“டார்க்” கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் ஏபிவி மாரன் மற்றும் கணேஷ் கே பாபு தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை மனு ரமேசன். இந்த படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நடராஜன் சுப்ரமணியம், கே. பாக்யராஜ், VTV கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கே. பாக்யராஜுக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவர், மற்ற இருவரையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த வீடு பேய் வீடு என்ற பெயர் பெற்று, யாரும் குடியேறத் தயங்கும் நிலையில் உள்ளது. ஆனால் குறைந்த வாடகை என்பதால், அந்த வீட்டின் பின்னணி தெரிந்திருந்தும் நாயகன் அஜய் கார்த்திக் அங்கு குடியேற முடிவு செய்கிறார். ஆரம்பத்தில் எந்த அச்சமும் இல்லாமல் வாழும் அஜய் கார்த்திக், சில நாட்கள் கழித்து வீட்டுக்குள் விளக்க முடியாத அமானுஷ்ய சம்பவங்களை சந்திக்கத் தொடங்குகிறார். அவை நாளுக்கு நாள் தீவிரமடைய, அவரது வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது. ஒரு கட்டத்தில், அஜய் கார்த்திக் மர்மமான முறையில் தன்னைத்தானே தாக்கிக்கொண்டு உயிரிழக்கிறார். அதே சமயம், வீட்டு உரிமையாளரான கே. பாக்யராஜும் மரணமடைகிறார்.
இந்த இரட்டை மரணத்தை விசாரிக்க வரும் காவல்துறை அதிகாரி நட்டி, சம்பவ இடத்தில் எதிர்பாராத அதிர்ச்சியை சந்திக்கிறார். உயிரிழந்ததாக கருதப்பட்ட அஜய் கார்த்திக் திடீரென கண் விழித்து, நட்டியை எச்சரித்துவிட்டு மீண்டும் மயங்கி விழுகிறார். இந்த விசித்திர சம்பவம் நட்டியின் சந்தேகத்தை அதிகரிக்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜயின் நிலை, அவர் கூறிய மர்ம எச்சரிக்கை, மேலும் தனக்கு முன்பே அறிமுகமில்லாத ஒருவர் தனது பெயரை அறிந்திருப்பது போன்ற புதிர்கள், விசாரணையை வேறு திசைக்கு இட்டுச் செல்கின்றன. தொடர்ந்து நடக்கும் விசாரணையில், அந்த வீட்டின் இருண்ட வரலாறு, அமானுஷ்ய சம்பவங்களின் உண்மை மற்றும் தொடர் மர்ம மரணங்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் அதிர்ச்சி தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிச்சத்திற்கு வருகின்றன. அந்த மர்மத்தின் முடிச்சுகளை திகில், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் அவிழ்ப்பதே “டார்க்” திரைப்படத்தின் கதை.
நாயகன் அஜய் கார்த்திக், பயமில்லாத இளைஞராக அறிமுகமாகி, பின்னர் மனஅழுத்தம் மற்றும் அச்சத்தில் சிக்கித் தவிக்கும் மனிதராக தனது நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு கட்டத்திலும் அவரது உடல்மொழி மற்றும் முகபாவனைகள் கதாபாத்திரத்திற்கு நம்பகத்தன்மையை அளிக்கின்றன.
காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள நட்டி, வழக்கமான விசாரணை அதிகாரியாக தொடங்கி, மர்மத்தின் ஆழத்தை உணரும் தருணங்களில் தனது அனுபவமான நடிப்பால் கவர்கிறார். குறைந்த நேரமே வந்தாலும் கே. பாக்யராஜ் தனது திரை இருப்பால் கதைக்கு முக்கியத்துவம் சேர்த்துள்ளார். அஞ்சனா நேத்ரன், விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி உள்ளிட்டவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ரவி சக்தி, இருளை வெறும் காட்சியாக அல்லாமல் கதையின் ஒரு முக்கிய அம்சமாக மாற்றியிருக்கிறார். குறைந்த வெளிச்சம், நிழல்கள் மற்றும் கேமரா கோணங்கள் மூலம் ஒவ்வொரு காட்சியிலும் பதற்றத்தை உருவாக்கியுள்ளார்.
இசையமைப்பாளர் மனு ரமேஷ், அதிக சத்தங்களை நம்பாமல் அமைதியையும் நுணுக்கமான பின்னணி இசையையும் பயன்படுத்தி திகில் உணர்வை அதிகரித்திருக்கிறார். பல இடங்களில் மௌனமே பயத்தை உருவாக்கும் ஆயுதமாக மாறுகிறது.
படத்தொகுப்பாளர் கதிரேஷ் அலகேஷன் காட்சிகளை விறுவிறுப்பாக தொகுத்து, அடுத்த நொடியில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை தொடர்ந்து உருவாக்குகிறார். கலை இயக்குநர் சண்முகராஜா வடிவமைத்துள்ள வீடு, கதையின் முக்கிய கதாபாத்திரமாகவே மாறி, அச்ச உணர்வை அதிகரிக்கிறது.
ஒரு மர்மமான வீட்டை மையமாக வைத்து நகரும் திகில் திரைப்படமாக உருவாகியுள்ள ‘டார்க்’, வழக்கமான பேய் கதையை உளவியல் திகிலுடன் இணைத்து விறுவிறுப்பாக சொல்ல முயற்சிக்கிறது. ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை பதற்றத்தை குறைக்காமல் நகரும் திரைக்கதை, ரசிகர்களுக்கு வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை வழங்குகிறது.
ஒரே வீட்டை மையமாகக் கொண்டு கதை நகர்வதும், சில இடங்களில் லாஜிக் குறைபாடுகள் இருப்பதும் சிறிய குறைகளாக இருந்தாலும், அவற்றை மீறி சஸ்பென்ஸ், உளவியல் திகில் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் மூலம் படம் ரசிகர்களை இறுதிவரை இருக்கையில் கட்டிப்போடுகிறது.
“டார்க்” படத்திற்கு மதிப்பீடு 3.5/5
விறுவிறுப்பான ஹாரர் திரில்லர்





