“ப்ராமிஸ்” திரை விமர்சனம்

“ப்ராமிஸ்” அருண் குமார் சேகரன் இயக்கத்தில் அருண்குமார் சேகரன், நாராயண நாகராஜ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சரவண தீபன். இந்த படத்தில் அருண் குமார் சேகரன், நதியா சோமு, சுஜன் கிறிஸ்டோபர், கோகுல கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒரு தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் பிரிவில் பணிபுரியும் அருண்குமார் சேகரன் மற்றும் கல்லூரியில் படிக்கும் நதியா சோமு இருவரும் காதலிக்கிறார்கள். காதலனுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதை அறிந்த நதியா, இனி குடிக்கக் கூடாது என்று அவரிடம் உறுதியான வாக்குறுதி வாங்குகிறார். ஆனால் அந்த வாக்குறுதியை மீறி நண்பர்களுடன் மீண்டும் மதுவுக்கு அடிமையாகும் சங்கமித்ரன், காதலியின் கோபத்தால் தனிமையில் தள்ளப்படுகிறார்.

சில நாட்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழத் தொடங்குகிறார்கள். விரைவில் குழந்தை வரப்போகும் சந்தோஷமும் அவர்களின் வாழ்க்கையில் சேர்கிறது. ஆனால் மருத்துவ பரிசோதனையின் போது சங்கமித்ரனுக்கு கிடைக்கும் ஒரு அதிர்ச்சி தகவல், அவரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது. அதன் பின்னர் அவர் எதிர்கொள்ளும் சவால்களும், அந்த மருத்துவ முடிவின் பின்னணியும் தான் ப்ராமிஸ் படத்தின் மையக்கதை.

இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ள அருண்குமார் சேகரன், எளிமையான தோற்றத்திலும் இயல்பான நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். மிகைப்படுத்தாத அவரது நடிப்பு, கதாபாத்திரத்தை நம்பும்படி செய்கிறது. காதல், குடும்பம், வேதனை என அனைத்து உணர்வுகளையும் அளவாக வெளிப்படுத்தியுள்ளார்.

நாயகியாக நடித்துள்ள நதியா சோமு, இயற்கையான முகபாவனைகளாலும், பக்கத்து வீட்டு பெண் போன்ற எளிமையான தோற்றத்தாலும் மனதில் நிற்கிறார். குறிப்பாக கணவரின் உடல்நிலை குறித்த உண்மையை அறிந்த பிறகு அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.

படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற நடிகர்கள் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும், தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர். நண்பர்கள், குடும்பத்தினர், எதிர்மறை கதாபாத்திரங்கள் என அனைவரும் கதையோட்டத்திற்கு ஏற்ற பங்களிப்பை வழங்குகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் வினோத் குமார், வேலூர் மாவட்டத்தின் இயற்கை அழகை அழகாக பதிவு செய்துள்ளார். மலைகள், ரயில் பாதைகள், பாறைகள் உள்ளிட்ட இடங்கள் கதையின் உணர்வுகளுடன் இணைந்து பயணிக்கின்றன.

சரவண தீபனின் இசையில் பாடல்கள் இனிமையாக அமைந்துள்ளன. பின்னணி இசையும் காட்சிகளின் உணர்வுகளை உயர்த்துகிறது. ஸ்ரீராம் விக்னேஷின் படத்தொகுப்பு கதையை எந்தத் தொய்வும் இல்லாமல் நகர்த்துகிறது.

ஒரு வாக்குறுதியை மீறுவதால் ஏற்படும் விளைவுகளை மட்டுமல்லாமல், மதுப் பழக்கத்தால் குடும்ப வாழ்க்கையில் உருவாகும் பாதிப்புகளையும் படம் பேசுகிறது. தீர விசாரிக்காமல் எடுக்கப்படும் முடிவுகள் எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்பதையும் இயக்குநர் எளிமையான காட்சிகள் மூலம் உணர்த்தியுள்ளார்.

இருப்பினும், கதாநாயகனின் மருத்துவப் பிரச்சினைக்கான காரணத்தை முழுமையாக விளக்காதது, அதேபோல் இக்கட்டான சூழலில் அவரது பெற்றோரின் பங்கு போதிய அளவில் காட்டப்படாதது போன்றவை திரைக்கதையில் குறையாகத் தெரிகின்றன.

அவை இருந்தபோதிலும், சமூகத்திற்கு தேவையான ஒரு விழிப்புணர்வு கருத்தை காதல் மற்றும் குடும்ப உணர்வுகளுடன் வணிகரீதியாக சொல்லியிருப்பதில் இயக்குநர் அருண்குமார் சேகரன் வெற்றி பெற்றிருக்கிறார்.

“ப்ராமிஸ்” படத்திற்கு மதிப்பீடு 2.5/5

வாக்குறுதியின் மதிப்பையும், மதுப் பழக்கத்தின் விளைவுகளையும் உணர்வுப்பூர்வமாக சொல்லும் குடும்ப படம்