லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில், நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் ஜூலை 31 அன்று வெளியாக உள்ளது.
திரையுலகிலும், வர்த்தக வட்டாரங்களிலும் அதிக கவனத்தை ஈர்த்துள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில், சமீபத்தில் வெளியான ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்திலேயே 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று இந்த பாடல் சாதனை படைத்துள்ளது.
வண்ணமயமான காட்சிகள், துள்ளலான இசை மற்றும் இளைஞர்களை கவரும் நடன அமைப்புகளுடன் உருவாகியுள்ள இந்த பாடல், தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக சந்தீப் கிஷனின் மாஸான திரையிருப்பும், நடிகை ஃபரியா அப்துல்லாவின் கிளாசிக்கல் மற்றும் வெஸ்டர்ன் ஃப்யூஷன் நடன அசைவுகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

மேலும், இயக்குநர் ஜேசன் சஞ்சயின் ஸ்டைலான தோற்றமும் பாடலின் முக்கிய அம்சமாக பேசப்பட்டு வருகிறது. இசை, காட்சியமைப்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றின் சரியான கலவையாக அமைந்துள்ள ‘சிக்மா ஸ்டைல்’ பாடல், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.
இந்த வெற்றியால் ‘சிக்மா’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ள நிலையில், படத்தின் ஆடியோ வெளியீடு, டிரெய்லர் வெளியீடு உள்ளிட்ட அடுத்தடுத்த முக்கிய அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் முதல் படமாகவும், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் முக்கிய திரைப்படமாகவும் இருக்கும் ‘சிக்மா’, இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஜூலை 31-ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் என்ன சாதனை படைக்கும் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.





