யூடியூப் தளத்தின் மூலம் பிரபலமடைந்து, தற்போது வெள்ளித்திரையில் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வரும் இளம் திறமையாளர்களின் பட்டியலில், ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படமும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே இந்தப் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நகைச்சுவை கலந்த தோற்றத்தில் படத்தை அறிமுகப்படுத்திய டைட்டில் கிளிம்ப்ஸ், சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில் வெளியாகவுள்ள இப்படம் குறித்து நடிகர் பாரத் மற்றும் இயக்குநர் நிரஞ்ஜன் தங்களது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.
ஒரு திரைப்படத்தின் அடையாளத்தை தீர்மானிப்பதில் அதன் தலைப்புக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் ‘மாஸ்டர் பீஸ்’ என்ற தலைப்பு பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அதே பெயரில் ஏற்கனவே கன்னடம் மற்றும் தெலுங்கில் திரைப்படங்கள் வெளியானதால், புதிய தலைப்பைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘மிஸ்டர் பாரத்’ என்ற தலைப்பை பரிந்துரைத்தார். அந்த தலைப்பு படக்குழுவினருக்கும் மிகவும் பிடித்ததால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெற்றிப் படத்தின் தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதற்காக ஏ.வி.எம். ஸ்டுடியோஸிடம் இருந்து அதிகாரப்பூர்வ அனுமதி (NOC) பெற்று, அதையே படத்தின் தலைப்பாக அறிவித்தனர்.
லோகேஷ் கனகராஜ் வழங்கும் இந்தப் படத்தை சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ளனர். மேலும், ஒரே திரைப்படத்தின் மூலம் ஆறு புதிய திறமையாளர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாகவும் ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது. நடிகர் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகும் நிலையில், இயக்குநர் நிரஞ்ஜன், இசையமைப்பாளர் பிரணவ் முனிராஜ், கலை இயக்குநர் பாவ்னா கோவர்தன் மற்றும் படத்தொகுப்பாளர் திவாகர் டெனிஸ் ஆகியோரும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர்.
இதுகுறித்து பேசிய நடிகர் பாரத், “இதற்கு முன்பு ‘பிரின்ஸ்’, ‘லவ் டுடே’ போன்ற படங்களில் நண்பர் கதாபாத்திரங்களில் நடித்திருந்தேன். முதல் முறையாக கதாநாயகனாக நடிப்பது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். அதிலும் நாங்கள் ஆறு பேரும் ஒரே படத்தின் மூலம் அறிமுகமாகுவது மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் நான் ஒரு பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டு அலுவலராக பணிபுரியும், மிகவும் அப்பாவியான இளைஞனாக நடித்துள்ளேன். ஒரு பெண் தன்னை காதலிக்கிறாள் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எளிமையான குணம் கொண்ட கதாபாத்திரம். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, தாத்தாவின் அரவணைப்பில் வளரும் இளைஞனாக வருகிறேன். தாத்தாவாக நடித்துள்ள ஆர். சுந்தர்ராஜனுடன் வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு சிரிப்பையும், உணர்வுகளையும் தரும்” என்றார்.
கதாநாயகி சம்யுக்தா விஸ்வநாதன், பொம்மை வடிவமைப்பாளராக நடித்துள்ளார். கடந்த காலத்தில் ஏற்பட்ட குடும்ப அனுபவங்கள் காரணமாக வாழ்க்கை மீதும் உறவுகள் மீதும் வேறுபட்ட பார்வை கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையில், பாரத்தின் எளிமையும் தூய்மையான மனமும் புதிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த இருவருக்கிடையே உருவாகும் உணர்வுப்பூர்வமான உறவை மையமாகக் கொண்டே படம் நகர்கிறது.
இயக்குநர் நிரஞ்ஜன் எழுதி இயக்கியுள்ள ‘மிஸ்டர் பாரத்’, காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்ட முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. பிரம்மாண்ட காட்சிகளை விட, மனதில் பதியும் கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.





