“பெத்தி” திரை விமர்சனம்

“பெத்தி” புச்சி பாபு சனா இயக்கத்தில் விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும். இந்த படத்திற்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். இந்த படத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யெந்து சர்மா, போமன் இரானி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

1980-களில் ஆந்திராவில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் வாழும் இளைஞன் பெத்தி. தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் விளையாட்டின் மீது அளவில்லா ஆர்வம் கொண்டவன். தனது கிராம மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்பதே அவனது கனவு.

ஆனால் அந்த கிராமம் அதிகாரம் மற்றும் அரசியல் செல்வாக்கு கொண்ட எதிரிகளால் ஒடுக்கப்படுகிறது. தனது கிராமத்தின் மரியாதையையும் உரிமைகளையும் காப்பாற்ற, பெத்தி விளையாட்டை ஒரு ஆயுதமாக பயன்படுத்த முடிவு செய்கிறான். கிரிக்கெட் மற்றும் மல்யுத்தப் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து, கிராம மக்களை ஒன்றிணைக்கிறான்.

இந்தப் போராட்டத்தில் காதல், துரோகம், அரசியல் சதிகள் மற்றும் தனிப்பட்ட இழப்புகளையும் சந்திக்கிறான். பல தடைகளை தாண்டி, தனது கிராமத்திற்கு அடையாளமும் பெருமையும் கிடைக்கச் செய்வதே “பெத்தி” படத்தின் மீதி கதை

ராம் சரணின் முழு அர்ப்பணிப்பும் உழைப்பும் படத்தில் தெளிவாகத் தெரிந்தாலும், அதனை தாங்கிச் செல்லும் திரைக்கதை பல இடங்களில் தடுமாறுகிறது. மூன்று மணி நேரத்திற்கு மேல் நீளும் படம், தேவையற்ற காட்சிகள் மற்றும் மெதுவான நகர்வால் சோர்வை ஏற்படுத்துகிறது.

ஜான்வி கபூரின் கதாபாத்திரம் கதைக்கு பெரிதாக உதவாமல், சில பாடல்கள் மற்றும் காதல் காட்சிகளுக்குள் மட்டுமே சுருங்கி விடுகிறது.

ஸ்ருதி ஹாசன் ஒரு பாடளுக்கு மட்டும் நடனமாடியிருக்கிறார். குறுகிய நேரத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

சிவராஜ்குமார் வரும் காட்சிகளில் தனது அனுபவத்தால் கவனம் ஈர்க்கிறார். ஆனால் அவருக்கும் திரைக்கதையில் அதிக இடம் வழங்கப்படாததால், தாக்கம் குறைந்து விடுகிறது.

ஜெகபதி பாபுவின் வில்லத்தனமான நடிப்பு சில இடங்களில் வேலை செய்தாலும், கதாபாத்திர வடிவமைப்பு பலவீனமாக இருப்பதால் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

போமன் இரானி போன்ற திறமையான நடிகருக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. அவரது கதாபாத்திரம் நினைவில் நிற்கும் அளவுக்கு எடுபடவில்லை.

ஒளிப்பதிவு ஆர். ரத்னவேலுவின் கேமரா வேலை பல காட்சிகளில் பிரம்மாண்டமாக இருந்தாலும், சில முக்கிய காட்சிகளில் அதிகப்படியான VFX மற்றும் Green Screen பயன்பாடு இயற்கைத்தன்மையை பாதிக்கிறது. குறிப்பாக கிராமப்புற சூழல்கள் மற்றும் ரயில் தொடர்பான காட்சிகள் செயற்கையாக தோன்றுகின்றன.

எடிட்டிங் நவீன் நூலியின் எடிட்டிங் படத்தின் மிகப்பெரிய பலவீனங்களில் ஒன்று. மூன்று மணி நேரத்திற்கு மேல் நீளும் திரைக்கதையில் தேவையற்ற காட்சிகள், நீட்டிக்கப்பட்ட காதல் பகுதிகள் மற்றும் மீண்டும் மீண்டும் வரும் ஹீரோ உயர்த்தும் காட்சிகள் காரணமாக படம் சோர்வை ஏற்படுத்துகிறது. படத்தின் நீளத்தை இன்னும் 20–30 நிமிடங்கள் குறைத்திருக்கலாம்

இசை & பின்னணி இசை ஏ.ஆர். ரஹ்மானின் இசை எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பின்னணி இசையும் சில இடங்களில் சாதாரணமாகவே கடந்து செல்கிறது

படத்தின் தயாரிப்பு மதிப்பு உயர்ந்ததாக இருந்தாலும், VFX தரம் பல முக்கிய காட்சிகளில் குறைவாக தெரிகிறது. குறிப்பாக ரயில் மற்றும் சில வெளிப்புற காட்சிகளில் கணினி கிராபிக்ஸ் வெளிப்படையாக தெரிந்து, காட்சிகளின் நம்பகத்தன்மையை பாதிக்கிறது.

இயக்குநர் புஜ்ஜி பாபு சனா விளையாட்டு, சமூக பிரச்சினை மற்றும் மாஸ் சினிமா ஆகியவற்றை ஒன்றாக இணைக்க முயற்சித்துள்ளார். ஆனால் இந்த கலவை பல இடங்களில் குழப்பத்தை உருவாக்குகிறது. படம் தனது அடையாளத்தைத் தேடும் நிலையில் இருப்பது போல தோன்றுகிறது; ஒரு சமூக நாடகமா, விளையாட்டு படமா, அல்லது மாஸ் கமர்ஷியல் படமா என்பது தெளிவாக தெரியவில்லை.

விளையாட்டு காட்சிகளில் உணர்ச்சி மற்றும் நம்பகத்தன்மை குறைவாக இருப்பதால், நாயகனின் வெற்றிப் பயணம் பல இடங்களில் செயற்கையாக தோன்றுகிறது. சமூக நீதி, சாதி, வறுமை போன்ற முக்கிய கருத்துகளை தொட முயன்றாலும், அவற்றை ஆழமாக ஆராயாமல் ஹீரோ மையப்படுத்தப்பட்ட மாஸ் தருணங்களுக்காக விட்டுவிடுகிறது.

 

“பெத்தி” படத்திற்கு மதிப்பீடு 2.5/5

வலுவான திரைக்கதை இல்லாததால் “பெத்தி” மனதில் பதியத் தவறுகிறது.