“சட்டென்று மாறுது வானிலை” விமர்சனம்

“எக்ஸாம்” பாபு விஜய் இயக்கத்தில் பி.வி.பிரேம்ஸ் – சர்மிளா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை கிரிஷ் கோபாலகிருஷ்ணன். இந்த படத்தில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு, ஸ்ரீமன், சத்யன், ஆதித்யா கதிர், சரவண சுப்பையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

காதல், த்ரில்லர், குடும்ப சென்டிமென்ட் மற்றும் சைபர் குற்றங்களை கலந்து கமர்ஷியல் பாணியில் உருவாகியுள்ள இந்த படம், ஆரம்பத்தில் ஒரு இளமையான காதல் கதையாக நகர்ந்து பின்னர் மர்மம் மற்றும் சதிகள் நிறைந்த திரில்லராக மாறுகிறது.

ஐடி ஊழியரான ஜெய், மீனாட்சியை பார்த்தவுடன் காதலில் விழுகிறார். மறுநாளே தனது காதலை தெரிவித்து அவரை திருமணம் செய்து கொள்கிறார். தேன்நிலவுக்காக கொடைக்கானல் செல்லும் ஜெய் – மீனாட்சி தம்பதி, கருடா ராம் நடத்தும் சொகுசு விடுதியில் தங்குகிறார்கள். அங்கு எதிர்பாராத ஒரு சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள். இதற்கிடையில், ஜெய் – மீனாட்சியை பிரித்து, தனது மகளுக்கு மறுமணம் செய்து வைக்க மீனாட்சியின் அமைச்சர் தந்தை திட்டமிடுகிறார்.

ஒருபுறம் விடுதியில் ஏற்பட்ட பிரச்சனை, மறுபுறம் மனைவியை பிரிக்க நடைபெறும் சதி என பல சிக்கல்களில் ஜெய் சிக்கித் தவிக்கிறார். அந்த சூழ்நிலையில் திடீரென மீனாட்சி காணாமல் போகிறார். இதற்கு ஜெய்தான் காரணம் என சந்தேகிக்கும் போலீசார் அவரை கைது செய்கின்றனர். மகிழ்ச்சியாக தொடங்கிய திருமண வாழ்க்கை பல அதிர்ச்சி சம்பவங்களால் சிக்கலாக மாற, அந்த பிரச்சனைகளையெல்லாம் ஜெய் சமாளித்து மீண்டும் தனது மனைவியுடன் சேர்ந்தாரா இல்லையா என்பது தான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்துள்ள ஜெய், வழக்கமான தனது துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். விஜய் ரசிகர் என்ற அடையாளத்தை சில இடங்களில் வெளிப்படையாக காட்டியிருப்பது ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும், சில காட்சிகளில் அது கதாபாத்திரத்தின் இயல்பை பாதிக்கிறது. ஆனால் காதல் மற்றும் உணர்ச்சி காட்சிகளில் ஜெய் சிறப்பான நடிப்பை கொடுத்து கவனம் ஈர்க்கிறார்.

மீனாட்சி கோவிந்தராஜன், அழகும் நடிப்பும் கலந்த நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். தந்தை மீது கோபம், கணவர் மீது காதல், நண்பரிடம் வெறுப்பு என பல உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

யோகி பாபு தனது வழக்கமான டைமிங் காமெடியால் சிரிக்க வைக்க முயன்றாலும், பெரும்பாலான இடங்களில் நகைச்சுவை எடுபடவில்லை. இருப்பினும், ஆதித்யா கதிரின் சில காட்சிகள் சிரிப்பை வரவழைக்கின்றன.

கருடா ராம் வில்லனாக தனது அனுபவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சத்யன், ஸ்ரீமன், சரவண சுப்பையா உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சரியாக செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன், படத்தை மிகவும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கொடைக்கானலின் அழகையும், நாயகன்-நாயகி ஜோடியின் காதல் காட்சிகளையும் அழகாக பதிவு செய்துள்ளார். கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் துள்ளலாக இருக்க, பின்னணி இசை தேவையான இடங்களில் விறுவிறுப்பை கூட்டுகிறது.

படத்தொகுப்பில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற உணர்வு ஏற்படுகிறது. சில காட்சிகள் நீளமாக இருப்பது திரைக்கதையின் வேகத்தை பாதிக்கிறது.

இயக்குநர் பாபு விஜய், இணையம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களின் தனியுரிமை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை கமர்ஷியல் பாணியில் சொல்ல முயன்றிருக்கிறார். நல்ல கருத்துடன் உருவான இப்படம், திரைக்கதையில் இன்னும் வலிமை சேர்த்திருந்தால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

“சட்டென்று மாறுது வானிலை” படத்திற்கு மதிப்பீடு 3.5/5

ஒருமுறை பார்க்கக்கூடிய கமர்ஷியல் த்ரில்லர்.