அலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்திலிருந்து, தந்தை – மகள் இடையிலான ஆழமான அன்பையும் பாசத்தையும் உணர்த்தும் ‘ஜோ ஜோ மா’ பாடல் வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ள இப்பாடலை ஹரிசரண் தனது இனிமையான குரலில் பாடியுள்ளார். பாடல் வரிகளை மோகன்ராஜன் எழுதியுள்ளார்.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே இருக்கும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அன்பையும், உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் இசை வழியாக எடுத்துரைக்கிறது ‘ஜோ ஜோ மா’. மனதை வருடும் மெட்டும், உணர்ச்சிகளைத் தூண்டும் வரிகளும் இணைந்து கேட்போரின் இதயங்களை நெகிழச் செய்யும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.
அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல், தந்தை – மகள் பாசத்தின் அடையாளமாக இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தப் பாடலைப் போலவே, குடும்ப உறவுகளின் உன்னதத்தை உணர்த்தும் மற்றொரு பாடலாக ‘ஜோ ஜோ மா’ உருவாகியுள்ளது. டி. இமானின் உணர்வுப்பூர்வமான இசையும், ஹரிசரணின் உருக்கமான குரலும், மோகன்ராஜனின் அர்த்தமுள்ள வரிகளும் பாடலுக்கு கூடுதல் சிறப்பைச் சேர்த்துள்ளன. இந்தப் பாடல் வெளியாகியிருப்பது ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, புஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனிஷ்காந்த் மற்றும் ஆர்யன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்பிரமணி இணைந்து தயாரித்துள்ளனர். ஏ.கே. நாகராஜன் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி, படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணன் மற்றும் கலை இயக்குநர் முனி கிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.





