“அந்தரன்” திரை விமர்சனம்

“அந்தரன்” சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் எம்.கே.சாம்பசிவம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஹரி எஸ்.ஆர். இந்த படத்தில் பிரஜின் பத்மநாபன், இவானா வருண், அனுபமா குமார், எம்.கே.சாம்பசிவம், செந்தி குமாரி, அதிதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

காதலிக்கும் இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்படுவதால் அதிர்ச்சியில் ஆழும் இவானா வருண், சில மாதங்களுக்குப் பிறகு குடும்பத்தின் வற்புறுத்தலால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்த சில நாட்களிலேயே வருங்கால கணவர் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். அதன்பின் மீண்டும் அவருக்காக பார்க்கப்படும் மணமகனும் விபத்தில் பலியாகிறார்.

தொடர்ச்சியாக நிகழும் இந்த மரணங்கள் சாதாரண சம்பவங்கள் அல்ல, திட்டமிட்ட கொலைகள் என்பது காவல்துறையின் விசாரணையில் தெரியவருகிறது. ஆனால் எந்த தடயமும் கிடைக்காததால், வழக்கு காவல்துறை அதிகாரி பிரஜினிடம் ஒப்படைக்கப்படுகிறது. விசாரணையின் போது இவானாவுடன் நெருக்கம் ஏற்படும் பிரஜின், அவரை காதலிக்கத் தொடங்குகிறார். இறுதியில் இந்த மர்மக் கொலைகளுக்கு பின்னால் இருப்பவர் யார்? பிரஜின் உண்மையை கண்டுபிடித்தாரா? என்பதையே பல திருப்பங்களுடன் சொல்லுகிறது “அந்தரன்”.

காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள பிரஜின், கதாபாத்திரத்திற்கேற்ற கம்பீரத்தையும் உணர்ச்சியையும் சமநிலையாக வெளிப்படுத்தியிருக்கிறார். விசாரணைக் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.

நாயகியாக நடித்துள்ள இவானா வருண், தொடர்ந்து சோதனைகளை எதிர்கொள்ளும் பெண்ணின் மனநிலையை நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய எமோஷனல் காட்சிகள் கதைக்கு கூடுதல் வலிமை சேர்க்கின்றன.

எம்.கே. சாம்பசிவம், செந்தி குமாரி, அனுபமா குமார், அதிரன், ரமேஷ்பாபு கீதா, பத்மன், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் உள்ளிட்ட துணை நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர்.

கிஷோர் ராமச்சந்திரனின் ஒளிப்பதிவு, கிரைம் திரில்லருக்குத் தேவையான பதற்றத்தையும், காதல் காட்சிகளுக்கான மென்மையையும் அழகாக பதிவு செய்துள்ளது.

ஹரி.எஸ்.ஆர் இசையில் காதல் பாடல்கள் இனிமையாக அமைந்துள்ளன. பின்னணி இசை, சஸ்பென்ஸ் தருணங்களில் விறுவிறுப்பை அதிகரித்து காட்சிகளின் தாக்கத்தை உயர்த்துகிறது.

இக்னேஷியஸ் அஸ்வின் மற்றும் சதீஷ் குரோசாவாவின் படத்தொகுப்பு, தேவையற்ற நீளமின்றி கதையை சுறுசுறுப்பாக நகர்த்துகிறது.

எழுத்து, இயக்கத்தை கவனித்துள்ள சந்தோஷ் ராவணன், வழக்கமான தொடர் கொலை கதைக்களத்திற்கு பல எதிர்பாராத திருப்பங்களை சேர்த்து, கடைசி வரை யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் அனுபவத்தை உருவாக்கியிருக்கிறார். பார்வையாளர்களை பல கதாபாத்திரங்கள் மீது சந்தேகப்பட வைக்கும் திரைக்கதை, இறுதியில் வித்தியாசமான விளக்கத்துடன் ஆச்சரியப்படுத்துகிறது.

சில கதாபாத்திரங்களின் பின்னணி முழுமையாக விளக்கப்படாதது மற்றும் ஓரிரு லாஜிக் கேள்விகள் இருந்தாலும், அவை படத்தின் விறுவிறுப்பை பெரிதாக பாதிக்கவில்லை. தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்பை தக்கவைத்து, சஸ்பென்ஸ் ரசிகர்களுக்கு திருப்திகரமான அனுபவத்தை வழங்குகிறது.

“அந்தரன்” படத்திற்கு மதிப்பீடு 3/5

சஸ்பென்ஸ் ரசிகர்களை கவரும் “அந்தரன்”