“டோரதி” திரை விமர்சனம்

“டோரதி” கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜோதி தேஷ்பாண்டே, அச்சின் ஜெயின், குணீத் மோங்கா கபூர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை. இசைஞானி இளையராஜா. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், ஜீவா சுப்பிரமணியன், முத்துக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருக்கும் சனந்த் மற்றும் ரிஷிகாந்த், மதுரையின் மண்ணுக்கே உரிய துணிச்சலுடன் அடி தடி செய்து கொண்டு வாழும் இளைஞர்களாக இருக்கிறார்கள். ஒரு எதிர்பாராத சம்பவம் இருவரையும் பிரிக்கிறது. நண்பனை விட்டு விலகி வேறு மாநிலத்தில் வசித்து வரும் ரிஷிகாந்துக்கு, ஒருநாள் சனந்தை கொலை செய்ய வேண்டும் என்ற அழைப்பு வருகிறது. அதுவும் சனந்தின் தந்தையிடம் இருந்தே அந்த அழைப்பு வருவது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. உயிர் நண்பனையே கொலை செய்ய வேண்டிய சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் ரிஷிகாந்த் என்ன முடிவு எடுக்கிறார்? சனந்தின் குடும்பத்தினரே அவரை கொல்ல நினைப்பதற்கான காரணம் என்ன? நட்புக்கும், குடும்ப கௌரவத்துக்கும், மனித உணர்வுகளுக்கும் இடையே நடக்கும் இந்தப் போராட்டத்தை மதுரை மண் சார்ந்த அதிரடி பின்னணியில் சொல்கிறது ‘டோரதி’.

சனந்த் மற்றும் ரிஷிகாந்த் இருவரும் படத்தின் முக்கிய பலமாக இருக்கிறார்கள். கதாபாத்திரங்களின் தன்மையை வெறும் வசனங்கள் மூலம் வெளிப்படுத்தாமல், உடல்மொழி மற்றும் பார்வை வழியாகவே உணர்வுகளை கடத்தி இருக்கிறார்கள்.

சனந்த் கதாபாத்திரத்தில் ஏற்படும் மாற்றத்தை வெளிப்படையாக காட்ட முடியாமல், அதே நேரத்தில் மனதுக்குள் அதை அடக்கவும் முடியாமல் தவிக்கும் தருணங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக, பெரிய வசனங்கள் இல்லாமல் முகபாவனை மற்றும் உடல் அசைவுகளால் பல உணர்வுகளை கடத்தும் காட்சிகளில் அவரது நடிப்பு குறிப்பிடத்தக்கது.

ரிஷிகாந்த், நண்பனுக்காக எதையும் செய்யத் தயங்காத இளைஞராகவும், அதே நண்பனுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது மனதளவில் தடுமாறும் மனிதராகவும் இரு வேறுபட்ட பரிமாணங்களை வெளிப்படுத்துகிறார். அவரது ஆக்ரோஷமான நடிப்பு மதுரை மண்ணின் குணாதிசயத்தை பிரதிபலிப்பதோடு, முக்கியமான உணர்வுக் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறது.

டோரதி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் குறைவான நேரமே திரையில் தோன்றினாலும், கதையின் போக்கை மாற்றக்கூடிய முக்கியமான பாத்திரமாக நினைவில் நிற்கிறார்.

ராமச்சந்திரன் துரைராஜ், செளந்தராஜன், முத்துக்குமார் ஆகியோர் ஆணாதிக்க மனநிலையையும், கௌரவம் என்ற பெயரில் மனிதத்தன்மையை மறந்து செயல்படும் மனிதர்களையும் தங்களது நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜீவா சுப்பிர்மணியன், கெஜராஜ், ராம்ஸ் உள்ளிட்ட பலரும் குறைவான காட்சிகளில் தோன்றினாலும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தை சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

80-களின் காலகட்டத்தை திரையில் கொண்டு வரும் முக்கிய பொறுப்பை ஒளிப்பதிவாளர் எஸ்.திரு சிறப்பாக கையாண்டிருக்கிறார். கதாபாத்திரங்களின் வாழ்க்கை முறையும், அவர்களைச் சுற்றியுள்ள சூழலும் இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எளிமையான இடங்களையும், சாதாரண மனிதர்களின் வாழ்க்கையையும் காட்சியமைப்பின் மூலம் அழுத்தமானதாக மாற்றியிருக்கிறார்.

இளையராஜாவின் இசை படத்தின் உணர்வுகளோடு நெருக்கமாக பயணிக்கிறது. ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ உள்ளிட்ட பாடல்கள் காட்சிகளோடு இணையும் போது அதன் தாக்கம் அதிகரிக்கிறது. காதல், கோபம், மோதல், சோகம் என ஒவ்வொரு தருணத்திற்கும் பின்னணி இசை தனித்துவமான உணர்வை ஏற்படுத்துகிறது. படத்தின் காலகட்ட உணர்வையும் இசை வலுப்படுத்துகிறது.

படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா, எளிமையான கதையை நேரடியாக சொல்லாமல், ஒவ்வொரு காட்சியிலும் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறார். சிறிய திருப்பங்களைக் கூட சரியான இடத்தில் வைத்து திரைக்கதையின் வேகத்தை தக்க வைத்திருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சரவணன் சந்திரன் இணைந்து உருவாக்கியிருக்கும் கதை, வெளிப்படையாக பேசப்படாத ஒரு சமூகப் பிரச்சினையை மையமாக கொண்டிருக்கிறது. மனிதர்களை அவர்களது தனிப்பட்ட அடையாளங்கள் மற்றும் சமூக பார்வையின் அடிப்படையில் ஒதுக்கும் மனநிலையை கதை கேள்விக்குள்ளாக்குகிறது.

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ், படத்தை ஆரம்பத்தில் வழக்கமான மதுரை பின்னணி கொண்ட கமர்ஷியல் கதையாக நகர்த்துகிறார். ஆனால், ஒரு கட்டத்தில் கதையின் பாதையை மாற்றி, மனித உணர்வுகளுக்குள் அழைத்துச் செல்கிறார். பார்வையாளர்களுக்குள் சில யூகங்களை உருவாக்கிவிட்டு, அவை தவறானவை என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும் திருப்பம் சுவாரஸ்யமாக உள்ளது.

எந்த ஒரு விஷயத்தையும் தேவையில்லாமல் மிகைப்படுத்தாமல், கதாபாத்திரங்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது மனநிலையை இயல்பான காட்சிகளின் மூலம் பதிவு செய்திருப்பது படத்திற்கு பலம்.

படத்தின் பெரும்பாலான பகுதிகள் நட்பு, மனித உறவுகள் மற்றும் சமூகத்தால் உருவாக்கப்படும் அழுத்தம் ஆகியவற்றை மையமாக வைத்து சிறப்பாக நகர்ந்தாலும், கிளைமாக்ஸில் வரும் திடீர் காதல் திருப்பம் மட்டும் கதையோடு முழுமையாக ஒன்றவில்லை.

நட்பை மையமாக வைத்து நீண்ட தூரம் பயணிக்கும் கதையை இறுதியில் காதல் மூலம் முடித்து வைக்க முயற்சித்திருப்பது சற்று செயற்கையாக தெரிகிறது. குறிப்பாக, அந்த காதல் பகுதி இன்னும் இயல்பாக எழுதப்பட்டிருந்தால் கிளைமாக்ஸ் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

வழக்கமான மதுரை பின்னணி கொண்ட அதிரடி கதையாக தொடங்கி, மனித உறவுகள் மற்றும் சமூகப் புறக்கணிப்பு குறித்து பேசும் படைப்பாக மாறுகிறது ‘டோரதி’. சனந்த், ரிஷிகாந்தின் சிறப்பான நடிப்பு, இளையராஜாவின் இசை, எஸ்.திருவின் ஒளிப்பதிவு மற்றும் கார்த்திக் சுப்புராஜின் திரைக்கதை அணுகுமுறை படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

கிளைமாக்ஸில் திணிக்கப்பட்டது போல் தோன்றும் காதல் பகுதியைத் தவிர்த்துப் பார்த்தால், சமூகத்தால் ஓரங்கட்டப்படும் மனிதர்களின் வலியை பேசும் விதத்தில் ‘டோரதி’ ஒரு அழுத்தமான படைப்பாக கவனம் ஈர்க்கிறது.

“டோரதி” படத்திற்கு மதிப்பீடு 3.5/5

அதிரடி பின்னணியில் மனித உணர்வுகளை அழுத்தமாக பேசும் ‘டோரதி’