‘சில்வர் ஜூப்ளி ஸ்டார்’ மோகன் நடிப்பிலும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான ‘ஹரா’ திரைப்படம், சமூக அக்கறை கொண்ட பல கருத்துகளை முன்வைத்த படைப்பாக கவனம் பெற்றது. குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திரைப்படத்தின் மூலம் படக்குழு வலியுறுத்தியிருந்தது.
இந்தக் கோரிக்கையை முன்னிட்டு, கர்நாடகா மற்றும் கேரளா மாநில அரசுகள் மாதவிடாய் கால விடுமுறை தொடர்பான நடைமுறைகளை அறிவித்தபோது, அந்த மாநில அரசுகளுக்கு ‘ஹரா’ படக்குழு தனது நன்றியைத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்திலும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை விரைவாக நடைமுறைக்கு கொண்டு வருமாறு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜயை படக்குழுவினர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர். பெண்களின் உடல்நலம் மற்றும் பணியிட நலனுக்கு இத்தகைய முயற்சி முக்கியமான முன்னேற்றமாக இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, பள்ளி நிலையிலிருந்தே மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த அடிப்படை அறிவை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்பதையும் ‘ஹரா’ படக்குழு வலியுறுத்தியுள்ளது. சமூகப் பொறுப்புணர்வும், ஜனநாயக விழிப்புணர்வும் இளம் தலைமுறையினரிடம் வளர இது உதவும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த முக்கியமான சமூக நல முயற்சிக்கு முன்னுரிமை அளித்த தமிழக அரசுக்கும், இதுகுறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்த செய்தி மற்றும் விளம்பரத் துறையினருக்கும் ‘ஹரா’ திரைப்படக் குழு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.





