சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் படக்குழுவினர் முன்னிலையில் ரஜினிகாந்த் அவர்களால் வெளியிடப்பட்டது.
KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சாந்தனு பாக்யராஜுடன் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் மையமாக அப்பா–மகன் உறவு அமைந்துள்ளது. குடும்பப் பாசம் மற்றும் உறவுகளின் உணர்வுகளுடன் ஆக்ஷன், கிரைம் மற்றும் பரபரப்பான சம்பவங்களும் கதையில் இடம்பெறுகின்றன.
மதுரையின் மண்ணோடு இணைந்த வாழ்க்கை முறை, அங்குள்ள மனிதர்களின் உறவுகள் மற்றும் அப்பா–மகன் இடையே ஏற்படும் உணர்வுப்பூர்வமான மாற்றங்கள் ஆகியவை படத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரில் சாந்தனு மற்றும் சீமானின் தோற்றங்கள், மதுரையை நினைவுபடுத்தும் கோயில் கோபுரங்கள் மற்றும் பழைய கையெழுத்துப் பிரதியைப் போன்ற வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, படத்தின் தலைப்பும் அப்பா–மகன் உறவை மையமாகக் கொண்ட கதையும் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
KRG Kannan Ravi Group தயாரிப்பில் உருவாகும் 10வது திரைப்படம் என்ற பெருமையையும் ‘ஒரு கைதியின் டைரி’ பெற்றுள்ளது. வித்தியாசமான கதைகள் மற்றும் திறமையான படைப்பாளிகளுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வரும் தயாரிப்பு நிறுவனம், இந்தப் படத்தையும் தரமான கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கி வருகிறது.
இயக்குநர் சுசீந்திரன் குடும்ப உணர்வுகள், ஆக்ஷன், கிரைம் மற்றும் எமோஷன் ஆகியவற்றை இணைத்து ரசிகர்களை கவரும் படைப்புகளை வழங்கியவர். ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டியநாடு’ போன்ற படங்களில் இடம்பெற்றிருந்த உணர்வுப்பூர்வமான குடும்ப அம்சங்களைப் போலவே, அப்பா–மகன் உறவை மையமாக வைத்து விறுவிறுப்பான திரைக்கதையை இப்படத்திலும் கையாண்டுள்ளதாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பு பணிகளை ஒரே கட்டமாக நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
சுசீந்திரன்–சாந்தனு கூட்டணி, சீமானின் முக்கிய கதாபாத்திரம், சாம் சி.எஸ். இசை மற்றும் மதுரை பின்னணி என எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பல அம்சங்களுடன் உருவாகும் ‘ஒரு கைதியின் டைரி’, மோஷன் போஸ்டர் வெளியான நிலையிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் போது எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





