மிழ் சினிமாவில் சமீபகாலமாக கதையின் தனித்துவம், இயல்பான கதாபாத்திரங்கள் மற்றும் வித்தியாசமான களங்களுக்கு ரசிகர்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். இதற்கு சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’, ‘பிளாஸ்ட்’, ‘யூத்’ உள்ளிட்ட திரைப்படங்களின் வரவேற்பு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. ரசிகர்களின் இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு, பல்வேறு விதமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தற்போது குடும்ப உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட ‘மொத ராத்திரி’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் ராஜா கருப்பசாமி இயக்குநராக அறிமுகமாகிறார். ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஒரே நாளில் வெளியாகும் மைத்ரி மூவி மேக்கர்ஸின் இரண்டு திரைப்படங்கள்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிக்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படமும் ஆகஸ்ட் 21 அன்று வெளியாகிறது. அதே நாளில், அந்நிறுவனத்தின் மற்றொரு தமிழ் தயாரிப்பான ‘மொத ராத்திரி’ உலகம் முழுவதும் திரையரங்குகளை சென்றடைகிறது.
படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது,
“தமிழ் ரசிகர்கள் நல்ல கதைகளை எப்போதுமே கொண்டாடுவார்கள். குறிப்பாக, இந்த வருடம் வெளியான ‘தாய் கிழவி’, ‘பிளாஸ்ட்’, ‘யூத்’ போன்ற நல்ல திரைப்படங்களுடன் ரசிகர்கள் தங்களை பொருத்தி கொண்டதால் வரவேற்பைப் பெற்றன. ஒரு தயாரிப்பு நிறுவனமாக, பிரம்மாண்டமான பான் இந்திய வெற்றிப் படங்கள் முதல் குடும்பம், உணர்வுகள் மற்றும் வலுவான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வரை பல்வேறு வகையான சினிமாவை வழங்குவதில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த நம்பிக்கையிலிருந்துதான் ‘மொத ராத்திரி’ திரைப்படம் உருவாகியுள்ளது” என்றனர்.
மேலும் அவர்கள் கூறியதாவது, “‘மொத ராத்திரி’ திரைப்படம் நாளை ரசிகர்களைச் சென்றடைவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ரிஷிகாந்த், அனிஷ்மா மற்றும் படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ராஜா தனது தெளிவான அணுகுமுறை, படைப்பாற்றல் மற்றும் கதை சொல்லும் திறன் ஆகியவற்றால் எங்களை மிகவும் கவர்ந்துள்ளார். கதாபாத்திரங்களை அவர் கையாண்ட விதத்திலிருந்து, படப்பிடிப்புத் தளத்தில் அவர் செயல்பட்ட விதம் வரை, ஒரு அறிமுக இயக்குநருக்குரிய அனுபவத்தைத் தாண்டிய முதிர்ச்சியை வெளிப்படுத்தினார். திட்டமிட்ட காலத்திற்குள் அவர் படத்தை நிறைவு செய்துள்ளார். ஒட்டுமொத்த படக்குழுவினரும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றனர்.





