‘பலாகம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் வேணு எல்தண்டி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘எல்லம்மா’. தில் ராஜு வழங்க, சிரிஷ் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் பாடலை பிரம்மாண்டமான முறையில் உருவாக்கியுள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் அவற்றின் பாரம்பரிய கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில், 100 நாட்டுப்புற இசைக் கலைஞர்களுடன் இணைந்து இந்தப் பாடலை அவர் பதிவு செய்துள்ளார்.
இந்திய நாட்டுப்புற இசையின் தனித்துவத்தையும், பல்வேறு பகுதிகளின் பாரம்பரிய இசை மரபுகளையும் ஒருங்கிணைத்து உருவாகியுள்ள இப்பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் உருவாகியுள்ள இந்த டைட்டில் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.
‘எல்லம்மா’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 5-ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது.






