தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷின் 56வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று சிறப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளன. ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் மற்றும் தமிழரசன் பச்சமுத்து முதன்முறையாக இணைந்துள்ள படம் என்பதால், அறிவிப்பு வெளியானது முதலே இப்படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.
Sithara Entertainments சார்பில் நாக வம்சி, Primark Productions சார்பில் ஹரிதா லிங்கசாமி மற்றும் Srikara Studios சார்பில் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள மாரனாடு கருப்பணசாமி கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, படத்தின் படப்பிடிப்பு பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன. படக்குழுவினர் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு, அப்பகுதி மக்களின் பெரும் வரவேற்புடன் நடைபெற்றது. பூஜையைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு கிடா விருந்து வழங்கப்பட்டு, படக்குழு உற்சாகமாக படப்பிடிப்பு பணிகளை ஆரம்பித்தது.
இந்நிகழ்வினில்
நடிகர் வடிவேலு பேசியதாவது…,
மாரனாடு கருப்பணசாமி கோயில் மிகவும் விசேஷமான ஒரு கோயில். இந்த ஊரில் பிறந்த ஒவ்வொருவருமே கருப்பசாமிதான். இவ்வளவு பெரிய கூட்டத்தையும், மக்களின் அன்பையும் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தனுஷ் சாரின் படத்துக்கான பூஜை இவ்வளவு பெரிய விழாவாக நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவே மாநாடு போல இருக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷ் சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இந்தப் படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. ஏன் இடையில் அவருடன் நடிக்கவில்லை என்று கேட்கலாம். சினிமாவில் சில விஷயங்கள் சரியான நேரத்தில் அமைய வேண்டும். இப்போது இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி.
இந்தப் படம் சாதாரணமான படம் இல்லை. எந்த அரசியல் தாக்கமும் இல்லாத, தனித்துவமான ஒரு படம். இந்தக் கதையை கேட்டபோது மிகவும் பெருமையாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. இது மிகப்பெரிய வெற்றியைப் பெறக்கூடிய படம் என்று நான் நம்புகிறேன். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை; இன்னும் சில நாட்களில் தலைப்பு அறிவிக்கப்படும்.
மதுரை மண்ணில், அதுவும் மாரனாடு கருப்பசாமி கோயிலில் இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுடைய அன்பும் ஆசீர்வாதமும் எங்களுக்கு என்றும் தேவை. இவ்வளவு பெரிய அளவில் வந்து இந்த பூஜையை சிறப்பித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,
வழக்கமாக படங்களின் பூஜையை சென்னையில்தான் நடத்துவார்கள். ஆனால், மாரனாடு கருப்பசாமியின் அருளோடும், உங்கள் அன்புக்கு முன்னாலும் இந்தப் படத்தின் பூஜை நடைபெறுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதற்காக தனுஷ் சார், இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
தமிழரசன் பச்சமுத்து ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர். நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத்தின் மூலம் சிறந்த உணர்வை உருவாக்கக்கூடிய ஒரு இயக்குநராக இருக்கிறார். ‘லப்பர் பந்து’ படத்திலேயே அவருடைய திறமை உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்போது D56 படத்திலும் அவர் பிரமாதமாக பணியாற்றியிருக்கிறார். நம்முடைய மண்ணின் கதையை மிகவும் அழகாக உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தை நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள். இந்தப் படத்தில் வடிவேலு சார், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். மிகச் சிறந்த டீம் ஒன்றை தமிழரசன் பச்சமுத்து சார் உருவாக்கியிருக்கிறார்.
கருப்பசாமியின் அருளோடும், உங்கள் அன்போடும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள். படத்தின் பூஜைக்கே இவ்வளவு பெரிய அளவில், மாநாடு போல வந்து ஆதரவு கொடுத்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றி.”
நடிகர் தனுஷ் பேசியதாவது..,
இந்த பூஜை, இன்று பின்னால் இருக்கும் சாமியையும், முன்னால் இருக்கும் உங்களையும் நம்பித்தான் நடைபெறுகிறது. இன்று நான் அதிகம் பேச விரும்பவில்லை. அனைவரும் இங்கு நடைபெறும் கடா விருந்தில் வயிறார சாப்பிட்டு, பத்திரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
விரைவில் ஓம் படத்தின் ஆடியோ லாஞ்சில் உங்களை மீண்டும் சந்திப்பேன். இங்கு வந்து உங்கள் அன்பையும், ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
56 படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, ப்ரீத்தி முகுந்தன் மற்றும் விஜய்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தனது தனித்துவமான இசையால் இளம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வரும் சாய் அபயங்கர், தனுஷ் படத்திற்கு இசையமைப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
தனுஷின் நடிப்பு, தமிழரசன் பச்சமுத்துவின் மாறுபட்ட கதைக்களம் மற்றும் சாய் அபயங்கரின் இசை என பல்வேறு அம்சங்கள் D56 படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





