விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் தயாரித்து வரும் ‘ஹைக்கூ’ திரைப்படம், படப்பிடிப்பு பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் கட்டத்தை எட்டியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் எளிமையான பூஜையுடன் படத்தின் டப்பிங் பணிகளை கதாநாயகன் ஏகன் தொடங்கி வைத்தார்.
இயக்குநர் யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர், விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் தயாரித்துள்ளனர். ஏகன், ஃபெமினா ஜார்ஜ், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா, கோயம்புத்தூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிலையில், அண்மையில் நிறைவடைந்தது.
தற்போது டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படம் இறுதிக்கட்டத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.
இதுகுறித்து தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து கூறியதாவது:
“‘ஹைக்கூ’ திரைப்படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷனின் முக்கியமான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. படப்பிடிப்பு முழுவதும் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பும், திட்டமிட்ட பணியும்தான் இன்று இந்த நிலையை எட்ட காரணமாக உள்ளது. அதே அர்ப்பணிப்புடன் டப்பிங் மற்றும் பிற இறுதிக்கட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன. விரைவில் தரமான படைப்பாக ‘ஹைக்கூ’ ரசிகர்களைச் சந்திக்கும். அதற்கான அனைத்து பணிகளையும் முழு வேகத்தில் மேற்கொண்டு வருகிறோம்,” என்றனர்.
இப்படத்திற்கு ஹரி ஹரன் ராம் கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள நிலையில், சக்தி பிரணேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். இசையை சித்து குமார் அமைத்துள்ளதுடன், கலை இயக்குநராக பிரேம் பணியாற்றியுள்ளார்.
படப்பிடிப்பு நிறைவடைவதற்கு முன்பே, ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டுக்குப் பிந்தைய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் கைப்பற்றியது. இது படத்தின் கதைக்களம் மற்றும் தரத்தின் மீது ஓடிடி தளம் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக படக்குழுவினர் கருதுகின்றனர்.
டப்பிங் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.





