“டபுள் ஆக்குபன்சி” திரை விமர்சனம்

“டபுள் ஆக்குபன்ஸி” அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் ACS அருன்குமார் (Benzz Media) & குஷ்பூ சுந்தர் (Avni Movies) தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சாம் சி.எஸ். இந்த படத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன்,விடிவி கணேஷ், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கும் தம்பதியரான போஸ் வெங்கட் மற்றும் வினோதினி, எண்ணற்ற முயற்சிகளுக்குப் பிறகு கடவுளை நாடுகிறார்கள். கடவுள் அருளால் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்த சில நிமிடங்களிலேயே அந்த குழந்தை உயிரிழக்கிறது. மனமுடைந்த போஸ் வெங்கட் மீண்டும் கடவுளிடம் மன்றாட, தெய்வ அருளால் குழந்தை மீண்டும் உயிர் பெறுகிறது.

ஆனால், உயிர்பெற்ற குழந்தை வித்தியாசமான ஒரு அதிசயத்துடன் வாழத் தொடங்குகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஆணாகவும் மாறும் அரிய நிலை அந்த குழந்தைக்கு ஏற்படுகிறது. “ரஜினி” என்று பெயரிடப்படும் அந்தக் குழந்தை, ஒரு உடலில் இரு உயிர்களாக வளர்கிறது.

காலப்போக்கில், ஆணாகவும் பெண்ணாகவும் வாழும் அந்த இரு தனித்துவமான அடையாளங்களும் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் வெறுப்பும் வளர்த்துக் கொள்கின்றன. இளம் வயதில் பெற்றோரை விபத்தில் இழந்த ரஜினி, தனது வாழ்க்கையைத் தேடி சென்னைக்கு செல்கிறார்.

அங்கு பகலில் பெண்ணாகவும், இரவில் ஆணாகவும் வாழும் சூழலில் ஆராய்ச்சியாளர் வினோத் கிஷன் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் சம்யுக்தா என இரு காதல்கள் குறுக்கிடுகின்றன. தங்களின் உண்மையான நிலையை காதலர்களிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் அவர்கள் இறுதியில் காதலில் வெற்றி பெற்றார்களா என்பதே “டபுள் ஆக்குபன்ஸி” படத்தின் கதை.

ஆண் மற்றும் பெண் ரஜினி என்ற இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ள சந்தோஷ் மற்றும் ரேஷ்மா வெங்கடேஷ், தங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்திருந்தாலும், அவர்களது நடிப்பு முழுமையாக மனதில் பதியும் வகையில் அமையவில்லை. உருவமாற்றத்தால் ஏற்படும் மனஅழுத்தம், காதல் குழப்பம் மற்றும் உணர்ச்சிகரமான தருணங்கள் போன்ற காட்சிகளில் தேவையான ஆழம் மற்றும் தாக்கம் பல இடங்களில் குறைவாகவே தெரிகிறது. குறிப்பாக உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய காட்சிகளில் இருவரின் நடிப்பும் ஒரே மாதிரியான வெளிப்பாடுகளுக்குள் சிக்கிக்கொள்வதால் பார்வையாளர்களுடன் பெரிய அளவில் இணைவதில்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்றிருந்தாலும், அந்த சவாலான வேடங்களுக்கு தேவையான வலுவான நடிப்பை இருவரும் முழுமையாக வழங்கத் தவறியுள்ளனர்.

வினோத் கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், வி.டி.வி. கணேஷ் ஆகியோர் திரையில் தோன்றினாலும், அவர்களது கதாபாத்திரங்கள் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வினோத் கிஷனுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும், திரைக்கதையின் பலவீனத்தால் அவரது திறமை முழுமையாக வெளிப்படவில்லை. சம்யுக்தா விஸ்வநாதனின் கதாபாத்திரமும் மேற்பரப்பிலேயே இருந்து விடுகிறது; கதைக்கு எந்தவித முக்கியத்துவத்தையும் சேர்க்கவில்லை. காமெடிக்காக களமிறக்கப்பட்ட வி.டி.வி. கணேஷின் வசனங்களும் காட்சிகளும் சில இடங்களில் சிரிப்பை வரவழைக்க முயன்றாலும் பெரும்பாலான இடங்களில் எடுபடாமல் போகின்றன. அவரின் அனுபவம் இருந்தும், பலவீனமான எழுத்து காரணமாக காமெடி பகுதிகள்கூட பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

சாம் சி.எஸ் இசை இந்தப் படத்தின் மிகப்பெரிய பலவீனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் அவரது பல படங்களில் பின்னணி இசை தேவையற்ற சத்தமாகவும், காட்சிகளின் உணர்வுகளை மீறி பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது. ஆனால் சமீபத்தில் வெளியான “ஹபீபி” திரைப்படத்தில் அவர் வழங்கிய இசை ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு தரமாக இருந்ததால், இசையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தோன்றியது. அந்த நம்பிக்கையை இந்தப் படம் முற்றிலுமாக உடைத்துவிடுகிறது. பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. அதைவிட பின்னணி இசை பல காட்சிகளில் தேவையற்ற சத்தமாக மாறி, காட்சிகளின் தாக்கத்தை உயர்த்துவதற்கு பதிலாக பார்வையாளர்களுக்கு கடுப்பையும் சோர்வையும் ஏற்படுத்துகிறது. இசை மூலம் படத்திற்கு உயிர் கொடுக்க வேண்டிய இடத்தில், இந்த முறை சாம் சி.எஸ் இசை படத்தின் அனுபவத்தை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.

ஒளிப்பதிவாளர் சாந்தகுமார் சக்கரவர்த்தியின் பணி இந்தப் படத்தில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பேண்டஸி கதைக்குத் தேவையான பிரம்மிப்பு மற்றும் காட்சி செழுமையை உருவாக்க வேண்டிய இடங்களில் பல காட்சிகள் சாதாரண தொலைக்காட்சி நாடகங்களின் தோற்றத்தை நினைவூட்டுகின்றன. வண்ணமயமான காட்சிகளை உருவாக்க முயற்சி தெரிந்தாலும், அவை கதையுடன் ஒன்றிப் பயணிக்காமல் செயற்கையாகத் தோன்றுகின்றன. குறிப்பாக பேண்டஸி உலகத்திற்கான காட்சியமைப்புகள் புதுமையோ பிரமிப்போ அளிக்காமல், குறைந்த தரமான காட்சிப்படுத்தலாகவே முடிந்துவிடுகின்றன. இதனால் ஒளிப்பதிவு படத்தின் பலமாக இல்லாமல், மற்ற தொழில்நுட்ப குறைகளுடன் சேர்ந்து கவனிக்கப்படும் ஒரு அம்சமாகவே மாறியுள்ளது.

ஆனால் படத்தின் மிகப்பெரிய பிரச்சினை அதன் திரைக்கதையே. ஆரம்பத்தில் கடவுளின் அருள், பின்னர் மரபணு ஆராய்ச்சி, அதன்பின் மருத்துவ விளக்கங்கள் என ஒரு விஷயத்திற்கே பல காரணங்களை கூறி கதை நகர்கிறது. இதனால் படம் எந்த வகை உலகத்தில் நடக்கிறது என்ற குழப்பம் பார்வையாளர்களுக்கே ஏற்படுகிறது.

ஒரு கட்டத்தில் லாஜிக்கை முழுவதுமாக மறந்துவிடும் திரைக்கதை, காதலன் சில நாட்களிலேயே தீர்வு கண்டுபிடிப்பது, பலர் உண்மையை நேரில் பார்த்தும் அதைக் கவனிக்காமல் இருப்பது போன்ற காட்சிகளால் நம்பகத்தன்மையை இழக்கிறது. படத்தில் உருவாக்கப்படும் பல சிக்கல்கள் மிகவும் எளிதாக தீர்க்கப்படுவதும் ஏமாற்றம் அளிக்கிறது.

இரண்டாம் பாதியில் கதையின் வேகம் நகர்வேனா என்பதுபோல் நகர்கிறது. மரபணு ஆராய்ச்சி, மருந்து, வில்லன்களின் திட்டம் போன்ற பகுதிகள் சுவாரஸ்யத்தை கூட்டுவதற்கு பதிலாக படத்தை இழுத்தடிக்கின்றன. கிளைமாக்ஸும் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாமல் சாதாரணமாக கடந்து செல்கிறது.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெண்ணாகவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஆணாகவும் மாறும் ஒரு மனிதரின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை நகர்கிறது. இந்த சுவாரஸ்யமான கற்பனைக் கதையை இயக்குநர் அஸ்வின் கந்தசாமி கையில் எடுத்திருந்தாலும், அதை நம்பகமான திரைக்கதையாக மாற்றுவதில் முழுமையாக வெற்றி பெறவில்லை.

பிரபலமான தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தாலும் படத்தின் கதையிலும் அதை விளம்பரப்படுத்துவதிலும் சிறிது கவனம் காட்டியிருக்கலாம்.

வித்தியாசமான ஒன்லைன் கதையுடன் தொடங்கும் “டபுள் ஆக்குபன்சி”, திரைக்கதை நகர நகர தனது பலவீனங்களால் தடுமாறும் படமாக மாறிவிடுகிறது.

 

“டபுள் ஆக்குபன்சி” படத்திற்கு மதிப்பீடு 2/5

“டபுள் ஆக்குபன்சி” ஒரு டபுள் டிஸ்அப்பாயின்ட்மென்ட்