“லெனின் பாண்டியன்” டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா. இந்த படத்தில் கங்கை அமரன், ரோஜா செல்வமணி, கணேசன், ஸ்ரீதா ராவ், மரியான், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், வெங்கட், அர்ச்சனா ரவிச்சந்திரன், சரவண சுப்பையா, ஆர். ரவி வெங்கட்ராமன், இளவரசு, சுப்பு பஞ்சு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
விவசாயியான கங்கை அமரன், தனது பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கிறார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளும் வி.ஏ.ஓ அர்ச்சனா, மணல் கொள்ளையில் ஈடுபடும் லாரிகளை ஆதாரங்களுடன் பிடிக்கிறார். இதனால் ஆத்திரமடையும் மணல் கொள்ளை கும்பல், அவரை கொலை செய்கிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கங்கை அமரன் நீதிமன்றத்தை நாடுகிறார். வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதுடன், அவருக்கு ஆயுதம் ஏந்திய காவலர் பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
உயர் அதிகாரிகளால் பெரிதாக கவனிக்கப்படாத காவலரான தர்ஷன், கங்கை அமரனுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் நியமிக்கப்படுகிறார். ஆரம்பத்தில் இதை ஒரு சாதாரண பாதுகாப்புப் பணியாக நினைக்கும் அவர், நாளடைவில் இந்த வழக்கின் பின்னணியில் இருக்கும் ஆபத்தையும், கங்கை அமரனுக்கு எதிரான அச்சுறுத்தலின் தீவிரத்தையும் புரிந்துகொள்கிறார்.
ஒருபுறம் மணல் கொள்ளை கும்பலை சட்டத்தின் முன் நிறுத்த கங்கை அமரன் மேற்கொள்ளும் போராட்டமும், மறுபுறம் அவரை உயிருடன் பாதுகாக்க தர்ஷன் மேற்கொள்ளும் முயற்சிகளும் இணைந்து பயணிப்பதே ‘லெனின் பாண்டியன்’ படத்தின் கதை.
தான் வளர்த்த ஆடு இறந்ததற்கு நியாயம் கேட்டு போராடும் எளிய மனிதராக அறிமுகமாகி, பின்னர் மிகப்பெரிய சமூகப் பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுக்கும் முதியவராக மாறும் கங்கை அமரன், தனது இயல்பான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். அவரது உடல்மொழியும், உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமும் கதையுடன் இயல்பாக பொருந்துகிறது.
கங்கை அமரனின் மனைவியாக நடித்திருக்கும் ரோஜா, தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பதோடு, தனது பங்களிப்பையும் சிறப்பாக செய்திருக்கிறார்.
அறிமுக நாயகன் தர்ஷன் கணேசனுக்கு காவலர் கதாபாத்திரம் பொருத்தமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் தனது பணியை பெரிதாக எடுத்துக்கொள்ளாத காவலராகவும், பின்னர் தனது பொறுப்பை உணர்ந்து கடமையில் தீவிரம் காட்டுபவராகவும் வரும் மாற்றத்தை தனது நடிப்பில் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, கதாபாத்திரத்தின் தன்மையை பார்வையாளர்களுக்கு எளிதாக கடத்தும் வகையில் அவரது நடிப்பு அமைந்துள்ளது.
போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியான், யுகேந்திரன், அர்ச்சனா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கான கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே, கிராமப்புற சூழலை அதன் இயல்பான தன்மை மாறாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார். கிராமத்தின் வாழ்வியலையும், கதையின் பின்னணியையும் அழகாக பதிவு செய்திருப்பதுடன், சண்டைக் காட்சிகளை செயற்கைத்தனம் இல்லாமல் படமாக்கியிருக்கிறார். பதற்றம் நிறைந்த தருணங்களில் கேமரா அமைப்பும் காட்சிகளின் வேகமும் பரபரப்பை அதிகரிக்கின்றன.
இளையராஜாவின் இசை படத்தின் கதையோட்டத்துடன் இணைந்து பயணிக்கிறது. பாடல்கள் கதையின் உணர்வுகளுக்கு பொருத்தமாக அமைந்துள்ளதோடு, பின்னணி இசையும் முக்கியமான காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.
படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன், முதல் பாதியை சுறுசுறுப்பாக நகர்த்தியிருக்கிறார். அதே வேகமும் விறுவிறுப்பும் இரண்டாம் பாதியிலும் தொடர்ந்திருந்தால் படத்தின் தாக்கம் இன்னும் அதிகரித்திருக்கும்.
மணல் கொள்ளைக்கு எதிராக போராடும் ஒரு விவசாயியின் நிலைப்பாட்டையும், தனது கடமையை உணர்ந்து செயல்படும் காவலரின் பொறுப்பையும் மையமாக வைத்து படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டி.டி.பாலச்சந்திரன்.
சமூகத்தில் நடைபெறும் சில உண்மை சம்பவங்களின் தாக்கத்தை கதைக்குள் கொண்டு வந்து, அவற்றை நேரடியான முறையில் காட்சிப்படுத்தியிருப்பது கவனம் ஈர்க்கிறது. குறிப்பாக சாதாரண மனிதன் ஒரு சமூகப் பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுக்கும்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும், நேர்மையான அதிகாரிகளின் செயல்பாடுகளையும் இயக்குநர் பதிவு செய்திருக்கிறார்.
உணர்வுப்பூர்வமான நடிப்பு, சமூக அக்கறை கொண்ட கதை, மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம், காவலரின் கடமை ஆகிய அம்சங்களால் முதல் பாதி வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்கிறது.
ஆனால், இரண்டாம் பாதியில் முதல் பாதியில் இருந்த பரபரப்பும், அழுத்தமான சம்பவங்களும் குறைவதால் படத்தின் வேகம் சற்று தளர்கிறது. இதனால் இறுதிப்பகுதியில் சுவாரஸ்யம் குறைவது படத்தின் முக்கியமான குறையாக உள்ளது.
இருப்பினும், மணல் கொள்ளை போன்ற சமூகப் பிரச்சனையை மையமாக வைத்து, ஒரு சாதாரண மனிதனின் போராட்டத்தையும் காவலரின் கடமை உணர்வையும் பதிவு செய்திருக்கும் இயக்குநரின் சமூகப் பார்வை படத்தின் குறைகளை ஓரளவு கடந்து நிற்கிறது.
சமூகப் பிரச்சனையை அழுத்தமாக பதிவு செய்யும் ‘லெனின் பாண்டியன்’, முதல் பாதியின் விறுவிறுப்பை இரண்டாம் பாதியிலும் தக்க வைத்திருந்தால் இன்னும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும்.





