சட்டமன்ற உறுப்பினரின் மறுபக்கத்தை பேசும் “கராத்தே பாபு”… வெளியான முதல் பாடல்!

தமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்கள் மற்றும் இணையத் தொடர்களை தயாரித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட், நடிகர் ரவி மோகன் உடன் மூன்றாவது முறையாக இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கராத்தே பாபு’. ‘அகிலன்’ மற்றும் ‘பிரதர்’ படங்களைத் தொடர்ந்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரம்மாண்டமான பொருட்செலவில் சுந்தர் ஆறுமுகம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ‘டாடா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கியுள்ளார். ரவி மோகனின் 34-வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘கராத்தே பாபு’ படத்தின் முதல் பாடலான ‘ராசாதி ராசா’ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையில், மீனாட்சி இளையராஜா எழுதி பாடியுள்ள ‘ராசாதி ராசா’ பாடல், வலுவான அரசியல் கருத்துக்களைக் கொண்ட பாடலாக உருவாகியுள்ளது. பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் படத்தின் மூலம், முன்னாள் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் அவர்களின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், கே.எஸ். ரவிக்குமார், சக்தி வாசு, நாசர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் குறித்து பேசிய இயக்குநர் கணேஷ் கே. பாபு, “அரசியல்வாதிகளை மையமாகக் கொண்டு பல திரைப்படங்கள் வந்திருந்தாலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து பெரிதாக பேசப்படவில்லை. ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை இந்த திரைப்படம் ஆராய்கிறது. உணர்வுப்பூர்வமான அரசியல் திரில்லராக ‘கராத்தே பாபு’ உருவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அரசியல், உணர்வு மற்றும் பரபரப்பான திரைக்கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கராத்தே பாபு’, அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் புரமோஷன் அப்டேட்களுடன் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் தற்போது இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.