“சைக்கிள் கேப்” திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை ஷெர்ரி அகர்வால்!

தெலுங்கு, பஞ்சாபி, இந்தி மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்ற நடிகை ஷெர்ரி அகர்வால், தற்போது ‘சைக்கிள் கேப்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.

1990-களின் காதலில் நிறைந்திருந்த அழகான அப்பாவித்தனம், இனிமையான நினைவுகள் ஆகியவற்றை இன்றைய தலைமுறையின் ரசனைக்கு ஏற்ற வகையில் சொல்லும் இசை மற்றும் காதலை மையமாகக் கொண்ட படமாக ‘சைக்கிள் கேப்’ உருவாகியுள்ளது. இசை, காதல் மற்றும் மனிதர்களின் இயல்பான உணர்வுகளைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த இரண்டு தலைமுறையினரின் காதல் அனுபவங்களை ஒரே கதையில் இணைக்கிறது.

ட்யூப்லைட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், எம்.ஆர். பாரதி இயக்கியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸுடன் இணைந்து ஷெர்ரி அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஷெர்ரி அகர்வால் கூறுகையில், “ஒரு நடிகையாக ‘சைக்கிள் கேப்’ திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக அமைந்தது. படப்பிடிப்புத் தளத்தில் அனைவரும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் பழகினர். ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படக்குழுவினருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டுள்ளது.

ட்யூப்லைட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், தயாரிப்பாளரும் கதாநாயகனுமான நவாஸ், இயக்குநர் எம்.ஆர். பாரதி, ஒளிப்பதிவாளர் சாலமன், ஹேமந்த் செல்வராஜ், எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சுஜா சூர்ய நிலா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் நிச்சயம் ரசிகர்களின் மனதைக் கவரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.

ஏற்கனவே தெலுங்கில் ‘ஏப்ரல் 28த் எம் ஜரிகிந்தி?’, ‘ராம் அசுர்’, ‘ஐ ஹேட் யூ’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஷெர்ரி அகர்வால் நடித்துள்ளார். தற்போது டீசர் வெளியாகியுள்ள ‘எந்தவாருகானி’ மற்றும் ‘பெனாமி’ ஆகிய தெலுங்குப் படங்களிலும், ‘ஆகர்ஷிதா’ என்ற கன்னடப் படத்திலும் நடித்துள்ளார். மேலும், ‘கௌஷிகி’, ‘ஐபிஎஸ் துபே’ ஆகிய இந்திப் படங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

திரைப்படங்களைத் தாண்டி, சௌபால் தளத்தில் வெளியாகி யூடியூப்பிலும் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும் பஞ்சாபி இணையத் தொடரான ‘ரேஞ்ச்’ தொடரிலும் நடித்திருக்கிறார். டி-சீரிஸ், ஜீ மியூசிக், ரெட் ரிப்பன் மியூசிக் உள்ளிட்ட இசை நிறுவனங்களின் தயாரிப்பில் வெளியான பல பஞ்சாபி மற்றும் இந்தி இசை வீடியோக்களிலும் பங்கேற்றுள்ளார்.

பல்வேறு மொழிகளில் தனது நடிப்புப் பயணத்தைத் தொடர்ந்து வரும் ஷெர்ரி அகர்வாலுக்கு, தமிழில் அறிமுகமாகும் ‘சைக்கிள் கேப்’ திரைப்படம் முக்கியமான மைல்கல்லாக அமையவுள்ளது. 90-களின் காதல் நினைவுகளையும் இன்றைய தலைமுறையின் உணர்வுகளையும் இசையுடன் இணைத்துச் சொல்லும் இப்படம், அனைத்து வயதினரிடமும் வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.