“ராவ் பகதூர்” வெங்கடேஷ் மகா இயக்கத்தில் அனுராக் ரெட்டி, சரத் சந்திரா, சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி, ஈஸ்வரன் விஜயராகவன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஸ்மரன் சாய். இந்த படத்தில் சத்யதேவ் காஞ்சரானா, விகாஸ் முப்பலா, தீபா தாமஸ், ஆனந்த பாரதி, பால பராசர், பிரனய் வகா, குணால் கௌஷிக், மாஸ்டர் கிரண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அரச குடும்பத்தைச் சேர்ந்த சத்ய தேவ், வயதின் முதிர்ச்சி, உடல்நலக் குறைவு மற்றும் மனக்குழப்பத்தால் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளார். மருத்துவர்கள் கணித்த காலத்தையும் தாண்டி உயிருடன் இருக்கும் அவரை, கடந்த காலத்தில் நிகழ்ந்த ஒரு தீராத சந்தேகம் தொடர்ந்து வாட்டுகிறது. அந்த மர்மத்திற்கான விடை கிடைத்தால்தான் நிம்மதியாக உயிர் விட முடியும் என்று தனது நெருங்கிய நண்பரும் மருத்துவருமான விகாஸிடம் அவர் கூறுகிறார். அந்த ரகசியம் என்ன? அவரது காதல், குடும்பம், மகனுடன் ஏற்பட்ட விரிசல் மற்றும் கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் என்ன? என்பதற்கான பதிலை ஆழமான உளவியல் திரில்லர் பாணியில் சொல்லும் திரைப்படம் தான் ‘ராவ் பகதூர்’.
தெலுங்கு சினிமாவில் அரிதாக உருவாகும் உளவியல் சார்ந்த பீரியட் படங்களில் ஒன்றாக ‘ராவ் பகதூர்’ தனித்துவம் பெறுகிறது. சாதி, நிறவெறி, அதிகார ஆணவம் போன்ற சமூகக் கருத்துகளை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் இணைத்து இயக்குநர் வெங்கடேஷ் மஹா வித்தியாசமான அனுபவத்தை வழங்கியுள்ளார்.
ராமப்பா ராவ் பகதூர் கதாபாத்திரத்தில் சத்ய தேவ் தனது நடிப்பால் படத்தை முழுவதுமாக தாங்கிச் செல்கிறார். இளமை மற்றும் முதுமை என இரு காலகட்டங்களிலும் உடல்மொழி, முகபாவனை, வசன உச்சரிப்பு என ஒவ்வொரு அம்சத்திலும் வித்தியாசத்தை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார். கோபம், மனஅழுத்தம், குற்றவுணர்வு, சந்தேகம் என பல உணர்ச்சிகளை இயல்பாக வெளிப்படுத்தி தனது திறமையை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
மருத்துவராக நடித்துள்ள விகாஸ் மப்புலா கதையின் நகர்வுக்கு உறுதுணையாக இருக்கிறார். நாயகி தீபா தாமஸ், தனது கதாபாத்திரத்தை நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தியதோடு, இறுதியில் வரும் முக்கியமான திருப்பத்தில் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகிறார். பாலா பரசர், ஆனந்த் பாரதி, பிரணய் வேகா, மாஸ்டர் கிரண் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரங்களில் சிறப்பாக பொருந்தியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் பரமர், வழக்கமான பீரியட் படங்களின் காட்சியமைப்பிலிருந்து விலகி, வண்ணங்களையும் ஒளியையும் புதுமையாக பயன்படுத்தியுள்ளார். கதாபாத்திரங்களின் மனநிலைக்கு ஏற்ப காட்சிகளை வடிவமைத்த விதம் படத்திற்கு தனித்துவமான அழகை சேர்க்கிறது.
ஸ்மரன் சாயின் பின்னணி இசை, படத்தின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகிறது. வசனங்கள் இல்லாத தருணங்களிலும் இசையின் மூலம் கதாபாத்திரங்களின் மனநிலையை உணர வைக்கும் முயற்சி பாராட்டத்தக்கது.
கலை இயக்குநர் ரோஹன் சிங் வடிவமைத்த அரண்மனை, பொருட்கள் மற்றும் காலக்கட்ட சூழல் அனைத்தும் படத்திற்கு நம்பகத்தன்மையை அளிக்கின்றன. குறிப்பாக நிறங்களின் பயன்பாடு கதையின் உளவியல் அடுக்குகளை பிரதிபலிக்கிறது.
கதை, திரைக்கதை, படத்தொகுப்பு என மூன்று பொறுப்புகளையும் ஏற்றுள்ள வெங்கடேஷ் மஹா, சாதாரண பீரியட் கதையைத் தாண்டி சமூக விமர்சனத்தையும் உளவியல் சஸ்பென்ஸையும் இணைத்து வலுவான படைப்பை வழங்கியுள்ளார். சில காட்சிகள் சற்று நீளமாக இருப்பதும், படத்தின் ஓட்டம் சில இடங்களில் மந்தமாக உணரப்படுவதும் சிறிய குறைகளாக இருந்தாலும், சத்ய தேவின் நடிப்பும், கதையின் திருப்பங்களும் அந்த குறைகளை மறக்க வைக்கின்றன.
தொடக்கத்தில் திகில் கலந்த மர்மமாக ஆரம்பிக்கும் படம், அடுத்தடுத்த திருப்பங்கள் மூலம் பார்வையாளர்களை இறுதிவரை ஈர்த்து செல்கிறது. தெலுங்கு சினிமாவின் வழக்கமான கமர்ஷியல் பாணியை தவிர்த்து, உலகத் தரத்தில் ஒரு உளவியல் பீரியட் திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குநர் வெங்கடேஷ் மஹாவுக்கு பாராட்டுகள்.





