“நிழல்” ஏ.கே. குமார் இயக்கத்தில் செல்வி ராஜேந்திரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை அபு பக்கர். இந்த படத்தில் ஸ்ரீ விஷாகன், ஜனனி குணசீலன், கௌஷிக் கோபாலன், திவ்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழிலதிபரின் மகனான ஹரி விஜய் மற்றும் அவரது நண்பர்கள் மீது மருத்துவர் ஜனனி கொடூரமான தாக்குதலை நடத்துகிறார். உயிருக்கு போராடும் நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க தொழிலதிபரின் மனைவி, ஒரு காவல்துறை அதிகாரியின் உதவியுடன் விசாரணையை தொடங்குகிறார். விசாரணை முன்னேறும்போது ஜனனியின் வாழ்க்கையில் மறைந்திருந்த பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. ஜனனி ஏன் இந்த பாதையை தேர்ந்தெடுத்தார்? அவரது கோபத்தின் காரணம் என்ன? என்பதே “நிழல்” படத்தின் கதை
படத்தின் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜனனி, கதையை முழுவதுமாக தன் தோளில் சுமந்து செல்கிறார். பழிவாங்கும் உணர்ச்சி, மன உளைச்சல், கோபம் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.
காவல்துறை அதிகாரியாகவும் ஜனனியின் காதலனாகவும் வரும் விஷாகன், தனது கதாபாத்திரத்தை இயல்பாக கையாள்கிறார். எதிர்மறை வேடத்தில் நடித்துள்ள ஹரி விஜய், கதையின் முக்கிய தூணாக இருந்து வில்லத்தனத்தை நம்ப வைக்கிறார். திரைக்கதையின் முக்கிய திருப்பத்தை உருவாக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கெளஷிக் கவனம் ஈர்க்கிறார்.
அபிஷேக் சங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களுக்கான பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் மோகன்குமார், இரவுக் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகளை திறமையாக பதிவு செய்துள்ளார். காட்சிகளின் ஒளி, நிழல் மற்றும் கேமரா கோணங்கள் படத்தின் பரபரப்பை அதிகரிக்க உதவுகின்றன.
எம். அபுபக்கரின் இசையில் பாடல்கள் சாதாரணமாக இருந்தாலும், பின்னணி இசை கதையின் சஸ்பென்ஸை வலுப்படுத்துகிறது. குறிப்பாக முக்கிய தருணங்களில் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
படத்தொகுப்பாளர் தினேஷ், முதல் பாதியில் மர்மத்தை சிதைக்காமல் கதையை நகர்த்தியதோடு, இரண்டாம் பாதியில் திருப்பங்களை சரியான வேகத்தில் இணைத்து திரைக்கதையை விறுவிறுப்பாக மாற்றியுள்ளார்.
பழிவாங்கும் கதைக்களம் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல என்றாலும், அதை வித்தியாசமான அணுகுமுறையுடன் கையாள முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ஏ.கே.குமார். கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், அவர்களின் வலிகளையும் அழுத்தமாக பதிவு செய்திருப்பது படத்தின் சிறப்பம்சமாகும்.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தாலும், அதற்கான விளைவுகளை ஒருநாள் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற கருத்தை மையமாக வைத்து, சுவாரஸ்யமான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக ‘நிழல்’ படத்தை இயக்குநர் ஏ.கே.குமார் உருவாக்கியுள்ளார். பரபரப்பும், உணர்வும் கலந்த இந்த படம் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
“நிழல்” படத்திற்கு மதிப்பீடு 3/5
பழிவாங்கும் கதையை பரபரப்பான கிரைம் சஸ்பென்ஸாக மாற்றியிருக்கும் “நிழல்”





