“வேட்ட சாமி” மூலம் சினிமா பாடகியாக அறிமுகமாகும் வில்லுப்பாட்டு மாதவி!

வில்லுப்பாட்டு கலையின் மூலம் தமிழக மக்களிடையே தனித்துவமான இடத்தைப் பெற்றிருக்கும் நாட்டுப்புறக் கலைஞர் மாதவி, தற்போது வெள்ளித்திரையிலும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். சமூக வலைதளங்களிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள அவர், குறிப்பாக தென் தமிழக திருவிழாக்களில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான ரசிகர்களை திரட்டும் கலைஞராக அறியப்படுகிறார். நாட்டுப்புற இசை மற்றும் பாரம்பரியக் கலையை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

தனது தனித்துவமான குரலாலும் வில்லிசை நிகழ்ச்சிகளாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்த மாதவி, தற்போது ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் இடம்பெறும் ‘சுடலைமாடன் வேட்டைப்பாடல்’ என்ற பாடலை அவர் பாடியுள்ள நிலையில், அதன் ஒலிப்பதிவு அண்மையில் நிறைவடைந்துள்ளது.

7 Miles Per Seconds Productions நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கும் இந்தப் படத்தில் அருள்நிதி மற்றும் அமீர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குநர் தமிழ், விஜி சந்திரசேகர், ‘ஆடுகளம்’ நரேன், அர்ஜெய், ஓக் சுந்தர், மதுசூதனன், மைனா நந்தினி, கவிதா பாரதி, நந்தினி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வீரம், மண்ணின் பாரம்பரியம் மற்றும் தெய்வ நம்பிக்கையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, ‘பம்பர்’ திரைப்படத்தின் இயக்குநர் எம். செல்வகுமார் இயக்கியுள்ளார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவை கவனித்துள்ள நிலையில், ரூபன் படத்தொகுப்பை மேற்கொண்டு வருகிறார். சண்டைக் காட்சிகளை சிறுத்தை கணேஷ் வடிவமைத்துள்ளார்.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது பின்னணிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ‘வேட்ட சாமி’ திரைப்படத்தில் வில்லுப்பாட்டு மாதவி பாடகராக இணைந்திருப்பதை இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.