ஒவ்வொரு உணர்வையும் தனது தனித்துவமான உடல்மொழியால் வெளிப்படுத்தி சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறார்.

கல்லூரிப் பருவத்தில் கயல் ஆனந்தியைக் காதலிக்கும் கலையரசன், குடும்பச் சூழல் காரணமாக அவரைப் பிரிய நேர்ந்தாலும், அந்தக் காதலை மனதில் சுமந்துகொண்டு வாழும் இளைஞனாக சிறப்பாக நடித்திருக்கிறார். பழைய காதலின் நினைவுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது நடிப்பு உணர்வுப்பூர்வமாக அமைந்திருக்கிறது.

அலுவலகத்தில் ஆஷ்னா சாவேரியைச் சந்தித்ததும் காதலில் விழும் ராகவ் விஜய், அவருடனான கருத்து வேறுபாட்டால் பிரிந்து, பெற்றோர் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்யத் தயாராகிறார். ஆனால், கடந்தகால காதல் தனது எதிர்கால திருமண வாழ்க்கையைப் பாதித்துவிடுமோ என்ற குழப்பத்தையும் பதற்றத்தையும் முகபாவனைகள் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் கயல் ஆனந்தி, தனது இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு அழகு சேர்த்திருக்கிறார். வெகுளித்தனமான பேச்சு, குறும்புத்தனமான செயல்கள், காதலனுடன் ஏற்படும் சிறிய சண்டைகள் என அனைத்தையும் அளவோடு கையாண்டிருக்கிறார். காதல், கோபம், ஏக்கம், குழப்பம் என மாறுபட்ட உணர்வுகளை தனது கண்கள் மற்றும் உடல்மொழியின் மூலம் வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.

மற்றொரு நாயகியான ஆஷ்னா சாவேரி, காதல் மற்றும் பிரிவு சார்ந்த உணர்வுப்பூர்வமான காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக, பாடல் காட்சிகளிலும் கதையின் முக்கியமான தருணங்களிலும் தனது நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.

மதுமிதா, சேத்தன், தேவதர்ஷினி, சு. செந்தில் குமார், காயத்ரி உள்ளிட்டோர் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வரும் இயக்குநர் பாலாஜி மோகனும் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பல்லு, கதாபாத்திரங்களின் உணர்வுகளை நெருக்கமாகப் பதிவு செய்யும் குளோஸ்-அப் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். வண்ணமயமான காட்சியமைப்பும், காதல் தருணங்களை அழகாகப் படமாக்கிய விதமும் ரசிக்க வைக்கின்றன.

நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக அமைந்துள்ளன. குறிப்பாக, காதல் உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்தும் பின்னணி இசை படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

மூன்று வெவ்வேறு காதல் கதைகளை ஒன்றாக இணைத்து சுவாரஸ்யமாகக் கொண்டுசெல்லும் வகையில் ராதாகிருஷ்ணன் தனபால் மற்றும் இக்னேஷியஸ் அஸ்வின் ஆகியோரின் படத்தொகுப்பு அமைந்துள்ளது. பெரும்பாலான காட்சிகள் வசனங்களை மையமாகக் கொண்டிருந்தாலும், படத்தின் ஓட்டம் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

காதல் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிந்துவிடும் உணர்வு அல்ல; அது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் பல மாற்றங்களைச் சந்திக்கும் பயணம் என்பதை மையமாக வைத்து கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எம். ஜானகிராமன்.

மூன்று ஆண்களின் காதல் அனுபவங்களை ரயில் பயணத்தின் மூலம் ஒன்றிணைத்திருக்கும் திரைக்கதை புதுமையான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது. காதலிக்கும்போது ஏற்படும் ஈர்ப்பு, எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி ஆகியவை திருமண வாழ்க்கைக்குப் பிறகு பொறுப்புகள், விட்டுக்கொடுத்தல், புரிதல் என எப்படிப் பரிணமிக்கின்றன என்பதை யதார்த்தமான சம்பவங்கள் மூலம் எடுத்துரைத்திருக்கிறார்.

காதலுக்குப் பிறகான வாழ்க்கையில் ஏற்படும் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள், ஈகோ பிரச்சினைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றை நகைச்சுவையுடன் கலந்து சொல்லியிருப்பது படத்தின் சிறப்பு. குறிப்பாக, திருமணத்திற்குப் பிறகு மனைவியிடம் தனது முன்னாள் காதல் குறித்து கணவன் பகிர்ந்துகொள்ளும்போது உருவாகும் குடும்பச் சிக்கல்களை நகைச்சுவையாகக் காட்சிப்படுத்தியிருப்பதோடு, அதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களையும் சிந்திக்க வைக்கிறார்.

எந்தவொரு கதாபாத்திரத்தையும் முழுமையான நல்லவர் அல்லது தவறு செய்பவர் என்று தீர்மானிக்காமல், அவரவர் சூழ்நிலைகளையும் மனநிலைகளையும் புரிந்துகொள்ளும் வகையில் கதையை நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது.

மூன்று காதல் கதைகளையும் ஒன்றாக இணைத்திருக்கும் திரைக்கதை பெரும்பாலான இடங்களில் சுவாரஸ்யமாகப் பயணித்தாலும், இறுதிக்கட்டத்தில் வழக்கமான சினிமா பாணியிலான திருப்பங்களுடன் முடிவது சற்றே ஏமாற்றமளிக்கிறது. இன்னும் யதார்த்தமான முடிவைத் தேர்ந்தெடுத்திருந்தால் படத்தின் கருத்து கூடுதல் அழுத்தத்துடன் மனதில் பதிந்திருக்கும்.

காதலின் அழகையும், பிரிவின் வலியையும், திருமணத்திற்குப் பிறகு உருவாகும் பொறுப்புகளையும் நகைச்சுவை கலந்து பேசும் ‘டைடானிக்’, மூன்று நாயகர்களின் இயல்பான நடிப்பாலும் அழகான காதல் தருணங்களாலும் கவனம் ஈர்க்கிறது. காதல் என்பது உணர்வுகளோடு முடிந்துவிடுவதில்லை; அதற்குப் பிறகான வாழ்க்கையிலும் புரிதலும் பொறுமையும் அவசியம் என்பதை எளிமையாக உணர்த்துகிறது.

“டைடானிக்” படத்திற்கு மதிப்பீடு 3.5/5

“டைடானிக்” காதலையும் சிரிப்பையும் கலந்து மனதை வருடும் அழகான பயணம்