லாப நோக்கமற்ற உலகின் முதல் OTT தளம் “யுவர்பேக்கர்ஸ் பிளே” அறிமுகம்!

சமூக சேவையையும் பொழுதுபோக்கையும் ஒருங்கிணைக்கும் வகையில், யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் சார்பில் ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ என்ற புதிய OTT தளம் தொடங்கப்பட்டுள்ளது. உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT தளமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இது, பார்வையாளர்களுக்கு திரைப்படங்களை இலவசமாக வழங்குவதுடன், அவர்களின் விருப்பத்தின் பேரில் வழங்கப்படும் பங்களிப்புகளை சமூக நலப் பணிகளுக்காக பயன்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகிறது.

யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் கடந்த ஆறு ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறது. புதுச்சேரியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், கடல் தூய்மைப் பணிகள் மற்றும் பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் இந்த அமைப்பு, தற்போது சினிமா துறையிலும் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.

‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ OTT தளத்தின் தொடக்க விழா சென்னையில் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் ‘மனிதம்’, ‘வி3’, ‘கோட்டா’, ‘மெல்லிசை’, ‘தாவுத்’, ‘ஓ பட்டர்ஃபிளை’ உள்ளிட்ட திரைப்படங்களின் டிரெய்லர்கள் திரையிடப்பட்டன.

இந்த நிகழ்வில் யுவர்பேக்கர்ஸ் ஓடிடி நிறுவனர் கிஷோர் ஆதித்யா பேசும்போது,

“இந்த விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த யுவர்பேக்கர்ஸ் பவுண்டேஷன் துவக்கி 6 ஆண்டுகள் ஆகிறது. பாண்டிச்சேரியில் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டோம். கடலுக்குள் சென்று கடலுக்குள் இருக்கும் பிளாஸ்டிக்கை கிளீன் செய்து கின்னஸ் சாதனை படைத்தோம். மாண்புமிகு இந்திய பிரதமர் மோடி அவர்கள் கூட எங்கள் சேவையை குறித்து பாராட்டினார். பெண்கள் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து உழைத்து வருகிறோம்.

சினிமாவை பொறுத்தவரை விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தை நாங்கள் வட ஆற்காடு, தென் ஆற்காடு ஏரியாவில் வினியோகம் செய்தோம். தொடர்ந்து இன்ஃபினிட்டி, கழுமரம் போன்ற படங்களையும், அதனைத் தொடர்ந்து மனிதம் படத்தையும் தயாரித்தோம்.

ஓடிடியிலும் மக்கள் பெரிய படங்களையே பார்க்க விரும்புகிறார்கள், முன் வருகிறார்கள். இந்த நிலையில் எங்கள் ஓடிடியின் மூலம் சின்ன படங்களை பார்க்க வைக்க ஒரு முயற்சி எடுத்திருக்கிறோம். இதில் சப்ஸ்க்ரிப்ஷன் கட்டணம் கிடையாது. இலவசமாக படத்தை பார்க்கலாம். இம்பாக்ட் டிக்கெட் என்ற ஆப்ஷன் உண்டு, அதில் பயனர்கள் விரும்பும் தொகையை அளிக்கலாம். அந்த தொகையிலும் பெரும்பகுதி சமூக சேவைக்கு தான் செல்கிறது. மீதம் உள்ள ஒரு பங்கு திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும். இந்த ஓடிடியில் இன்னொரு SOS சிறப்பு அம்சமும் உண்டு. இது பெரும்பாலும் இரவு நேரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களையும் தடுக்கும் ஒரு முயற்சி. மேலும் AI மூலம் திரைப்படங்களையும் உருவாக்க இருக்கிறோம். இது அடுத்த கட்டமாக செயல்பாட்டுக்கு வரும்.

அவுட் ரைட் முறையிலும், ஷேர் முறையிலும் படத்தை வாங்கி இந்த ஓடிடியில் வெளியிட இருக்கிறோம். இந்த ஓடிடியின் வளர்ச்சி பல சிறிய படங்களுக்கு நிரந்தர வருமானத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். நாம் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. எதையும் எதிர்பாராமல் நம் கடமையை செய்து வந்தால் நாம் எதிர்பாராத நல்லது நமக்கு நடக்கும். ஆதரவு கொடுங்கள். நன்றி” என்றார்.

FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது,

“ஓடிடியும் ஒரு தியேட்டர் தான். ஆரம்பத்தில் சினிமாவுக்கு பலம் சேர்க்கும் ஒரு கருவி போல ஓடிடி வந்தது. இப்போது ஓடிடி சினிமாவை கட்டுப்படுத்தும் நிலைக்கு வந்து விட்டது. முன்பு போட்டி போட்டுக் கொண்டு படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனங்கள் இப்போது படம் வாங்குவதை நிறுத்தி விட்டார்கள். மேலும் அவர்கள் தான் ரிலீஸ் தேதியையே முடிவு செய்கிறார்கள். இப்போது தமிழ் சினிமாவில் எந்த ஒரு ஹீரோவும் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய முடியாது. அப்படி ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா இருக்கிறது.

தமிழில் ஒரு ஓடிடி நிறுவனம் துவங்கியது மகிழ்ச்சி. இந்த விழாவுக்கு நான் வருவதற்கு ஒரு முக்கியமான சுய நல காரணமும் உண்டு. இந்த லாபத்தில் 20% தொழிலாளர்களுக்கு தரப் போகிறேன் என கிஷோர் உறுதி அளித்திருக்கிறார். நல்ல தரமான படங்களை வாங்கி ரசிகர்களுக்கு தாருங்கள். அப்போது தான் நிறைய ரசிகர்கள் உங்களை நம்பி வருவார்கள்.

ஒரு திரைப்படம் வெற்றி அடையலாம் அல்லது தோல்வி அடையலாம். ஆனால் தற்போது நிறைய குப்பையான படங்கள் வெளி வருகின்றன. அப்படி இருக்கும் சூழலில் நல்ல படங்களை மட்டுமே வாங்கி வெளியிடுங்கள். தமிழ் சினிமாவில் சுமார் 1000 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கின்றன. அதில் நிச்சயம் ஒரு 200 நல்ல படங்களாவது இருக்கும். அதை வாங்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்றார்.

நடிகர் எஸ்.வீ.சேகர் பேசும்போது,

“வழக்கமாக சில விழாக்களில் சம்பந்தம் இல்லாதவர்கள் வந்து சம்பந்தம் இல்லாதவற்றை பேசி அது பேசுபொருளாகி விடுகிறது. விழாவின் நோக்கம் மறைந்து விடுகிறது. அப்படி இல்லாமல் இந்த விழாவுக்கு சம்பந்தப்பட்டதை மட்டும் பேசுகிறேன். 6 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இந்த ஃபவுண்டேஷன் தறபோது லாப நோக்கமற்ற ஓடிடி தளத்தை துவக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த ஓடிடியில் கஜானா என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். வெள்ளை அறிக்கையும் விடுகிறார்கள். பணம் போடுபவர்களுக்கு திரும்ப பணம் வந்தால் தான் அது பிஸினஸ். உலகில் எதுவுமே இலவசம் கிடையாது. நல்ல தொழிலாகவும் இது அமைய வேண்டும். நீங்கள் இலவசமாக தருகிறீர்கள் என்பதாலேயே மக்கள் உங்கள் கண்டெண்டை பார்க்க மாட்டார்கள். தரம் மிகவும் முக்கியம், அதற்கேற்ப நல்ல நல்ல கண்டெண்டை பார்த்து வாங்குங்கள். ஓடிடி என்றாலே ஒரு சில முன்னணி நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சி வருகிறது. அதை தாண்டி ஜெயிக்க வேண்டும். நல்ல அனுபவசாலிகளின் ஆலோசனைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மக்களின் ரசனைகளை புரிந்து கொண்டு படங்களை எடுங்கள். நீங்கள் செய்யும் சேவையே உங்களை காப்பாற்றும்” என்றார்.

நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது,

“ஓடிடி என்றாலே பண முதலைகளின் கோட்டை. உலகில் எங்கு சென்றாலும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் இருக்கிறது. தமிழ் நாட்டில் ஒரு ஓடிடி வேண்டுமென்றால் அதற்கு அரசு தான் ஏதாவது முன்னெடுப்பு எடுக்க வேண்டும். இதுவரை அப்படி ஒரு முயற்சி எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. நெட்ஃபிளிக்ஸில், அமேசானில் லட்சக்கணக்கான படங்கள் இருக்கின்றன. அனாலும் அதில் எல்லாவற்றையும் நாம் பார்ப்பதில்லை, தேர்வு செய்து தான் பார்க்கிறோம். அது போல தான் மக்களும் தேர்வு செய்து தான் படங்களை பார்ப்பார்கள். அதனால் புதுப்புது கண்டெண்டை கொடுக்க முயற்சி செய்யுங்கள். இளைஞர்களின் கற்பனைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களை நல்ல உயரத்துக்கு எடுத்துச் செல்லும்” என்றார்.

நடிகர் மைம் கோபி பேசும்போது,

“நான் நடிப்பு சொல்லிக் கொடுக்க தான் கிஷோர் சாரிடம் வந்தேன். அவர் நல்ல விஷயங்களை மட்டுமே பேசுவார். அவர் ஒரு கடும் உழைப்பாளி. எப்போது தூங்குவார் என்பது கூட தெரியவில்லை. திடீரென ஒரு நாள் அவருக்கு நடிக்க வந்த வாய்ப்பை தூக்கி எனக்கு கொடுத்தார். அந்த படத்தில் தான் நான் நடிக்கிறேன். எங்கோ எவரோ ஆரம்பித்த விஷயத்தை நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். முதல் அடியை நாம் என்று எடுத்து வைக்கிறோமோ அன்று தான் சாதனை ஆகிறது. நல்ல ஒரு முயற்சியை முன்னெடுத்திருக்கிறார். அவருக்கு எல்லோரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் மதியழகன் பேசும்போது,

“பணம் சம்பாதிக்க தான் எல்லோரும் சினிமாவுக்கு வருகிறோம். ஆனால் அப்படி பணம் சம்பாதித்து சேர்த்து வைக்காமல் லாப நோக்கமற்ற ஒரு சேவையை செய்ய முன்வந்திருக்கும் கிஷோர் சாருக்கு வாழ்த்துக்கள். இன்றைய சூழலில் தமிழ் சினிமாவுக்கு மிக முக்கியமான தேவை. நல்ல நோக்கத்திற்கு நன்றி” என்றார்.

நடிகர் யூகி சேது பேசும்போது,

“ஓடிடி என்பது எனக்கு புரியாத விஷயமாகவே இருக்கிறது. பஞ்ச தந்திரம் தியேட்டரில் சாதாரண வெற்றி தான். ஆனா ஓடிடியில் மிகப்பெரிய வெற்றி என்று சொல்கிறார்கள். ரீல்ஸ் பார்த்து பழக்கப்பட்ட இன்றைய இணைய உலகில் எல்லாமே வேகமாக இருக்க வேண்டும் என கேட்கிறார்கள். சினிமா அழகியலே மாறி விட்டது. 100 மார்க் வாங்கினால் தான் பாஸ் என்ற சூழலும் உருவாகியிருக்கிறது. ஏற்கனவே ஓடிடி படங்களை வாங்குவதில்லை. இதில் 8 வாரங்கள் கழித்து தான் படங்களை வெளியிட வேண்டும் என்ற கண்டிஷனை எல்லாம் நாம் போட முடியாது.

சினிமாவில் வெற்றி சதவீதம் எப்போதுமே 10 முதல் 20% தான் இருந்து வருகிறது. கருத்து சொல்ற படம் என்றால் நீங்களே வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது தான். ஜனரஞ்சகம் என்பது மிக முக்கியம். நல்ல படங்களை கொடுங்கள். சினிமா மட்டும் தான் என்ன ஏது என தெரியாமலே டிக்கெட் வாங்கி பார்ப்பார்கள். சினிமாவில் மட்டும் தான் ரீஃபண்ட் கிடையாது. இந்த ஓடிடி மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும்” என்றார்.

நடிகர் கூல் சுரேஷ் பேசும்போது,

“ஒரே தட்டில் சாப்பிட்டோம் என சொல்வார்கள், ஆனால் நானும் கிஷோர் சாரும் உண்மையிலேயே ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் தான். கிஷோர் சார் எவ்வளவோ பேருக்கு உதவிகளை செய்து வருபவர். அவரை ஒரு ஆண் அன்னை தெரஸா என்று கூட சொல்லலாம். அவர் ஆரம்பித்திருக்கும் இந்த ஓடிடி நிறுவனம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக ஆதரவற்ற மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

யுவர்பேக்கர்ஸ் CEO ஜான் ஜூலியஸ், இயக்குநர் புருனோ, தயாரிப்பாளர் ஜேகே சரவணன், ஜேகே சதிஷ், ஸ்டார் ஹோம்ஸ் செல்வக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

சிறிய படைப்புகளுக்கு புதிய வெளியீட்டு வாய்ப்பு, பார்வையாளர்களுக்கு இலவச திரைப்பட அனுபவம், சமூக சேவைக்கு நேரடி பங்களிப்பு என பல்வேறு அம்சங்களுடன் தொடங்கப்பட்டுள்ள ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’, தமிழ் OTT துறையில் புதிய பாதையை உருவாக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.