ரிஷிகாந்த் – அனிஷ்மா இணையும் “மொத ராத்திரி”… போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரம்!

பான் இந்திய அளவில் தரமான திரைப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் புதிய தமிழ் திரைப்படமான ‘மொத ராத்திரி’ முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்களிடையே ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு திரைப்படத்தை திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்வது என்பது ஒட்டுமொத்த படக்குழுவின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் என அனைத்தும் சேர்ந்ததுதான். இயக்குநராக ராஜா கருப்பசாமிக்கு இது முதல் படமாக இருந்தபோதிலும், அனுபவம் வாய்ந்த இயக்குநருக்குரிய முதிர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் படப்பிடிப்பை குறித்த காலத்திற்குள் முடித்து கொடுத்தார். திரைக்கதையின் மீது அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் இடையறாத கவனம் பாராட்டுக்குரியவை. இந்தத் திரைப்படம் நல்லபடியாக வர உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றனர்.

இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்து கொண்டதாவது, “‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது எனக்கு நிறைவாக உள்ளது. எனது கதையில் நம்பிக்கை வைத்து, ஒவ்வொரு கட்டத்திலும் ஊக்கமளித்து, முழுமையான படைப்புச் சுதந்திரத்தை வழங்கிய தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோருக்கு என் மனப்பூர்வமான நன்றி. ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், அனைத்து நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் அயராது உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் இப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் உள்ளோம்” என்றார்.

இந்தப் படத்தில் சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவையும், அசோக் அர்ஜுனன் படத்தொகுப்பையும், பரத் சங்கர் இசையையும் கவனித்துள்ளனர். ஆடை வடிவமைப்பை பூர்ணிமா ராமசாமி, கலை இயக்கத்தை ஏ. பாலுமகேந்திரா, விளம்பர வடிவமைப்பை வியாகி மேற்கொண்டுள்ளனர்.

தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் இசை வெளியீடு, டிரெய்லர் வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.