தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் ஜெய் கதையின் நாயகனாக நடிக்கிறார். ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, தென்காசியில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பூஜையுடன் தொடங்கியுள்ளது.
அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கும் இப்படத்தில், ஜெய்க்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். ஹாரர் காமெடி பாணியில் உருவாகும் இப்படத்தைத் தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயச்சந்திரன் கலை இயக்கத்தையும், வி. ஜே. சபு ஜோசப் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
தென்காசியில் நடைபெற்ற படப்பிடிப்பு தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், ஐஏஎஸ்., சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கேமராவை இயக்கி வைத்தார். தொழிலதிபர் எஸ். சாமிநாத பாண்டியன் முன்னிலையில், தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் கிளாப் அடித்துப் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், தொடர்ந்து 23 நாட்கள் தென்காசியில் படப்பிடிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தியாகராஜா டாக்கீஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கத்தில் ஜெய் நடிக்கும் இந்த ஹாரர் காமெடி திரைப்படத்தின் தொடக்கம், ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் தலைப்பு உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






