மியூசிக் வீடியோவில் ஒரு முழுநீள காதல் திரைப்பட அனுபவம் – “நீயும் நானும்”!

‘நடுவன்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஷாரி இயக்கத்தில், சரண் என்கிற ஷாரி மற்றும் ஹரிசங்கர் இணைந்து உருவாக்கியுள்ள ‘நீயும் நானும்’ (Neeyum Naanum) மியூசிக்கல் ஆல்பம் இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Hidden Talent Studios தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த இசை ஆல்பம், ஒரு அழகான காதல் கதையை இசையோடு இணைத்து, முழுநீளத் திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இண்டி மியூசிக் உலகில் புதிய முயற்சியாக ஷாரி மற்றும் ஹரிசங்கர் நாராயணன் இணைந்து உருவாக்கியுள்ள இந்தப் படைப்பு இரண்டு மொழிகளில் வெளியாகியுள்ளது. தமிழில் ‘நீயும் நானும்’ என்றும், மலையாளத்தில் ‘ഞാനും’ (Njyaanum) என்றும் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பத்தை Saregama Music நிறுவனம் வெளியிட்டுள்ளது. இரு மொழிகளிலும் காதல், பயணம், மனித உணர்வுகள் ஆகியவற்றை அழகிய காட்சிகளுடன் இசையின் வழியாகக் கடத்துகிறது இந்தப் படைப்பு.

‘நடுவன்’ படத்தை இயக்கியதுடன், ‘இனிது இனிது’ உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்த சரண் என்கிற ஷாரி இப்படத்தை இயக்கியுள்ளார். ‘லேபிள்’, ‘கட்டாளன்’, ‘டோரதி’, ‘சிறை’ உள்ளிட்ட படங்களில் நடித்த ஹரிசங்கர் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சுஜா சுகுமார் நடித்துள்ளார்.

ஷாரி மற்றும் ஹரிசங்கர் இருவரும் தங்களது பயணங்களின்போது நேரில் சந்தித்த காதல் ஜோடிகளையும், அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர். நிஜ வாழ்க்கையில் பயணங்களின் வழியாகக் கண்ட காதல் தருணங்களையும், மனிதர்களின் அழகான நினைவுகளையும் ஒரு இசைக் கதையாக மாற்ற வேண்டும் என்ற எண்ணமே இந்தப் படைப்பின் அடிப்படையாக அமைந்துள்ளது. இதனால் கற்பனையில் உருவான காதல் கதையாக மட்டுமல்லாமல், நிஜமான பயண அனுபவங்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் படைப்பாக இது உருவெடுத்துள்ளது.

யுதிஷ்டரன் (Yuthishtran E) இசையமைத்துள்ள இப்பாடலை ஹனன் ஷா (Hanan Shaah), நிஹால் சாதிக் (Nihal Sadiq) ஆகியோர் தங்களது குரலால் மெருகூட்டியுள்ளனர்.

பேசவும், கேட்கவும் இயலாத இளைஞன் ஒருவன், தனது காதலியின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக அவள் ஆசைப்படும் இடங்களுக்கெல்லாம் அவளுடன் பயணம் செய்கிறான். இந்தப் பயணத்தின் வழியாக வெளிப்படும் இருவரது காதல், அன்பு, பரஸ்பர புரிதல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களே பாடலின் மையமாக அமைந்துள்ளன.

சென்னை, பெங்களூரு, கோவா, விமான நிலையம், ஜெய்ப்பூர், சண்டிகர், சிம்லா, சாங்லா, சிட்குல் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்தின் இயற்கை அழகையும், அங்குள்ள சூழலையும் கதையின் உணர்வுகளுடன் இணைத்து, ஒரு திரைப்படத்துக்கான பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுடன் ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர்.

இதுவரை திரைப்படங்களில் வில்லன் மற்றும் எதிர்மறை கதாபாத்திரங்களில் அதிகம் தோன்றிய ஹரிசங்கர், இந்தப் படைப்பில் முற்றிலும் புதிய பரிமாணத்தில் காதல் நாயகனாக நடித்துள்ளார். தனது காதலியின் மீது காட்டும் அக்கறை, அவளது ஆசைகளை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள், காதலின் நுணுக்கமான உணர்வுகள் என ஒவ்வொரு காட்சியிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு இணையாக சுஜா சுகுமாரும் இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியுள்ளார்.

வழக்கமான மியூசிக் வீடியோக்களின் பாணியைத் தாண்டி, தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு காதல் திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அழகிய இயற்கைக் காட்சிகள், மனதை வருடும் காதல் தருணங்கள் எனப் பயணிக்கும் இந்த ஆல்பத்தின் இறுதியில் இடம்பெறும் எதிர்பாராத திருப்பம் பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இசை, காதல், பயணம், இயற்கை அழகு மற்றும் எதிர்பாராத திருப்பம் எனப் பல அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘நீயும் நானும்’ மியூசிக்கல் ஆல்பம், தற்போது தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே கவனம் பெற்று வருவதுடன் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.