எதிர்பார்ப்பை எகிறவைத்த “அன்பே டயானா”… வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம், வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வண்ணமயமான புதிய போஸ்டரின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே வெளியான ஒவ்வொரு அப்டேட்டின் மூலமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘அன்பே டயானா’, தற்போது வெளியீட்டு தேதியை அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் புதிய போஸ்டர், படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

போஸ்டரில் மணமக்கள் அலங்காரத்தில் கதாநாயகன் பாரி இளவழகன் மற்றும் கதாநாயகி ரம்யா ரங்கநாதன் காரின் மீது அமர்ந்திருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவர்களைச் சுற்றி குடும்பத்தினரும் நண்பர்களும் மகிழ்ச்சியுடன் நிற்கும் தோற்றம், திருவிழா சூழலை நினைவூட்டுகிறது. வண்ணக் கொடிகள், இசை மற்றும் கொண்டாட்ட உணர்வுகளால் நிரம்பிய இந்த போஸ்டர், படத்தின் குடும்பப் பின்னணி மற்றும் ஜாலியான தன்மையை வெளிப்படுத்துகிறது.

‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ‘நீக்’ (NEEK) திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.

‘குட் நைட்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் வழங்கும் மற்றுமொரு இதயப்பூர்வமான படைப்பாக ‘அன்பே டயானா’ உருவாகியுள்ளது. இப்படத்தை யுவராஜ் கணேசன், சத்யா கரிகாலன் மற்றும் இரா. சரவணன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட Cross-Cultural Love Story ஆக உருவாகியுள்ளது. வடசென்னை நடுத்தரக் குடும்ப வாழ்க்கை, காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ் மற்றும் பாக்கியம் சங்கர் எழுதியுள்ளனர்.

காதல், குடும்ப உறவுகள் மற்றும் ஒன்றாக இருப்பதன் மகிழ்ச்சியை கொண்டாடும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ‘அன்பே டயானா’, வரும் ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகி குடும்ப ரசிகர்களை கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.