Tam’s Consultancy நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தமிழ்வாணன் தயாரித்து, முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள புதிய திரைப்படத்தை, ‘போங்கு’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தாஜ் இயக்கி வருகிறார். தற்போது ‘Production No: 2’ என்ற தற்காலிக தலைப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம், சமூக அக்கறை மிக்க கதைக்களத்தை மையமாகக் கொண்டுள்ளது.
ஏலகிரி மலையை வாழ்விடமாகக் கொண்ட பழங்குடியின மக்களின் வாழ்க்கை, அவர்களின் பண்பாடு, சமூக நிலை மற்றும் அவர்கள் சந்தித்து வரும் சவால்களை உண்மைத் தன்மையுடன் பதிவு செய்யும் முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது. குறிப்பாக, அந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், அவர்களின் வாழ்வியலையும் எந்தவித சமரசமும் இன்றி திரையில் கொண்டு வர படக்குழு முயன்றுள்ளது.
மேலும், பொதுவுடைமை சிந்தனைகள் அந்த மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம், அவர்களின் பார்வையில் இருந்து உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
திரைக்கதை 2010-ஆம் ஆண்டு காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டிருந்தாலும், அதன் கருத்து இன்றைய சமூக சூழலுக்கும் பொருந்தக்கூடியதாக அமைந்துள்ளது. குறிப்பாக, கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் திறமை இருந்தும், சமூக மற்றும் அரசியல் காரணங்களால் அங்கீகாரம் மறுக்கப்படும் பின்தங்கிய மக்களின் நிலையை இந்த திரைப்படம் பிரதிபலிக்கிறது. இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் நிலவும் இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி தொடர்பான விவாதங்களையும் படம் மறைமுகமாகத் தொடுகிறது.
திறமையால் முன்னேற முயலும் மக்களின் கனவுகள் அதிகார அமைப்புகளால் எவ்வாறு தடுக்கப்படுகின்றன, அந்த தடைகளை மீறி வெற்றி பெற்ற பிறகும் அவர்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றம் ஏற்படுகிறதா என்ற கேள்விகளுக்கு பதில் தேடும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று பெருமை பேசப்படும் நாட்டில், இன்னும் பல்வேறு வடிவங்களில் மறைந்திருக்கும் ஒடுக்குமுறைகளையும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய இந்தப் படைப்பு, சிந்திக்க வைக்கும் திரைப்படமாக ரசிகர்களை சென்றடையும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.





