மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியின் ஹாட்ரிக்… பிரைம் வீடியோவில் “திரிஷ்யம் 3”!

இந்திய சினிமாவின் மிகவும் வெற்றிகரமான திரில்லர் திரைப்படத் தொடர்களில் ஒன்றான ‘திரிஷ்யம்’ தொடரின் அடுத்த அத்தியாயமான ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் உலகளாவிய பிரத்யேக ஸ்ட்ரீமிங் வெளியீட்டை பிரைம் வீடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த திரைப்படம் ஜூன் 18 முதல் பிரைம் வீடியோவில் மலையாளத்துடன் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளிலும் வெளியாகிறது.

இயக்குநர் ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம், PEN Studios, Panorama Studios வழங்க, ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில் Aashirvad Cinemas நிறுவனம் மூலம் உருவாகியுள்ளது. மோகன்லால், மீனா, சித்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் மீண்டும் இணைந்துள்ளனர்.

திரிஷ்யம் மற்றும் திரிஷ்யம் 2 ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகும் இந்த மூன்றாவது பாகம், ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பம் எதிர்கொள்ளும் புதிய அச்சுறுத்தல்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கடந்த காலத்தில் மறைத்து வைக்கப்பட்ட ரகசியங்கள் மீண்டும் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கும் சூழலில், தனது குடும்பத்தை பாதுகாக்க ஜார்ஜ்குட்டி மீண்டும் ஒரு முறை புத்திக்கூர்மையுடன் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்.

திரிஷ்யம் 2 சம்பவங்களுக்குப் பிறகு வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக்கொண்ட ஜார்ஜ்குட்டி, தனது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தையும் உருவாக்கியிருக்கிறார். ஆனால் அந்த திரைப்படத்தின் உண்மைக் கதையை ஆராயும் பத்திரிகையாளர்கள், மகள் அஞ்சுவின் திருமண முயற்சியைச் சுற்றிய மர்மங்கள் மற்றும் பழைய எதிரிகளின் மீள்வரவு ஆகியவை அவரது வாழ்க்கையை மீண்டும் ஆபத்துக்குள் தள்ளுகின்றன.

பிரைம் வீடியோ இந்தியாவின் Content Licensing பிரிவின் இயக்குநரும் தலைவருமான மனீஷ் மெங்கானி கூறுகையில்..,

“இந்திய சினிமாவில் திரிஷ்யம் போன்ற சாதனையை நிகழ்த்திய திரைப்படத் தொடர்கள் மிகக் குறைவு. ஒரு தசாப்தத்திற்கு முன்பு மலையாளத்தில் தொடங்கிய இந்தக் கதை, இன்று மொழிகளையும் நாடுகளையும் தாண்டி கொண்டாடப்படுகிறது. ஜீத்து ஜோசப்பும் மோகன்லாலும் இணைந்து உருவாக்கிய இந்த மூன்று திரைப்படங்கள், நீடித்த கதை சொல்லலின் சிறந்த உதாரணமாகும். ஜார்ஜ்குட்டி இனி ஒரு கதாபாத்திரம் மட்டுமல்ல; இந்திய சினிமாவின் கூட்டு நினைவின் ஒரு பகுதியாக மாறியுள்ளார். இந்தியாவின் மிக வெற்றிகரமான திரைப்படத் தொடர்களில் ஒன்றான திரிஷ்யம் 3-ஐ உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமை கொள்கிறோம்,” என்றார்.

 

இயக்குநர் ஜீத்து ஜோசப் கூறுகையில்..,

“திரிஷ்யம் 3 மூலம் கதையைத் தொடர்வது மட்டுமல்ல, ஜார்ஜ்குட்டியின் மனநிலையை இன்னும் ஆழமாக ஆராய வேண்டும் என்பதே என் நோக்கம். குடும்பத்தை காப்பாற்ற எடுத்த முடிவுகளால் உருவான மனிதராக அவர் இருக்கிறார். ஆனால் அவரது மனதின் ஆழத்தில், பயம், நிச்சயமின்மை மற்றும் கடந்த காலத்தின் சுமையுடன் வாழும் ஒரு தந்தை இருக்கிறார். இந்த அத்தியாயம் அந்த மன அழுத்தங்களின் தாக்கத்தை ஆராய்கிறது. அதனால் இது இந்தத் தொடரில் மிகவும் நெருக்கமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான படைப்பாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இதை பிரைம் வீடியோவில் காணப்போகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.

 

நடிகர் மோகன்லால் கூறுகையில்..,

“ஜார்ஜ்குட்டி என்ற கதாபாத்திரம் பல ஆண்டுகளாக ரசிகர்களுடன் பயணித்து வருகிறது. அவர்கள் அளித்த அன்பை நான் மிகவும் மதிக்கிறேன். திரிஷ்யம் ரசிகர்களுக்கு பிடிக்க காரணம், அதன் மர்மக் கதையைத் தாண்டி குடும்பம், அன்பு மற்றும் உயிர்வாழ்தல் பற்றிய மனிதநேயமான கதையாக இருப்பதுதான். ஜார்ஜ்குட்டிக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. திரிஷ்யம் 3 இப்போது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.

ஜூன் 18 முதல் “திரிஷ்யம் 3” திரைப்படத்தை ப்ரைம் வீடியோவில் கண்டுகளியுங்கள்.