ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட ஜீவாவின் “தகப்பன்” பட முதல் பாடல்!

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கி வரும் திரைப்படம் ‘தகப்பன்’. இப்படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ தற்போது வெளியாகியுள்ளது. இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் இப்பாடலை வெளியிட்டுள்ளார்.

மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு பாடலாசிரியர் பா. விஜய் வரிகள் எழுதியுள்ளார். முருகவேல் தனது குரலால் பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளார். தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான ஆழமான பாசம், பிரிவால் ஏற்படும் வலி, மகனுக்காக ஒரு தந்தையின் மனதில் நிறைந்திருக்கும் அன்பு என பல்வேறு உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக தமிழ் திரைப்படப் பாடல்களில் தந்தை – மகன் அல்லது தந்தை – மகள் இருவரும் இணைந்து மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களும், அவர்களுக்கிடையேயான பாசமும் அதிகம் சித்தரிக்கப்படும். ஆனால், ‘தங்கப்புள்ள’ பாடல் அதிலிருந்து மாறுபட்டு, தனது மகனைப் பிரிந்து வாழும் தந்தையின் மனநிலையைப் பேசுகிறது. மகனின் வாழ்க்கையில் நிகழும் சந்தோஷமான தருணங்களை நேரில் இருந்து கொண்டாட முடியாமல், தொலைவில் இருந்தபடியே யாருக்கும் தெரியாமல் ரசிக்கும் தந்தையின் ஏக்கத்தை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்துள்ளது.

மென்மையான இசைக்கோர்வை, மனதைத் தொடும் பா. விஜய்யின் வரிகள், முருகவேலின் உணர்ச்சிகரமான குரல் ஆகியவை பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன. வெளிப்படையாகச் சொல்ல முடியாத தந்தையின் அன்பையும், மகனுக்காக அவர் மனதில் சுமக்கும் உணர்வுகளையும் அழகான காட்சிகளுடன் இப்பாடல் எடுத்துரைக்கிறது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை கதைக்களமாகக் கொண்டு, கிராமத்து வாழ்வியல், குடும்ப உறவுகள் மற்றும் மனித உணர்வுகளைப் பேசும் படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது.

‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு ஜீவா முழுமையான கிராமத்துப் பின்னணியில் நடிக்கும் இப்படத்தில், ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.

படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், திரைப்படம் முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே அதன் சாட்டிலைட் உரிமையை ZEE தமிழ் நிறுவனமும், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை ZEE5 நிறுவனமும் பெற்றுள்ளன.

வரும் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ள ‘தகப்பன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தந்தை – மகன் உறவின் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ‘தங்கப்புள்ள’ முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.