“அனந்தன் காடு” திரை விமர்சனம்

“அனந்தன் காடு” ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் கோகுலம் கோபாலன், S வினோத் குமார் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை B அஜனீஷ் லோக்நாத். இந்த படத்தில் ஆர்யா, வெற்றி, முரளி கோபி, தங்கராஜ், ரெஜினா கசாண்ட்ரா, தேவ் மோகன், இந்திரன்ஸ், அச்சுத் குமார், சித்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

1990-களின் பின்னணியில் நகரும் இந்தக் கதை, இலங்கை உள்நாட்டுப் போரின் தாக்கத்துடன் தொடங்குகிறது. தமிழீழப் போராளியான ஆர்யா, ராணுவத்துடனான மோதலுக்குப் பிறகு கேரளாவுக்கு தப்பிச் சென்று அங்குள்ள குடிசைப்பகுதியில் வசிக்கும் சில குற்றப்பின்னணி கொண்ட நபர்களின் பாதுகாப்பில் வாழ்கிறார்.

அதே நேரத்தில், தனது அரசியல் லாபத்திற்காக எதிரிகளை அகற்ற திட்டமிடும் கேரள முதலமைச்சர், காவல்துறை உயரதிகாரியின் உதவியுடன் ஒரு கொலை சதியை அரங்கேற்ற முயல்கிறார். ஆனால் திட்டமிடப்பட்ட இலக்கை அந்த கும்பல் அணுகுவதற்கு முன்பே, ஆர்யா அந்த நபரை கொடூரமாகக் கொலை செய்கிறார். அந்தக் கொலையின் பின்னணி என்ன? அதன் விளைவாக ஆர்யாவுக்கும் அவரை பாதுகாத்தவர்களுக்கும் என்ன நேர்கிறது? என்பதற்கு பதில் சொல்வதே அனந்தன் காடு.

ஆர்யா, தமிழீழப் போராளி கதாபாத்திரத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் வழக்கம்போல் தனது திறமையை வெளிப்படுத்தியிருப்பதுடன், உணர்ச்சிகரமான தருணங்களிலும் அளவான நடிப்பை வழங்கியுள்ளார்.

குற்ற உலகத்தைச் சேர்ந்த நால்வர் குழுவாக வரும் முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ் மற்றும் அப்பானி சரத் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு வலு சேர்க்கின்றனர். குறிப்பாக நட்பு, தியாகம் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் இவர்களின் நடிப்பு கவனிக்க வைக்கிறது.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள சுனில், விஜயராகவன், சாந்தி பாலச்சந்திரன், ரெஜினா கசாண்ட்ரா, நிகிலா விமல் உள்ளிட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் எஸ். யுவாவின் கேமரா 90-களின் காலகட்டத்தையும் அதன் சூழலையும் இயல்பாக திரையில் கொண்டு வந்துள்ளது. பி. அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை, ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சி மிக்க காட்சிகளுக்கு கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ரோஹித் வி.எஸ். வரியத்தின் படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாக நகர்த்த உதவுகிறது.

இருப்பினும், படத்தின் மிகப்பெரிய சர்ச்சை அதன் கருத்தியல் அணுகுமுறையில்தான் இருக்கிறது. தமிழீழப் போராளியை மையமாக வைத்து கதை சொல்லப்பட்டிருந்தாலும், சில கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் தமிழர்கள் குறித்த எதிர்மறை பார்வையை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளதாக தோன்றுகிறது. குறிப்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை எதிர்மறை கோணத்தில் சித்தரித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தக்கூடிய அம்சமாக உள்ளது.

திரைக்கதை எழுதியுள்ள முரளி கோபி, ஒரு உண்மைச் சம்பவத்தின் தாக்கத்துடன் வணிகரீதியான ஆக்‌ஷன் கதையை உருவாக்க முயற்சித்துள்ளார். கதை சொல்லும் விதம் சுவாரஸ்யமாக இருந்தாலும், சில கருத்துகள் மற்றும் காட்சிகள் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் வாய்ப்பைக் கொண்டுள்ளன.

இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் படத்தை வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்தியுள்ளார். ஆனால் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் இறுதியில் ராஜஸ்தான் என பல இடங்களை இணைக்கும் கதைக்களம் சில நேரங்களில் தேவையற்ற சிக்கலாக உணரப்படுகிறது.

“அனந்தன் காடு” படத்திற்கு மதிப்பீடு 2.5/5

ஆக்‌ஷனும் சர்ச்சையும் கலந்த ஒரு வித்தியாசமான திரையனுபவம்