மித்துன் மாணிக்கத்தின் ‘ஃபேமிலி பாய்’ படத்தின் முதல் பாடல் “தீராகணம்” வெளியீடு!

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்த்து வரும் நடிகர் மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஃபேமிலி பாய்’ (Family Boy). இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தீராகணம்..’ என்ற முதல் பாடலையும் அதன் லிரிக்கல் வீடியோவையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

மித்துன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் இப்படத்தில் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்துள்ளார். ஜிஜேந்திரன் V படத்தொகுப்புப் பணிகளையும், C.K. முஜிபுர் ரஹ்மான் கலை இயக்கப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு குடும்ப உறவுகள், ஆக்‌ஷன் மற்றும் திரில்லர் அம்சங்கள் நிறைந்த படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. மெக்கானிக் பிக்சர்ஸ் (Mechanic Pictures) நிறுவனம் சார்பில் மித்துன் மாணிக்கம் தயாரித்துள்ளார். மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP நிறுவனத்தின் சார்பில் முஹம்மத் கனி ஃபைசல் மற்றும் டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். இப்படத்தைத் தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

வரும் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘தீராகணம்..’ தற்போது வெளியாகி இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘சரியா.. சதியா.. நீ என் சகி.. மதியா.. விதியா.. நீ கண்மணி.. இறையா.. இரையா.. இதயம் நீயா..’ எனத் தொடங்கும் இப்பாடலை இயக்குநர் மித்துன் மாணிக்கமே எழுதியுள்ளார். ஆதித்யா RK, மால்வி சுந்தரேசன் மற்றும் அபர்ணா நாராயணன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இனிமையான மெலோடி மற்றும் காதல் உணர்வுகள் நிறைந்த பாடலாக உருவாகியுள்ள ‘தீராகணம்’, இளம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

குறிப்பாக, பாடலின் லிரிக்கல் வீடியோ தொடக்கத்தில் இடம்பெறும் ‘அணுவும் அண்டமும்… அவளும் யானும்… அனைத்தும் காதலே… அவள் என் தீராகணமே…’ என்ற கவித்துவமான வரிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. காதலின் ஆழத்தையும் அழகையும் வெளிப்படுத்தும் இந்த வரிகள், பாடலின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கின்றன.

நடிகர் சூர்யாவால் அடையாளம் காணப்பட்டு திரைத்துறையில் கவனம் பெற்ற மித்துன் மாணிக்கம், நடிப்புடன் பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் எனப் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், அவருடைய எழுத்தில் உருவாகியுள்ள ‘தீராகணம்’ பாடல், ‘ஃபேமிலி பாய்’ திரைப்படத்தின் இசைப் பயணத்திற்கு அழகான தொடக்கமாக அமைந்துள்ளது.