படத்தில் சூர்யாவா நாயகன் அல்லது ஆர்.ஜே.பாலாஜியா என்ற கேள்வி எழும் அளவுக்கு இருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘ஜெய்பீம்’ படத்தில் நேர்மையான வழக்கறிஞராக நடித்த சூர்யா, இதில் அநீதிகளை எதிர்த்து சீறும் கருப்புசாமியாக ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேசமயம், மனிதனாக வரும் காட்சிகளில் உணர்ச்சிபூர்வமான நடிப்பாலும் கவனம் ஈர்க்கிறார்.
பேபி கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆர்.ஜே.பாலாஜி, மாஸ் வில்லன் தோற்றத்துடன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது உடல் மொழி, வசன உச்சரிப்பு மற்றும் கம்பீரமான திரைநடை கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறது.
திரிஷா, வழக்கறிஞராக சில காட்சிகளில் தோன்றினாலும், கதையோடு முழுமையாக ஒன்றிப் போகவில்லை. பாடல், நீதிமன்ற காட்சி, உணர்ச்சி தருணங்கள் என பல இடங்களில் வந்தாலும், அவரது கதாபாத்திரம் ஆழமில்லாமல் அமைந்துள்ளது.
நட்டி, இந்திரன்ஸ், சுவாசிகா, சிவதா உள்ளிட்ட துணை நடிகர்கள் தங்களது அனுபவமான நடிப்பால் கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, படத்தை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால் பல இடங்களில் அதிகப்படியான ஒளி மற்றும் சிவப்பு நிற டோன்கள் கண்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிறது. சண்டைக் காட்சிகளில் அதிகப்படியான கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டிருப்பதும் இயல்பை குறைக்கிறது.
சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் இன்ஸ்டா ரீல்ஸ் பாணியில் அமைந்துள்ளன. பாடல் வரிகள் தெளிவாக கேட்காத அளவுக்கு இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னணி இசையும் பல இடங்களில் அதிக சத்தமாக இருந்து காட்சிகளின் தாக்கத்தை குறைக்கிறது.
படத்தொகுப்பாளர் கலைவாணன், நீளமான கதையை சுவாரஸ்யமாக நகர்த்த முயற்சித்திருக்கிறார். இருந்தாலும் சில காட்சிகள் தேவைக்கு அதிகமாக நீள்கின்றன.
எழுதி இயக்கியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, நீதித்துறையில் நடக்கும் ஊழல், விலைபோகும் நீதியரசர்கள், பொதுமக்கள் எதிர்கொள்ளும் அநீதிகள் போன்ற பல முக்கியமான விஷயங்களை தைரியமாக பேச முயற்சித்திருக்கிறார். ஆனால் அதை கடவுள் பின்னணியுடன் சொல்லாமல், ஒரு சாதாரண மனிதனின் போராட்டமாக சொல்லியிருந்தால் படம் இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
“கருப்பு” படத்திற்கு மதிப்பீடு 3/5





