“வள்ளுவன்” ஷங்கர் சாரதி இயக்கத்தில் ஷைலே குமார் ராஜேந்திரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை அஸ்வத். இந்த படத்தில் சேத்தன் சீனு, அஷ்னா ஜவேரி, மனோபாலா, சாய் தீனா, பிரேம் குமார், கராத்தே ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மக்களுக்கு உதவும் எண்ணத்துடன் வாழும் இளைஞன் சேத்தன் சீனு, சென்னை நகரில் உணவு டெலிவரி பணியில் ஈடுபட்டு வருகிறார். அதே சமயம், ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் சேவை செய்து வரும் ஆஷ்னா சாவேரியின் மனிதநேய செயல்கள் அவரை ஈர்க்கின்றன. அவருடன் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபடும் சேத்தன் சீனுவுக்கும், ஆஷ்னாவுக்கும் இடையே நெருக்கம் உருவாகிறது.
இந்நேரத்தில், முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரது உடலில் சில தமிழ் சொற்கள் எழுதப்பட்டிருப்பது காவல்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. வழக்கை விசாரிக்கச் சென்ற போலீஸ் அதிகாரியும் அதே முறையில் உயிரிழக்க, தொடர் கொலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த வழக்கின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அதிகாரி பிரேம் குமார், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் எழுதப்பட்ட வார்த்தைகள் திருக்குறளுடன் தொடர்புடையவை என்பதை கண்டறிகிறார். அதே நேரத்தில், கொல்லப்பட்ட அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பதும் வெளிச்சத்துக்கு வருகிறது.
விசாரணை முன்னேறியபோது, சில சூழ்நிலைகள் காரணமாக சேத்தன் சீனுவின் மீது பிரேம் குமாருக்கு சந்தேகம் எழுகிறது. ஆனால் உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், உண்மையான குற்றவாளி யார்? இந்த கொலைகளின் பின்னணி என்ன? என்பதே “வள்ளுவன்” படத்தின் கதை
நாயகனாக நடித்துள்ள சேத்தன் சீனு, வடசென்னை இளைஞனின் தோற்றத்திலும், பின்னர் பொறுப்பான மனிதராகவும் இயல்பாக நடித்திருக்கிறார். பாடல், சண்டைக் காட்சிகள் என வணிக சினிமாவுக்குத் தேவையான அம்சங்களிலும் தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார்.
ஆஷ்னா சாவேரி ஆரம்பத்தில் வழக்கமான கதாநாயகி போல் தோன்றினாலும், கதையின் இறுதிக்கட்டத்தில் அவரது கதாபாத்திரம் எதிர்பாராத பரிமாணத்தை பெறுகிறது.
பிரேம் குமார், மனோபாலா, சாய் தீனா, மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா உள்ளிட்ட துணை நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, சென்னை நகரின் இயல்பான சூழலையும், கதையின் உணர்வுகளையும் அழகாக பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் அஸ்வத்தின் பாடல்கள் ரசிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதோடு, பின்னணி இசையும் காட்சிகளுக்கு வலுசேர்க்கிறது.
கதையின் முக்கிய திருப்பங்களை அனுபவமுள்ள ரசிகர்கள் முன்கூட்டியே யூகிக்க முடிந்தாலும், படத்தொகுப்பாளர் சான் லோகேஷின் வேகமான தொகுப்பு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்த உதவுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டத்தின் பலவீனம், அதிகாரம் மற்றும் பணத்தின் தாக்கம் போன்ற சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இயக்குநர் சங்கர் சாரதி கதையை உருவாக்கியுள்ளார். குற்றவாளிகள் தப்பித்து செல்லும் சமூக அமைப்பை கேள்விக்குள்ளாக்கும் விதமாகவும், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும் படம் பேசுகிறது.
குறைந்த பட்ஜெட்டில் உருவான படமாக இருந்தாலும், தன் கருத்தை நேர்த்தியாகவும் துணிச்சலாகவும் திரையில் பதிவு செய்திருக்கும் இயக்குநர் சங்கர் சாரதி, தரமான சமூகத் திரில்லரை வழங்கியிருக்கிறார்.
“வள்ளுவன்” படத்திற்கு மதிப்பீடு 3/5
கவனம் ஈர்க்கும் குற்றத் திரில்லர்





