லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் இப்படம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ‘சிக்மா’வும் இணைந்துள்ளது. படத்திலிருந்து வெளியான ‘சிக்மா ஸ்டைல்’ மற்றும் ‘அய்யய்யோ அம்மாடி’ ஆகிய பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
படத்தின் கதைக்களம் குறித்த முக்கிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், டீசர் மற்றும் பாடல்கள் வாயிலாக வெளியான காட்சிகள், வண்ணமயமான காட்சியமைப்பு, நகைச்சுவை, எனர்ஜி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த உலகத்தை ‘சிக்மா’ கொண்டிருப்பதை உணர்த்துகின்றன.
குறிப்பாக, வேகமும் உற்சாகமும் நிறைந்த ‘சிக்மா ஸ்டைல்’ பாடலுக்கு மாறாக, மெலோடி பின்னணியில் அமைந்துள்ள ‘அய்யய்யோ அம்மாடி’ பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இரு பாடல்களும் படத்தின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளதால், முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக இப்படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
படத்தின் பணிகள் திட்டமிட்ட கால அட்டவணைப்படி நிறைவு பெற்றுள்ளதாக லைகா புரொடக்ஷன்ஸ் தெரிவித்துள்ளது. இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சயின் தொழில்முறை அணுகுமுறை, தெளிவான செயல்பாடு மற்றும் ஒவ்வொரு பணியிலும் அவர் காட்டிய கவனம் ஆகியவற்றையும் தயாரிப்பு நிறுவனம் பாராட்டியுள்ளது.
இதுகுறித்து லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே.எம். தமிழ் குமரன் கூறுகையில், “‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளது. குறிப்பாக பாடல்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பு எங்களது உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் சுவாரஸ்யம் குறையாமல் இருக்க அதன் மையக்கதை மற்றும் முக்கிய அம்சங்களை ரகசியமாக வைத்துள்ளோம். இதுவரை வெளியான காட்சிகள் மூலம் ஜேசன் சஞ்சய் உருவாக்கியுள்ள வண்ணமயமான பொழுதுபோக்கு உலகத்தின் சிறு பார்வையை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்கியுள்ளோம்” என்றார்.
‘சிக்மா’ படத்திற்காக பல்வேறு புதுமையான விளம்பர மற்றும் மார்க்கெட்டிங் முயற்சிகளையும் படக்குழு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. மேலும், படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜேபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜேசன் சஞ்சய் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள ‘சிக்மா’ படத்திற்கு தமன் எஸ். இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவையும், பிரவீன் கே.எல். படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். பெஞ்சமின் எம். கலை இயக்குநராக பணியாற்றியுள்ள நிலையில், ஹரிஹரசுதன் விஎஃப்எக்ஸ் மேற்பார்வையை மேற்கொண்டுள்ளார்.
ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘சிக்மா’ அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.





