நெட்ஃப்ளிக்ஸ் தனது முதல் தெலுங்கு ஒரிஜினல் நகைச்சுவைத் தொடரான ‘சூப்பர் சுப்பு’-வின் டிரெய்லரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இயக்குநர் மாலிக் ராம் இயக்கியுள்ள இந்த தொடரில் சந்தீப் கிஷன், மிதிலா பால்கர் மற்றும் முரளி சர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த தொடர், ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் பிரத்யேகமாக வெளியாகவுள்ளது.
கதைப்படி, சுப்பிரமணியம் என்ற இளைஞர் ஆசிரியர், யாரும் செல்ல விரும்பாத ‘மாகிபூர்’ என்ற கற்பனை கிராமத்திற்கு பணியமர்த்தப்படுகிறார். குடும்பத்தின் மரியாதையை காப்பாற்றும் நோக்கில் அங்கு செல்லும் சுப்புவுக்கு, கிராம மக்களுக்கு பாலியல் கல்வி கற்பிக்கும் சவாலான பொறுப்பு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கேள்வியும் விவாதமாக மாறும் சூழலில், நகைச்சுவை, தவறான புரிதல்கள் மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் மூலம் சுப்பு சந்திக்கும் அனுபவங்களே தொடரின் மையக்கருவாக அமைகின்றன.
சுப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தீப் கிஷன், “மக்கள் பேசத் தயங்கும் விஷயங்களை நகைச்சுவையுடனும் மனிதநேயத்துடனும் அணுகும் தொடர்தான் ‘சூப்பர் சுப்பு’. நல்லதைச் செய்ய முயற்சிக்கும் ஒருவன் எப்படிப் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்கிறான் என்பதைக் கலகலப்பாகச் சொல்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை மிதிலா பால்கர், “நகைச்சுவை, மனித உறவுகள் மற்றும் சமூக உணர்வுகளை அழகாக இணைக்கும் கதை இது. மாலிக் ராம் உருவாக்கிய உலகமும் கதாபாத்திரங்களும் பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்கும்,” என்று கூறியுள்ளார்.
முரளி சர்மா, “சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சமூகத்தில் பேசப்படாமல் இருக்கும் விஷயங்களை இயல்பாக பேச வைக்கும் முயற்சிதான் ‘சூப்பர் சுப்பு’. குடும்ப உறவுகள், சமூக பார்வைகள் மற்றும் நகைச்சுவை அனைத்தும் இதில் அழகாக கலந்துள்ளன,” என தெரிவித்துள்ளார்.
மாலிக் ராம், ரமேஷ் எலிகெட்டி மற்றும் ஷிவானி தோபல் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இந்த தொடரை சிலகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கெட் அப் சீனு, மானசா சௌத்ரி, ஜீவன் மற்றும் பிரம்மானந்தம் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் சமூக கருத்துக்களை கலந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘சூப்பர் சுப்பு’, நெட்ஃப்ளிக்ஸின் தெலுங்கு உள்ளடக்கப் பயணத்தில் புதிய அத்தியாயமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 2 முதல் இந்த தொடர் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.





