நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்திய நடிகரும் இயக்குநருமான மித்துன் மாணிக்கம், தற்போது ‘ஃபேமிலி பாய்’ (Family Boy) திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். இவர் இயக்கி, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு குடும்ப உணர்வுகள், ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தில், மித்துன் மாணிக்கத்துடன் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை ஜிஜேந்திரன் V மேற்கொண்டுள்ளார். கலை இயக்குநராக C. K. முஜிபுர் ரஹ்மான் பணியாற்றியுள்ளார்.
மெக்கானிக் பிக்சர்ஸ் (Mechanic Pictures) நிறுவனம் சார்பில் மித்துன் மாணிக்கம் இப்படத்தைத் தயாரித்துள்ளார். மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP (Milliennials Movie Production LLP) சார்பில் முஹம்மத் கனி ஃபைசல் மற்றும் டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தை பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
“சிலப்பதிகாரத்தில தொடங்கி சிங்கார சென்னை வரைக்கும், ஒரு பொருள் தொலையும் போது… அத தொலச்சவனுக்குத்தான் அதோட வலி புரியும்…” என்ற வசனத்துடன் தொடங்கும் டீசர், கதையின் பின்னணியைச் சுவாரசியமாக அறிமுகப்படுத்துகிறது.
2020ஆம் ஆண்டு ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், காணாமல் போன ஒரு பொருளைத் தேடி நாயகன் மேற்கொள்ளும் ஒருநாள் பயணத்தில் நடைபெறும் சம்பவங்களைச் சுற்றி நகர்கிறது. இந்தத் தேடலின்போது அவர் சந்திக்கும் மனிதர்கள், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அடுத்தடுத்து நிகழும் எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவற்றை டீசர் சுவாரசியமாக வெளிப்படுத்துகிறது.
குடும்பப் பின்னணியுடன் த்ரில்லர் அம்சங்களும் இணைந்துள்ள இப்படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள பின்னணி இசையும் காட்சியமைப்புகளும் கவனம் ஈர்க்கின்றன. யதார்த்தமான கதைக்களமும் வித்தியாசமான திரைக்கதை அணுகுமுறையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.
மித்துன் மாணிக்கம் இயக்கி, நடித்துள்ள ‘ஃபேமிலி பாய்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் குடும்ப உணர்வுகளையும் பரபரப்பான திருப்பங்களையும் இணைத்துள்ள இப்படம், ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.





