மருத்துவரும் தொழிலதிபருமான டாக்டர் பி. ராபர்ட் ராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மின்னும் ஓர் இரவு’. தனது எஸ்.பி. ராபர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ள அவர், நாகர்கோவிலைச் சேர்ந்தவர். முன்னணி விளம்பரப் பட இயக்குநரான சிவபிரபு செல்வராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இனிகோ பிரபாகர் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அஞ்சு கிருஷ்ணா அஷோக் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சுப்பிரமணியம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன், அருவி மதன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விறுவிறுப்பும் மர்மமும் நிறைந்த கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’, வரும் நவம்பர் மாதம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் கூறுகையில், “ஒரே இரவில் நடைபெறும் அடுத்தடுத்த சம்பவங்களை மையமாகக் கொண்டு, பரபரப்பான கிரைம் திரில்லராக ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். இரவு நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கும் நோக்கில் காட்டுப் பகுதிக்குச் செல்லும் நண்பர்கள், எதிர்பாராத வகையில் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களில் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த இக்கட்டான சூழலில் இருந்து அவர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள், அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மையக்கதை” என்றார்.
‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படத்திற்கு சுரேஷ்குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரணவ் சூரஜ் இசையமைத்துள்ளார். எஸ்.என். பாசில் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். சண்டைக் காட்சிகளை மிரட்டல் சிவா வடிவமைத்துள்ளார். தேவராஜ் கலை இயக்கத்தையும், சி. முத்து சுடலை ஒப்பனைப் பணிகளையும் கவனித்துள்ளனர். கார்த்திக் தமிழ்வாணன் ஆடை வடிவமைப்பையும், பாவிஷி பாலன் படப்பிடிப்புத் தளப் புகைப்படங்களையும் கையாண்டுள்ளனர். இப்படத்தின் மக்கள் தொடர்புப் பணிகளை நிகில் முருகன் மேற்கொள்கிறார்.
ஒரே இரவில் நிகழும் மர்மமான சம்பவங்கள், நண்பர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் மற்றும் அதிலிருந்து அவர்கள் மீள்வதற்கான போராட்டம் எனப் பரபரப்பான கதையம்சத்துடன் உருவாகியுள்ள ‘மின்னும் ஓர் இரவு’ திரைப்படம், நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.





